என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுவை இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-முன்னாள் கவர்னர் கிரண்பேடி கடிதம்

    புதுவை இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முன்னாள் கவர்னர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி இருந்தார்.  கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் கடும் மோதல் நிலவியது. 

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது செயல்பாட்டை கண்டித்து காங்கிரசார் போராட்டத்தை அதிகரித்தனர்.

    இந்த நிலையில் கிரண்பேடி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தெலுங்கானா கவர்னர்  தமிழிசை புதுவையின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    கிரண்பேடி கவர்னராக தான் பதவியில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்து ‘அச்சமற்ற  நிர்வாகம்‘ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். 

    இதுகுறித்து புதுவை மக்களுக்கு கிரண்பேடி  வெளியிட்டுள்ள கடிதம் வருமாறு:-

    புதுவை மக்களுக்கு எனது கடைசி கடிதம் இது. புதுவை கவர்னராக பணியாற்றிய கடந்த மே 29, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை எனது சேவையின் போது நான் உங்களுக்கு பல  கடிதங்களை எழுதியுள்ளேன். இதுதான் எனது கடைசி கடிதம். 

    புதுவையில் பணியாற்றிய விலை மதிப்பில்லாத என் நினைவுகளை நான் என்னுடனேயே மறைந்து போக விரும்பாததால்தான் தற்போது அச்சமற்ற நிர்வாகம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளேன்.  இதனை நான் ஏன் எழுதியுள்ளேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். 

    குறிப்பாக புதுவை இளைஞர்கள், குழந்தைகளுக்காக இதை எழுதியுள்ளேன். அவர்கள் இந்த வரலாற்றை படிக்க வேண்டும். இந்தியாவிலேயே மிக அழகான பகுதியான புதுவையின் செழுமைக்காக விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

    புதுவையை நீர்வளமாக்கவும், தூய்மையாக்கவும் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நினைவு படுத்த எழுதினேன். நான் அறிந்ததை விட உங்கள் அனைவருக்கும் பிராந்தியத்தை பற்றி அதிகம் தெரியும் என்று எனக்கு புரிகிறது. 

    அதேநேரத்தில் என்னால் செயல்படுத்த முடிந்ததை புத்தகத்தில் எழுதியுள்ளேன்.  ஆதாரப்பூர்வமற்ற எதையும் எழுதவில்லை.

    இது புதுவை மக்களின் அன்பும், மரியாதையும், நேசமும் கொண்ட படைப்பாகவும், விரைவில் தமிழ் பதிப்பும் வரும். உங்கள் அனைவருக்கும் எப்போதும் வளமான புதுவை அமைய வாழ்த்துக்கள்.

    இவ்வாறு கிரண்பேடி கடிதத்தில் கூறியுள்ளார்.
    Next Story
    ×