search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த காட்சி.
    X
    அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்த காட்சி.

    வாரிய தலைவர் பதவி- பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை

    பா. ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வாரிய தலைவர் பதவி குறித்து ஆலோசனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

    கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டின்போது பா.ம.க.வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.  இதனால் பா.ம.க. கூட்டணியில் நீடித்தது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி ரங்கசாமி தலைமையில் அமைந்தது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 

    ஆட்சி அமைந்தபிறகு பா.ம.க.வினர் உடன்படிக்கையின்படி வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. இதனால் புதுவையிலும் என்.ஆர்.காங்., பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது.

    கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. கட்சி தலைமையின் ஒப்புதலோடு அ.தி.மு.க.வை சேர்ந்த 6 பேருக்கு வாரிய தலைவர் பதவி வழங்க கோரி கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமி, பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் கடிதம் அளித்தனர். 

    சட்டமன்ற பதவிகளில் என்.ஆர்.காங்கிரசில் முதல்- அமைச்சர், 3 அமைச்சர்கள், துணைசபாநாயகர், அரசு கொறடா என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். பா.ஜனதா தரப்பில் சபாநாயகர், 2 அமைச்சர்கள், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். 

    என்.ஆர்.காங்கிரசில் வெற்றி பெற்ற 10 எம்.எல்.ஏ.க்களில் திருமுருகன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகிய 3 பேருக்கு பதவிகள் இல்லை. பா.ஜனதாவில் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்டு ஆகியோருக்கு பதவிகள் இல்லை. பா.ஜனதாவை ஆதரிக்கும் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் வாரிய தலைவர் பதவி வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மே 7-ந்தேதி ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவியேற்றார். கடந்த 7-ந்தேதியோடு 8 மாதம் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை வாரிய தலைவர் பதவிக்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இது எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இது மட்டுமின்றி மாற்று கட்சியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவில் இணைந்து எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட முடியாதவர்களும், கட்சிக்கு விசுவாசமாக செயல்படு பவர்களும் தங்களை கவுரப்படுத்தவில்லை என ஆதங்கத்தில் உள்ளனர்.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கு தொகுதி பங்கீடு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் 2 முறை நடந்தது. ஆனால் வாரிய தலைவர், குறைந்தபட்ச செயல்திட்டம், தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை பற்றி விவாதிக்க இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்படவில்லை. 

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கார்டு ஒட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு பா.ஜனதா சட்டமன்ற கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், சிவசங்கர், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு  ஆகியோர் பங்கேற்றனர்.

    கட்சி வளர்ச்சி பணிகள், மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்கள், தொகுதி பிரச்சினைகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. ஆட்சி அமைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் வாரிய தலைவர் பதவி வழங்காதது குறித்து பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    முடிவில், கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி அளிக்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டவும்  ரங்கசாமியிடம் வலியுறுத்த உள்ளனர்.
    Next Story
    ×