என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வாடகை இடங்களில் இயங்கி வரும் ரேசன் கடைகளுக்கு, அங்கன்வாடி சமூதாயகூடத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என கவர்னரிடம் தமிழர் களம் மாநில செயலாளர் அழகர் மனு அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழர் களம் மாநில செயலாளர் அழகர் 
    கவர்னருக்கு அனுப்பியுள்ள  மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆட்சியில் மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில் மட்டும் ரேசன் கடைகள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டது. 

    இந்த நிலையில் புதிய ஆட்சியில் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரையை ரேசன் கடைகள் மூலம் வழங்க போவதாக முதல்-அமைச்சர் அறிவித்தார்.

    ரேசன் கடைகளை திறக்க ஊழியர்கள் முனைப்புடன் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் வாடகை பாக்கி காரணமாக கடை திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனாலும் கடை ஊழியர்களே கட்டிட உரிமையாளர்களிடம் கெஞ்சி கூத்தாடி கிடைத்த இடத்தில் தீபாவளி இலவச பொருட்களை வழங்கினர்.

    நிரந்தரமின்றி   வாடகையில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு அரசுக்கு சொந்தமான அங்கன்வாடி , சமுதாயநலக்கூடம் போன்ற இடங்களில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். 

    மேலும் எதிர்வரும் காலங்களில் அனைத்து ரேசன் கடைகளும் அரசுக்கு சொந்தமான இடத்தில் போதுமான இடவசதியுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அழகர் மனுவில் கூறியுள்ளார்.
    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் உள்ஒதுக்கீடு வழங்க சட்டசபையை கூட்ட வேண்டும் என அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக கவர்னர் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கையினால் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் பிரதமரால் ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டது சாதனை என்றும் அனைத்து மாநிலத்திற்கும் எடுத்துக்காட்டாக மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அதற்கான சட்டத் தையும் கொண்டு வந்து முந்தைய அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியதையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். 

    இதற்காக தமிழக கவர்னருக்கு  புதுவை அ.தி.மு.க.  சார்பில்  நன்றி யையும் பாராட்டு தலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் போன்று புதுவையில் உள்ஒதுக்கீடு வழங்கினால் அரசு பள்ளியில் பயிலும் 26 மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்புகள் கிடைக்கும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-அமைச்சர்   ரங்கசாமி உண்மை நிலையை உணர்ந்து தமிழக உள் ஒதுக்கீடு சட்டத்தை பின்பற்றி புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    அதற்கான சட்டத்தை கொண்டு வர சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி  முதல்&அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.
    லேப்டாப்-கம்யூட்டர், செல்போனை வாங்கி சென்ற எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆசி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்வான 30 எம்.எல்.ஏ.க்களும், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் என 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    புதுவை சட்டப்பேரவையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவ லகங்கள் இயங்கி வருகிறது. 

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப், கம்யூட்டர், செல்போன், போட்டோ காப்பியர், பிரிண்டர், மேஜை, நாற்காலி, சோபா செட், அலமாரி மற்றும்  உதவியாளர் அமர மேஜை மற்றும் நாற்காலி மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போன்ற உபகரணங்கள் ரூ.2½ கோடி செலவில் சட்டமன்ற செயலகத்தால் வாங்கப்பட்டது‌.  அவைகளை எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது.  முதல்-அமைச்சர் ரங்கசாமி சபாநாயகர்  ஏம்பலம் செல்வம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர்   ராஜவேலு, அரசு கொறடா  ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள்  நாஜிம்,  கல்யாணசுந்தரம், விவிலியன் ரிச்சர்ட்ஸ்,  நாக.தியாகராஜன் ஆகியோர் இந்த பொருட்களை பெற்றனர்.

    மின்சாதன பொருட்களை பெறும் முன்பு எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஆசி பெற்று பொருட்களை வாங்கி சென்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமியும் எம்.எல்.ஏ.க்கள் தலையில் கை வைத்து ஆசி வழங்கி அனுப்பினார்.
    புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை அரசில் ஆசிரியர் பணிக்கு மத்திய அரசு நடத்தும் சிடெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கல்வித்துறை கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத்திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி வெற்றிபெற்ற புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்களுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஆசிரியர்கள் தேர்வு என்பது போட்டி எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    புதுவையில் பள்ளிகளை திறக்க பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் முருகன் கோவிலில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. இதற்கு நான் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் இணைந்து பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுத்து சூழ்நிலைகளை சமாளிக்கும் முன் உதாரணத்தை காட்டியுள்ளோம்.

    எங்களது நடவடிக்கைகளை நிறைய பேர் விமர்சித்தார்கள். ஆனாலும் மிகவும் கவனமுடன் முடிவுகளை எடுத்ததால் நிலைமைகளை சமாளித்துள்ளோம். இன்னும் 4-வது அலைகூட வரலாம். இந்த முறை அதிக பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. இதற்கு தடுப்பூசிதான் காரணம்.

    பல நாடுகளில் தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நமது நாட்டில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான சொட்டு மருந்தும் தயாராகி வருகிறது.

    புதுவையை சேர்ந்த தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இப்போது சிபாரிசு இல்லாமல் எளியவர்களுக்கும் விருதுகள் கிடைக்கிறது.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு விதமான கல்வி திட்டம்தான் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பான நிலைதான் உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பது நல்லது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துபேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களே என்பது தெரியவந்துள்ளது. ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் இணை நோய் காரணமாக உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தான் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    தடுப்பூசி போட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனாவுக்கு பலியாகி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்களே என்பது தெரியவந்துள்ளது.

    ஒரு சிலர் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருந்தாலும் அவர்கள் இணை நோய் காரணமாக உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தேவையாக உள்ளது.
    பா. ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

    கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டின்போது பா.ம.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.  இதனால் பா.ம.க. கூட்டணியில் நீடித்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி ரங்கசாமி தலைமையில் அமைந்தது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 

    ஆட்சி அமைந்தபிறகு பா.ம.க.வினர் உடன்படிக்கையின்படி வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. இதனால் புதுவையிலும் என்.ஆர்.காங்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. கட்சி தலைமையின் ஒப்புதலோடு அ.தி.மு.க.வை சேர்ந்த 6 பேருக்கு வாரிய தலைவர் பதவி வழங்க கோரி கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி, பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கடிதம் அளித்தனர். 

    சட்டமன்ற பதவிகளில் என்.ஆர்.காங்கிரசில் முதல்- அமைச்சர், 3 அமைச்சர்கள், துணைசபாநாயகர், அரசு கொறடா என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜனதா தரப்பில் சபாநாயகர், 2 அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். 

    என்.ஆர்.காங்கிரசில் வெற்றி பெற்ற 10 எம்.எல்.ஏ.க்களில் திருமுருகன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகிய 3 பேருக்கு பதவிகள் இல்லை. பா.ஜனதாவில் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்டு ஆகியோருக்கு பதவிகள் இல்லை. பா.ஜனதாவை ஆதரிக்கும் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மே 7-ந்தேதி ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவியேற்றார். கடந்த 7-ந்தேதியோடு 8 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை வாரிய தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இது மட்டுமின்றி மாற்று கட்சியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவில் இணைந்து எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட முடியாதவர்களும், கட்சிக்கு விசுவாசமாக செயல்படு பவர்களும் தங்களை கவுரப்படுத்தவில்லை என ஆதங்கத்தில் உள்ளனர்.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கு தொகுதி பங்கீடு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் 2 முறை நடந்தது. ஆனால் வாரிய தலைவர், குறைந்தபட்ச செயல்திட்டம், தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை பற்றி விவாதிக்க இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்படவில்லை. 

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கார்டு ஒட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு பா.ஜனதா சட்டமன்ற கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், சிவசங்கர், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு  ஆகியோர் பங்கேற்றனர்.

    கட்சி வளர்ச்சி பணிகள், மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்கள், தொகுதி பிரச்சினைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. ஆட்சி அமைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் வாரிய தலைவர் பதவி வழங்காதது குறித்து பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    முடிவில், கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி அளிக்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டவும்  ரங்கசாமியிடம் வலியுறுத்த உள்ளனர்.
    கொரோனா பரவலை தடுக்க பொருளாதாரம்-உணர்வுகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு கவர்னர் தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ரோட்டரி சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு  செயற்கை உடல் உறுப்புகள் மற்றும் உபகரணங்கள்  வழங்கும் விழா காராமணிக்குப்பம் முருகன் கோவிலில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது. முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஊரடங்கு இல்லாமலும், பொருளாதர பாதிப்பு இல்லாமலும், மக்கள் உணர்வு பாதிக்கப்படாமலும் எச்சரிக்கையுடன் புதுவையில் செயல்பட்டோம். இதனை பலர் விமர்சித்தனர்.கொரோனா 4-வது அலை வரலாம். ஆனால், இனி கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசியே தீர்வு. 

    தடுப்பூசி கண்டுபிடிக்க உதவியோருக்கு பத்ம விருதுகளும் பிரதமரால் தரப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகளுக்காக ஐதராபாத் பயோடெக் நிறுவனம் சொட்டு மருந்து தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன.  தமிழக பாடத்திட்டம் புதுவை, காரைக்காலில் பின்பற்றப்படுகிறது. இதனால் முதல்-அமைச்சர், கல்வி அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி பற்றி முடிவு எடுக்கப்படும். 

    15 வயதுக்கு  மேற் பட்ட சிறுவர்களில்  பெரும் பாலானவர்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் புதுவை, காரைக்காலில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி: 

     புதுவை மாநிலத்தில் 27-ந்தேதி 4,714 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுவையில் 835 பேரும்,, காரைக்காலில் 303 பேரும், ஏனாமில் 121 பேரும், மாகியில் 12 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 33 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 29 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 25 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 86 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனையில் 236 பேர், வீட்டு தனிமையில் 14,057 பேர் என ஒட்டு மொத்தமாக 14,057 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 2724 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 755 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். லாஸ்பேட்டையை சேர்ந்த 52 வயது ஆண், அரியாங்குப்பத்தை சேர்ந்த 38 வயது ஆண், பாகூரை சேர்ந்த 70 வயது முதியவர், ரெட்டியார்பாளையம் 80 வயது மூதாட்டி ஆகியோரும் காரைக்காலை சேர்ந்த 36 வயது ஆணும் இறந்துள்ளனர்.

    இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இது மக்களிடத்தில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1921 ஆக உயர்ந்துள்ளது.
    மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறி யாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப் பட்டது. இதில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர் களுடன் மின்துறை செயலாளர் மூலம் சாதக, பாதக கருத்துக்களை கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது. 

    அதையடுத்து கடந்தாண்டு கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் மின் ஊழியர்கள் பங்கேற்க வில்லை. அண்மையில் மின்துறையில்  தனியார் மயம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பாக கருத்துக் கேட்பு விளக்கக் கூட்டம் நடந்தது. 

    அந்த கூட்டமும் தோல்வியில் முடிந்தது. மின்துறை ஊழியர்களை அரசு ஊழியராக தொடர எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. அரசு ஊழியராக தான் பணிக்கு வந்தோம். அரசு ஊழியராகவே பணி ஓய்வு பெறுவோம். அதனால் பிப்ரவரி 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத் துக்கு செல்ல மின்துறை பொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தொழி லாளர் நலத்துறை சமரச அதிகாரி வெங்கடேசன் மின்துறை சிறப்பு அதிகாரிக் கும், மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.  அதன்படி, தொழில் தகராறு சட்டம் 1947-ன் பிரிவு 12--ன் கீழ் தேவைப்பட்டால் இந்த விஷயத்தில் சமூக தீர்வை கொண்டு வர 31-ந் தேதி மாலை 4 மணிக்கு சமரச நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.  

    இதற்கு தேவையான ஆதாரங்களுடன் பங்கேற்க வேண்டும். இதில் தங்கள் தரப்பு விளக்கத்தை நேரில் தெரிவிக்க  தவறினால், தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்படும். சமரசத்தின் போது இரு தரப்பினரும் முறையே விரிவான பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
    சேதராப்பட்டில் தனியார் தொழிற்சாலைக்குள் புகுந்து காவலாளிகளை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வானூர் அருகே பெரும்பாக்கம் ஏ.ஜி.பி. நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 55). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். 
    26-ந்தேதி இரவு இவரும், மற்றும் இவருடன் காவலாளியாக வேலை பார்க்கும் வானூரை சேர்ந்த பக்தவச்சலம் (57), கரசூரை சேர்ந்த கலியமூர்த்தி (63) ஆகியோரும் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். 

    நள்ளிரவு 11.45 மணி அளவில் தொழிற்சாலையில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் வந்தது. இதையடுத்து அர்ஜுனன், பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் நாய் குரைக்கும் சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் அங்கு பதுங்கி இருந்தது. 
    அவர்களிடம் ஏன் இங்கு பதுங்கி இருக்கிறீர்கள்? என்று காவலாளிகள் 3 பேரும் கேட்டனர். அதற்கு நீங்கள் யார் எங்களை கேட்பது? என்று சொல்லி காவலாளிகள் 3 பேரையும் அங்கு கிடந்த சவுக்கு கம்பாலும், கையாலும் சரமாரியாக தாக்கினர். 

    மேலும் இதுபற்றி யாரிடமாவது சொன்னால் உங்களை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த அர்ஜுனன், பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகிய 3 பேரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    பின்னர்   இதுகுறித்து அர்ஜுனன் சேதராப்பட்ட போலீசில் புகார் செய்தார். புகாரில் காவல் பணியில் ஈடுபட்ட தன்னையும், தன்னுடன் வேலை பார்க்கும் பக்தவச்சலம், கலியமூர்த்தி ஆகியோரை சேதராப்பட்டு குமரன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (22), பண்ருட்டி கட்டியாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (21), ராம்பாக்கத்தை சேர்ந்த சந்திரசேகரன் (23) மற்றும் விழுப்புரம் மேட்டுப் பாளையம் அண்ணா நகரை சேர்ந்த இளவரசன் (20) ஆகியோர் தங்களை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர் என்று குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகிறார்கள்.
    தமிழக பாடத்திட்டத்தில் புதுவை வரலாறு சேர்க்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் சிவாவிடம் திண்டுக்கல் ஐ.லியோனி உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனியை புதுவை தி.மு.க. மாநில அமைப்பாளரும்,  எதிர்கட்சி தலைவருமான சிவா சந்தித்து பேசினார். 

    அப்போது புதுவைக்கு என்று தனி பாடநூல் கழகம் இல்லாததால் புதுவையின் வரலாற்றை புதுவை மற்றும் தமிழக மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே புதுவையின் வரலாற்றை தமிழக பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்த மனுவில் நகலையும் வழங்கினார்.  அதற்கு திண்டுக்கல் ஐ.லியோனி நிச்சயம் புதுவையின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. துணை அமைப்பாளர் செந்தில்குமார் உடன் இருந்தார்.
    ×