என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மருத்துவமனை சீர்கேட்டுக்கு காரணமான ஜிப்மர் இயக்குனரை மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மர் மருத்துவமனை தற்போது நிர்வாக சீர்கேட்டினால் தரம் குறைந்து சீர்குலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக உயிர் காக்கும் மருந்துகள் முதல் சாதாரண வைட்டமின் சத்து  மாத்திரைகள் வரை இருப்பு இல்லை. இதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள் படும் துயரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.

    கொரானாவை காரணம் காட்டி இதர மருத்துவ  பிரிவுகளை மூடுவது எந்த மத்திய அரசு மருத்துவமனையிலும் இல்லாத நடைமுறை. இதற்கு ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் அனுமதி அளித்தது.   ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பதிவு செய்ய  ஏழை மக்களிடம் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஆரம்பித்து உள்ளனர். இதற்கு மறைமுகமாக ஜிப்மர் நிர்வாகமும் உடந்தையாக உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ.400 கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.   இயக்குனரின் திறமையற்ற நிர்வாகத்தால் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேடு அடைந்து வருகிறது. இவை அனைத்துக்கும் காரணமான இயக்குனரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். 

    நிதி முறைகேடு, ஊழல் சம்பந்தமாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை  சீர்கேடு அடைந்து வருவதை  புதுவை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.  உடனடியாக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தவறினால், அனைத்துப் பகுதி மக்களையும் இணைத்து  போராடுவோம்.
     
    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
    2 மாநிலங்களில் கொடியேற்றியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:  

    புதுவை செயின்ட்தெரேஸ்  வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை கவர்னர் தமிழிசை பார்வையிட்டார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2 மாநிலங்களில் கொடி யேற்றியதை சாதனையாக நினைக்கவில்லை. 2 மாநில மக்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் விதி முறைகளை மீறி எதையும் செய்யவில்லை. என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்தவும் மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவே 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதல்&அமைச்சர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. 

    கவர்னருடன் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்பதால் கவர்னர்கள் ஓற்றர்களாக செயல்படுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். அனைத்து மாநில கவர்னர்களும் நடு நிலையோடு செயல்படு கிறோம். கவர்னர்கள் வளாகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாங்களும் மக்களுக்கான சேவையை செய்கிறோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னரை வேறு பார்வையுடன் பார்க் கிறார்கள்.

    மத்திய அரசு பல நல்ல திட்டங்களை முன்வைக்க கொடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு தோழமையுடன் திட்டங்களை தருகிறது. புதுவை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்து உதவிகளையும் செய்கிறோம். 

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    ஜனாதிபதியாக நீங்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற நிருபர்களின் கேள்விக்கு  பதில் அளிக்காமல் சிரிப்புடன் கவர்னர் தமிழிசை விடை பெற்றார்.
    மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    குடியரசு தின விழாவில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். 

    ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழகத்தை சேர்ந்த, பாரதி, மருது சகோதரர்கள், மற்றும் வேலுநாச்சியார்,வ.உ.சி உள்ளிட்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்கப்பட்டிருந்தது. 

    ஆனால் இந்த அலங்கார ஊர்திகள் ஊர்திகள் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து புதுவை திராவிட விடுதலைக் கழகம் சார்பில் புதுவை சுதேசி பஞ்சாலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

    மாநில தலைவர் சிவ வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் லெனின் இட்ஸ் பாலசுப்பிரமணியன் ம.தி.மு.க. கபிரியேல், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
    கோவிலில் புகுந்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. 

    இக்கோவிலில், கடந்த மாதம் 30-ந் தேதி   பூசாரி  பூஜைகளை முடித்து விட்டு சாப்பிட சென்றார். 

    அப்போது அங்கு வந்த மர்ம ஒருவர், சாமி கும்மிடுவது போல் சிறிது நேரம் நோட்டமிட்டார்.  பின்னர், யாரும் இல்லாத நேரத்தில், கருவறைக்குள் நுழைந்துஅம்மன் கழுத்தில் இருந்த 9 கிராம் தாலி 
    செயினை  திருடிச் சென்று விட்டார்.

    இக்காட்சி கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைராலாகி பரவி பரபரப்பை  ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். 

    மேலும், இது தொடர்பாக, சப்&இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில்,  போலீசார் அய்யனார், துளசி  ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  கன்னியக்கோவில், கடலூர், கிருமாம்பாக்கம்,  தவளக்குப்பம் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்தின் பேரில், ஒரு வாகனத்தின்  பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அந்த வாகனம் பண்ருட்டி  அருகே திருவதிகையை கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (39) என்பவருக்கு சொந்தமான என்பது தெரியவந்தது.  பெயிண்டரான பாக்கியராஜிதான்  கோவிலில் புகுந்து அம்மன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்து வந்த அவரை போலீசார்  தேடி வந்தனர். 

    இந்நிலையில், முள்ளோடை சந்திப்பில் போலீசார் 26-ந் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாக்கிராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து அம்மன் நகையை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாக்கியராஜ் மீது ஏற்கனவே வானூர்,  கோட்டக்குப்பம், மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கோவில் உண்டியல் உடைப்பு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    புதுவையில் 940 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஏனாம் பகுதியை சேர்ந்த மூதாட்டி பலியாகியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 26-ந் தேதி 2217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் 940 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 635 பேரும்,, காரைக்காலில் 234 பேரும், ஏனாமில் 57 பேரும், மாகியில் 14 பேரும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 36 பேரும், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 34 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 14 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 68 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மருத்துவ மனையில் 226 பேர், வீட்டு தனிமையில் 15525 பேர் என ஒட்டு மொத்தமாக 15751 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    இன்று 1486 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 31 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே ஏனாமை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1916 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்  வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ்  மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்  தலைமை தாங்கி  ரூ.96 லட்சம்   மதிப்பீட்டில் திருக்கனூர், கூனிச்சம்பட்டு, கொடாத்தூர்,  எல்.ஆர். பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராவல்  சாலை அமைத்தல் மற்றும் மண்ணாடிப்பட்டில் திரவுபதி அம்மன் கோவில் குளத்தை  சீரமைத்தல், வாதானூரில் ஏரியை தூர்வாருதல்  உள்ளிட்ட பணிகளை  தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் மண்ணா டிப்பட்டு  கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் மற்றும் வில்லியனூர்  வட்டார வளர்ச்சி அலுவலகம் அதிகாரிகள், பா.ஜனதா பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    நிலுவை சம்பளம் வழங்கா விட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

      புதுவை அங்கன்வாடியில் உள்ள பழைய நிரந்தர பணியாளர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.

    இதேபோல் புதிதாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனிடையே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதல்-அமைச்சர் பரிந்துரை செய்தும் போனஸ் வழங்கப்படவில்லை. 

    இதனை கண்டித்தும், சம்பளத்தை வழங்க கோரியும் புதுவை அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் 27-ந் தேதி சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை  அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் தாட்சாயிணி, பொருளாளர் முருகவேணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    27-ந் தேதி மாலைக்குள் சம்பளம் வழங்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
    பிற்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக பொய் பிரசாரம் மூலம் உண்மையை மறைக்க தி.மு.க. முயற்சி செய்கிறது என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் 15 சதவீத மத்திய அரசுக்கான இட ஒதுக்கீட்டில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடமளிக்க அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. 

    அந்த குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று மருத்துவம் சார்ந்த அகில இந்திய இடங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வழங்கலாம் என மத்திய பா.ஜனதா  அரசு ஆணை பிறப்பித்தது.

    இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வின் கோரிக்கையின்படி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட  அரசாணை செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் மத்திய அரசுக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதிக்கீடு பெற்றதற்கு அ.தி.மு.க.வின் தொடர் நடவடிக்கையே காரணமாகும்.

     உண்மை நிலை இவ்வாறு இருக்க, சமீபகாலமாக அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு உரிய இடம் தங்களால் தான் கிடைக்கப் பெற்றது என தி.மு.க.  பொய் கூறி மக்களை திசை திருப்பியுள்ளது.

    27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியதில் தி.மு.க.விற்கு முழு பங்கு இருப்பதாக மற்ற மாநில மக்களையும் நம்ப முயற்சி மேற்கொண்டுள்ளதை புதுவை அ.தி.மு.க.  வன்மை யாக கண்டிக்கிறது. 

    தற்போது பிற்படுத்தப் பட்டவர்களுக்கு தான் உரிமையை பெற்றுத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. ஆட்சி நடத்தும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வர்களின் உரிமையும், வாழ்க்கைத் தரமும் உயர்வு பெற்றிட 27 சதவீதமான இடங்களில் போட்டியிட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏன் உரிய இட ஒதிக்கீடு வழங்க வில்லை.?

    இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி தடை செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே 26-ந் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பிரதமர் மோடி உருவபடத்தை தீயிட்டு எரித்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை தடுக்காத அரியாரிங்குப்பம் போலீசாரை கண்டித்தும் பா.ஜனதாவினர் 27-ந் தேதி  அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தவர்களை தேச துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என கோஷமிட்டனர். 

    இந்த முற்றுகை போராட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவிக்ரமன், செல்வம், பொதுச்செயலாளர் மோகன்குமார், செயலாளர் அகிலன், வக்கீல் பிரிவு தலைவர் கார்த்திகேயன், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிசெல்வன் உள்பட 50&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரியாங்குப்பம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மோடி உருவபொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

    இதனையேற்று பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதற்கிடையே மோடி உருவபொம்மையை தீவைத்து எரித்த பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கைதிக்கு சப்ளை செய்ய ஜெயிலுக்கு சாமியானா பந்தல் ஏற்றி வந்த மினி வேனில் கஞ்சா கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு ஜெயிலில் நேற்று குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்காக ஜெயிலுக்கு ஒரு மினி வேனில் சாமியானா பந்தல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஜெயில் வார்டன்கள் அந்த மினிவேனை சோதனை நடத்தினர்.

    அப்போது கைதிகளுக்கு சப்ளை செய்வதற்காக சாமியானா பந்தலில் மறைத்து 137 கிராம் கஞ்சா, செல்போன், ஹான்ஸ் பாக்கெட் மற்றும் சிகரெட் லைட்டர், பீடி பண்டல் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை மறைத்து வைத்திருந்ததை வார்டன்கள் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து மினி வேன் டிரைவர் பாஸ்கர்(வயது39) என்பவரை காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மினி வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ள விக்கி என்பவருக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய எடுத்து வந்தது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினிவேன் டிரைவர் பாஸ்கரை கைது செய்தனர்.

    சமூக விரோதிகளின் கூடாரமாக கிருமாம்பாக்கம் ஏரி திறந்தவெளி மதுபாராக செயல்படுகிறது
    புதுச்சேரி:

    புதுவை  கிருமாம்பாக்கம் ஏரி கடந்த ஆட்சியில் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டது.  ஏரியில் படகு சவாரியும் நடந்தது.

    ஏரிக்கரை பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் ஏரியின் அழகையும் அங்கு வந்து செல்லும் பறவைகளை காணும் வகையிலும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டது.

    ஆனால், இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனால் அங்கு நடந்த மேம்பாட்டு பணிகள் தொடராமல் கைவிடப்பட்டு உள்ளது.

    தற்போது ஏரி சமூக விரோதிகளின் கையில் சிக்கி  திறந்தவெளி மதுபான கூடாரமாக மாறிவிட்டது.  இந்த பகுதியை சேர்ந்த மதுபான பிரியர்கள் பலர் இங்கு மது அருந்தி செல்வதை வழக்கமாகி வருகிறார்கள். 

    மேலும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு வரும் வெளியூர் நபர்களும் இந்த இடத்தில் மது அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள். 

    அதுமட்டுமின்றி குடித்த மதுபான பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் இதர பொருட்களை  அப்படியே ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் ஏரிக்கரை முழுவதும் அசுத்தமாக மாறி அரு வருக்கத்தக்க வகையில் மாறியுள்ளது.

    இதனை புதுவை அரசு உடனடியாக சீரமைத்து ஏரியின் அழகையும் இயற்கை வளத்தையும் பாதுகாத்திட வேண்டும் என இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    சாலை பணிகளின் குறைகளை தெரிவிக்க தொலைபேசி எண்ணையும் அறிவிக்க வேண்டும் என்று பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு தனக்கு வரி செலுத்தும் மக்களுக்கு சீரான தரமான சாலையை அமைத்துக்கொடுக்க வேண்டியது தனது அடிப்படை அவசியமான பணி என்பதை உணர வேண்டும் இதனை செய்வதற்கு பழைய தவறான முறைகளை கைவிட்டு புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும். 

    ஒரு சாலை தரமானதாக இருக்க வேண்டுமெனில் அது குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு தாங்க வேண்டும். எந்த சேதமும் பழுதும் ஆகாமல் இருக்க வேண்டும் அப்படி ஏற்பட்டால் அதை ஒப்பந்ததாரர்கள் தனது சொந்த செலவில் செய்து தர வேண்டும். 

    புதிய சாலைகள் அமைப்பதற்கு முன்பு பழைய சாலையை   முழுவதுமாக சுரண்டி எடுத்து சாலையின் மட்டம் உயராத வகையில் அமைக்க வேண்டும். 

    இதனால் புதிய சாலை இயற்கையாக அமைந்து நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழைநீர் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதாக சென்று பாதிப்பை ஏற்படுத்தாது. ஒப்பந்ததாரர் யாருக்கும் எதற்காகவும் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது.

    சாலை போடும் இடங்களில் உள்ள மக்கள் குழுக்கள் சமூக ஆர்வலர்கள் இந்த பணியை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து தவறுகள் இருந்தால்  அவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க அரசு ஒரு உதவி தொலைபேசி எண்ணையும் அறிவிக்க வேண்டும். 

    மாநிலம் முழுவதும் நடைபெறும்  சாலை பணிகளை கண்காணித்து அதன் தரத்தை உறுதி செய்ய  தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள பேராசிரியர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து தவறுகளை கண்டுபிடிக்க வேண்டும். 

    பொதுப்பணித்துறை செயலாளர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விதிகளின்படி வேலை நடக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

    இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
    ×