என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காமராஜர் சாலையில் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய உரிமையாளரை போலீசார் கைது செய்து 6 அழகிகளை மீட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சாரம் காமராஜர் சாலையில் தனியார் அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த அழகு நிலையத்துக்கு இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் அடிக்கடி வந்து சென்றனர்.

    இதனால் அங்கு விபசாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜன் சிறப்பு அதிரடிப்படை போலீசாருடன் சென்று அழகு நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு அறையில் 6 இளம் பெண்கள் தங்கியிருந்தனர். மேலும் அந்த அறையில் காண்டம் இருந்தது. 

    இதையடுத்து அந்த பெண் களிடம் விசாரணை நடத்திய போது அவர்களை அழகு நிலைய உரிமையாளரான வாணரப்பேட்டையை சேர்ந்த ராஜா(வயது28) என்பவர் விபசாரத்தில் ஈடு படுத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 அழகிகளையும் மீட்டு மூலக்குளத்தில் உள்ள காப்பக இல்லத்தில் ஒப்படைத்தனர்.
    கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கனமழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு அரசால் எந்த விதமான உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை. மத்திய அரசிடம் மழை நிவாரணம் பெறுவதற்கான நடவடிக் கையை புதுவை அரசு எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கைகளை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.

    அரும்பார்த்தபுரத்தில் இருந்து புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலத்தை இணைக்கும் ஏரிக்கரை சாலைப்பணி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

    மேலும், ஏரிக்கரை இணைப்பு மேம்பாலமும் மூடப்பட்டு பயனற்று கிடக்கிறது. எனவே உடனடியாக அரசு ஏரிக்கரை சாலையை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

    காமராஜர் மணிமண்டபம், மேரி கட்டிடம் ஆகியவை பிரதமரால் திறந்து வைக்கப்பட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே திறந்த அனைத்து கட்டிடங்களையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    தனியார் மயமாக்குவதற்கு மின்துறையின் சொத்து மதிப்பை வெறும் ரூ.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

    மின்துறை தனியார் மயமானால் ஏழைகள், வியாபாரிகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின்துறை அரசிடமே இருக்க வேண்டும். 

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.
    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையின் போது, பெண்ணை தாக்கிய வாலிபர் மீது, கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் மாலா(55). இவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த மாரியம்மாள்(48) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இது குறித்து, மாரியம்மாள் தனது மகன் பிரசாத்திடம்(29) கூறியுள்ளார். 

    தொடர்ந்து, பிரசாத், நேற்று முன்தினம் மாலை, மாலாவை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, மாலா கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில், வாய்க்காலில் தவறி விழுந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி பலியானாது குறித்து, திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் தலையாரித்தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் கனகராஜ்(வயது37). கூலிவேலை செய்துவரும் இவர், நேற்று முன்தினம் மாலை, அம்பகரத்தூர் கல்லடி வாடிவாய்க்கால் கரை ஓரம் நடந்து சென்றபோது, கால்தவறி வாய்க்காலில் விழுந்துள்ளார். வாய்க்காலில் தண்ணீரில் இருந்ததால், மூச்சுதினறி மயங்கியுள்ளார். 

    இது குறித்து, அப்பகுதியைச்சேர்ந்தகண்ணதாசன், திருநள்லாறு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, கனகராஜை அங்குள்ளோர் உதவியுடன், அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிசென்றனார். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கனகராஜ் கொண்டுச்செல்லப்பட்டார். அங்கு கனகராஜ் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரைக்காலில் 14 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து சில்மி‌ஷம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் நகர்புறத்தில், ராஜ்குமார்(வயது27) என்பவர் தனது அண்ணன் குடும்பத்தோடு ஒன்றாக வசித்து வருகிறார். ராஜ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராஜ்குமார் அண்ணனுக்கு 14 வயதுள்ள மகள் உள்ளார். அண்ணன் மற்றும் அண்ணன் மனைவி வேலைக்கு சென்றபிறகு, ராஜ்குமார், சிறுமியின் கைகளை பிடித்து இழுத்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து, வேலைவிட்டு வந்தவுடன் சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து, பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் செய்தனர். அக்குழுவினர் சிறுமியிடம் நடத்திய விசாரனையின் முடிவில், சம்பவம் உண்மை என தெரியவந்ததையடுத்து, அவர்கள், காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில், போலீசார் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் புதுச்சேரி மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
    புதுவையில் ஒரே நாளில் 855 பேருக்கு கொரோனா ஏற்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி :

    புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேருக்கும், காரைக்காலில் 172 பேர், ஏனாமில் 102 பேரும், மாகியில் 11 பேர் என  மொத்தம் 855 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    மாநிலத்தில் தற்போது 12,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28-ந் தேதி 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,923 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் மாநிலத்தில் இதுவரை 1,45,359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    இந்த தகவலை புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி முதல் தவணை 9,20,377 பேரும், 2-ம் தவணை 6,04,157 பேரும் செலுத்தியுள்ளனர்.பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 7,061 பேர் செலுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக 15 லட்சத்து 31 ஆயிரத்து 595  பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
    மவுனமாக இருந்தால் சாதிக்க முடியாது மின்துறை தனியார் மயமாகாது என ரங்கசாமி அறிவிக்க வேண்டும் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்தியில் ஆளும்  பா.ஜனதா அரசு புதுவை மின்துறையை தனியார் மயமாக்க  முயற்சித்து வருகிறது. தனியார் மயமானால் சேவை நோக்கு என்பது லாப நோக்காக மாறிவிடும். 

    மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் வரு கிறது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுத்துவிட முடியாது. 

    அதனால் தற்போதைய மத்திய அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மாநில அரசு மவுனமாக இருப்பதால் சம்மதம் தெரிவித்து விட்டதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

    மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையும் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. 

    அதுபோல் தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரி மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில்  சமூக தீர்வை கொண்டுவர 31-ந் தேதி சமரச நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். 

    எனவே மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

    மின்துறை தனியார் மயமாக்கம் என்பது புதுவையின் சுய கவுரவம், தன்மானத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை  ஆளும் அரசு உணர வேண்டும்.  புதுவை அரசு மின்துறை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அமைதியாகவே எடுத்து சாதித்துவிடலாம் என்று நினைத்து விடக் கூடாது. 

    அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் உன்னிப்பாக  கவனித்து கொண்டுதான் உள்ளனர். எனவே மின்துறை தனியார் மயமாக்கப் படாது என்று வெளிப்படையாக முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும். 

    அவ்வாறு இல்லாமல் மவுனமாகவே இருந்து சாதித்துவிடலாம் என்று நினைத்து செயல்பட்டால் நிச்சயம் முடிவை அறிவிக்கும் போது மக்கள் மத்தியில்  பூகம்பம் வெடிக்கும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
    பட்டியலின-பழங்குடி மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணமே அரசு வழங்குகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
    புதுச்சேரி :

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் புதுவை யூனியன் பிரதேசத்தில், பட்டியலின மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும், கல்வி கட்டணங்களை முழுமையாக, ஆரம்ப கல்வியில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி வரை ஏற்றுக் கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. 

    இந்த திட்டத்தினை செப்டம்பர் 2021-ல் தொடங்கிய போது ரூ. 1 கோடிக்கான ஆணையை கல்வி நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினர்.

    இதில் இப்போது 50 சதவீத கட்டணம் மட்டுமே கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

    எனவே, அந்த கல்வி நிறுவனங்கள் மீதி 50 சதவீத கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிக்கிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டணங்களையே அந்த பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

    ஆனால், இப்போது பள்ளி நிறுவனங்கள், தங்கள் கட்டணங்களை உயர்த்தி இருக்கின்றனர். 

    கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். தேர்வு எழுத அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.

    தற்போதுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு தான்  பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். 

    எனவே பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் கல்வி திட்டத்தின் பலன்களை சரிவர கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    தனியார் மயமாக்குவதால் புதுவையில் மின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்படும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி :

    யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி யூனியன் பிரதேசமான புதுவையில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்க பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    இதற்கு மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். 

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இதனிடையே தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 

    புதிய ஆட்சியில் மின்துறை தனியார் மயமாக்க பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச் சரவை கூட்டத்தில் மின் துறையை தனியார் மயமாக்
    குவது குறித்து விவாதிக்கப் பட்டது. இதில் ஊழியர்களிடம் கருத்து கேட்பது என முடிவு செய்யப்பட்டது. 

    ஆனால் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை தனியார் 
    மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் புறக்கணித்தனர். இதனிடையே மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு  அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தொழிற் சங்கத்தினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர். 

    ஊழியர்கள் போராட்டத்தை தவிர்க்கும் வகையில் தொழில்தகராறு சட்டத்தின் கீழ் மின்துறையை பொது பயன்பாட்டு சேவையாக கவர்னர் அறிவித்துள்ளார். போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை செயலர் எச்சரிக்கை விடுத் துள்ளார். 

    இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை மூலம் வருகிற 31-ந் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கும் போராட்டக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

    மேலும் மின்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  மின்துறையை தனியார் மயமாக்கினால் கட்டணம் உயரும் என்பதால் பொதுமக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வேண்டுகோளும் வைத் துள்ளனர். 

    இதனிடையே அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு  எதிராக அண்ணாசாலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. சேது செல்வம் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யூ.சி. ஞானசேகரன், சி.ஐ.டி.யூ. சீனுவாசன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., எம்.எல்.எப்., விடுதலை சிறுத்தைகள், அரசு ஊழியர் சம்மேளனம், ஏ.ஐ.சி.சி.டி.யூ., இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், அறிவியல் மன்றம் ஆகியவற்றின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    கைதிகளிடம் செல்போன் நடமாட்டம் குறித்து புதுவை சிறைசாலையில் ஜாமர் கருவி ஆய்வு செய்ய அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி :

    புதுவையில் நடைபெறும் பல குற்ற சம்பவங்களுக்கு மைய புள்ளியாக காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் திகழ்கிறார்கள்.

    மத்திய சிறைச்சாலையில் உள்ள  சில தாதா கைதிகள் தங்களின் ஆதரவாளர்கள் மூலம் புதுவையில் ஆள் கடத்தல், மிரட்டல், மாமூல் வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் உத்தரவுப்படி புதுவையில் ரவுடிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சிறை கைதிகளின் அட்டகாசம் அதிகரிக்கும்போது அதை ஒடுக்க அரசு நடவ டிக்கை எடுக்கும். அப்போது அமைதியாக இருந்து விட்டு அடுத்த சுற்றுக்கு கைதிகள் தயாராகிவிடுவர். 

    சிறையில் உள்ள கைதிகளின் வெளியுலக தொடர்புக்கு செல்போன் முக்கிய காரணியாக உள்ளது. 

    செல்போன் சிறைக்குள் செல்வதை தடுக்க முடியாததால் அரசு ஒரு கட்டத்தில் ஜாமர் கருவியை பொருத்தியது. 

    இந்த ஜாமர் கருவியால் சிறையை சுற்றியுள்ள கிராமப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் வழக்கம் போல வெளியே உள்ள தங்கள் ஆதரவு ரவுடிகளோடு விலை உயர்ந்த செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். 

    சமீபத்தில் வாணரப்பேட்டையில் நடந்த  பாம்ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி இரட்டை கொலை சிறையில் இருந்து வந்த உத்தரவின்பேரில் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இப்போதும் தங்கு  தடையின்றி சிறைக்குள் செல்போன்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. 

    சமீபத்தில் சிறையில் நடந்த குடியரசு தின விழா மேடையை அப்புறப்படுத்த வேன் சென்றது. அந்த வேனில் செல்போன்,  கஞ்சா, பீடிக்கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டு டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    எந்த கைதிக்காக அனுப்பப்பட்டது என விசாரித்து அவரின் அறையில் சோதித்த போது அங்கிருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    சிறைசாலையில் எவ்வளவு சோதனைகள், தடைகள் விதித்தாலும் செல்போன் நடமாட்டத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட வில்லை. இதற்கு சிறை அதிகாரிகள் ஆதரவு கைதிகளுக்கு இருப்பதே காரணமாக உள்ளது. இதனால் கைதிகளோடு தொடர்புடைய வார்டன்கள், ஊழியர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    கைதிகளுக்கு உதவும் வார்டன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.  

    மேலும் அவர் கூறும்போது, சிறையில் உள்ள ஜாமர் கருவியை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். குற்றசெயல்களில் ஈடுபடு வோருடன் தொடர்பில் உள்ள ஜெயில் ஊழியர்களை  ஆதாரத்துடன் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் பிடிபட்டால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
    வருவாய்துறை மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை சிறுபான்மை மக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
    புதுச்சேரி :

    புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, நாக.தியாகராஜன்   ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    புதுவை அரசின் வருவாய் துறை மூலம் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்து அது தற்போது நடைமுறையில் இருக்கிறது.
    இந்த   அறிவிப்பின் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகிறார்கள். இது வரவேற்புக்குரியது. மேலும் பாராட்டுக்குரியது.

    அதுபோல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    இதனை ஏற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி உடனடியாக வருவாய்துறை சிறப்பு செயலாளரும், மாவட்ட கலெக்டருமான வல்லவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாரிசு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்த வர்களும் பயன்பெறும் வகையில் செய்திட உத்தரவு பிறப்பித்தார்.
    தகராறை தட்டிக்கேட்ட மாணவனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு டி.ஆர். நகர் கருணாகரபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுகாசினி. இவர் கணவரை விட்டு பிரிந்து தனது மகன் கவுதம் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 

    கவுதம் சாரம் எஸ்.ஆர்.எஸ். சுப்பிரமணியம் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இதற்கிடையே கவுதமின் நண்பரான மதி என்பவரிடம் நெல்லித்தோப்பு கோவிந்த நாயக்கர் தெருவை சேர்ந்த அன்புமணி (வயது 19) என்பவர் தகராறு செய்து திட்டியதாக கூறப்படுகிறது.  இதனை மதி தனது நண்பர் கவுதமிடம் முறையிட்டார். 

    இதையடுத்து கவுதம்  அன்புமணியிடம் சென்று இது தொடர்பாக தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. 

    அப்போது ஆத்திரம் அடைந்த அன்புமணி மறைத்து   வைத்திருந்த கத்தியை எடுத்து கவுதமின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக   குத்தினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அன்புமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

    இதில் பலத்த காயம் அடைந்த   கவுதமனை அப்பகுதியை சேர்ந்த அருண் மற்றும் சிலர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவுதமுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது தாய் சுகாசினி கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புமணியை கைது செய்தனர்.
    ×