என் மலர்
புதுச்சேரி
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகம் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) காலை 9 மணி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அவசியம். மாணவர் சேர்க்கைக்கு வருவோர் நீட் தேர்வு எழுதுவதற்கு கொடுத்திருந்த அடையாள அட்டை, நீட் தேர்வு ஹால் டிக்கெட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவரிசை கடிதம், ஆன்லைனில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு கடிதம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கையில் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்பது குறித்து ஜிப்மர் மற்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இணையதளங்களை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவைக்கு தமிழக பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு, பழைய துறைமுக பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் நேற்று ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. இதனால் நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு உள்ளிட்ட அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் முழுவதும் நிரம்பின. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக பார்க்க முடிந்தது. ஓட்டல்கள், துணி கடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சண்டே மார்க்கெட்டில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்கவேண்டும் என, பல்வேறு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் புதுவை அரசை வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து நெல் கொள்முதல் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத புதுவை அரசை கண்டித்து, காரைக்காலில் பிப்.1-ந் தேதி பேரணி நடத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் சிலர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் புதுவை அரசின் வேண்டுகோளின் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், தென்னங்குடி நவீன அரிசி ஆலை ஆகிய 2 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென்னங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், விவ சாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் உழவர் உதவியங்களில் ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நெல் மாதிரியை, கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து காண்பித்து ஏற்றுக் கொள்ளப்பட்டப் பின்னர், நெல்லை கொண்டு வந்து விற்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால்:
காரைக்கால் அரசலாறு, முல்லையாறு கலக்கும் கடற்கரையோரம் மாவட்ட மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு, காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவகிராமத்தைச்சேர்ந்த கலைமணி என்பவருக்கு சொந்தமான சிவரஞ்சனி என்கிற விசைப்படகு, நேற்று அதிகாலை, வழக்கம்போல் ஆழ்கடலில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பியது.
சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, விசைப்படகில் உள்ள மீனை விற்பனை தளத்திற்கு இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக, விசைப்படகு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மீனவர்கள் தீயை அணைக்க முயன்று, முடியாமல், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், விசைப்படகில் எரிந்து கொண்டிருந்த தீயை மற்ற படகிற்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
இருந்த போதிலும் விசைப்படகில் உள்ள இன்ஜின், மீன், வலை மற்றும் மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து மின்கசிவு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






