என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பள்ளிகளில் பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் பிப்.4-ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. பள்ளிக்கு வராதவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடரும்.

    பிப்ரவரி 9 முதல் 15-ம் தேதி வரை திருப்புதல் தேர்வுகள் நடைபெறும். வாரத்தில் ஆறு நாட்களும் பள்ளிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாணவர்களுக்கு விடுமுறை உண்டு.

    புதுச்சேரியில் கல்லூரிகளும் பிப்ரவரி 4-ம் தேதி முதல் திறக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
    காரைக்கால் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்த, ஆட்டோக்கள் மூலம் செய்யப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் துவங்கி வைத்தார்.
    காரைக்கால்:

    கரைக்கால் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, மாவட்ட நலவழித்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, புதுச்சேரி நலவழித்துறையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோரின் உத்தரவின் பேரில், காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும் நோக்கத்துடன், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. 

    இந்த பிரச்சார ஆட்டோக்களை காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நலவழித்துறை நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சீ.சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், 3 ஆட்டோக்கள் மூலம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுமார் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யப்பட உள்ளது. 

    மேலும் இது சம்பந்தமாக துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் கூறியதாவது:-காரைக்கால் மக்கள் நலன் கருதி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நலவழித்துறை இடைவிடாமல் செய்து வருகின்றது. மக்கள் சற்று அலட்சியம் காட்டும்போது கொரோனா தாக்கத்தின் எண்ணிக்கையும் கூடிவிடுகிறது. ஆகையால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் முககவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியையும் அடிக்கடி கைகளை கழவுவதையும், அன்றாட கடமையாக கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலும் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்லவேண்டும். 

    மேலும், காரைக்கால் மாவட்டத்தில் இன்னும் சில பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது தெரியவருகிறது. கொரொனாவிலிருந்து நாம் காத்துக்கொள்ள வேண்டுமானால் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கேட்டு கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன்வரவேண்டும் என்றார்.
    மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது.

    புதுவை மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி தனியார் மயத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.

    போராட்டக்குழுவினர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர். இதனிடையே தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து போராட்டக்குழுவினர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

    போராட்டத்தை தடுக்க தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் மின் துறையை அத்தியாவசிய பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் நலத்துறையின் மூலம் சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று மாலை போராட்டக் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    மின்துறை தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்துறை ஊழியர்கள் அத்தியாவசிய பணிகளை செய்பவர்கள். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பணி விதிகளுக்கு எதிரானது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிடும்படி துறைரீதியாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    மீறி போராட்டம் நடத்தினால் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம் பணியிடை முறிவு காலமாக கருதப்பட்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. எனவே வேலை நிறுத்தத்தை கைவிட்டு வழக்கம் போல பணிகளை செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு சண்முகம் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் மின்துறை போராட்டக்குழுவின் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்துள்ளனர். போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன. முதல்-அமைச்சரும், அமைச் சர்களும், ஆளும் கட்சியினரும் மட்டும்தான் மவுனம் சாதித்து வருகின்றனர்.

    மின்துறை தலைவர் தனியார்மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளார். தனியார் மயமானால் துரித சேவை கிடைக்கும் என்கிறார். இதுவரை துரிதசேவை கிடைக்க வில்லையா? எங்களை போராட்டத்துக்கு அரசுதான் தள்ளியுள்ளது.

    வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஒட்டுமொத்த ஊழியர்களும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதனால் ஏற்படும் மின் இடர் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசும், மின்துறை நிர்வாகமும்தான் பொறுப்பு. திட்டமிட்டபடி நாளை போராட்டம் தொடங்கி இதற்கு தீர்வு காணும்வரை நீடிக்கும்.

    எங்களின் நியாயமான போராட்டத்துக்கு மின்நுகர்வோர், அரசு ஊழியர், அரசியல்கட்சியினர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினர்
    புதுச்சேரி:

    புதுவை மின்துறை ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலெக்டர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
     
    அத்தியாவசிய பட்டியலில் இடம் பெற்றுள்ள மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசித்தார்.  ஏற்கனவே மின்துறை தலைவர் சண்முகம், மின்துறை தலைமை அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

    இதற்கான உத்தரவை கலெக்டர் பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
    புதுவையில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 30-ந் தேதி ஆயிரத்து 682 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 380, காரைக்காலில் 103, ஏனாமில் 15, மாகியில் 6 பேர்  புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 110, காரைக்காலில் 30, ஏனாமில் 12, மாகியில் 9 பேர் என 161 பேர்  தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் ஆயிரத்து 393, காரைக்காலில் 354, ஏனாமில் 62,  மாகியில் 19 பேர் என ஆயிரத்து 828 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 620 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 6 ஆயிரத்து 334, காரைக்காலில் 2 ஆயிரத்து 345, ஏனாமில் 798, மாகியில் 62 பேர் என 9 ஆயிரத்து 539 பேர் வீட்டு  தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 9 ஆயிரத்து 700 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  புதுவை சாரத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி, குறிஞ்சி நகரை சேர்ந்த 72 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 65 வயது பெண் என 3 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

    இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள் ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 33 ஆயிரத்து 829 பேர் தடுப்பூசி  போட்டுள்ளனர். 

    இந்த தகவலை  சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    இலவச மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் கிராமபுறங்களில் ஒராண்டு பணி செய்ய அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-

    புதுவை அரசு ஆண்டுக்கு ரூ 30 கோடிக்கு மேல் மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பயில மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது. 

    மருத்துவ கல்வியை முடித்தவுடன் கட்டாயம் ஓராண்டு மக்களுக்கு கிராமப் புறங்களில் அரசு நிர்ணயிக்கும் சம்பளத்திற்கு பணியாற்ற வேண்டும் என புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

    அதேபோன்று சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மாணவர்கள் உயர்கல்வி பயில கல்விக் கட்டணத்தில் ஒரு பகுதியை அரசு செலுத்த முன்வர வேண்டும். 

    அவ்வாறு அரசு மூலம் மருத்துவ உயர்கல்வி எம்.டி.,எம்.எஸ். போன்ற படிப்பு முடித்த வர்கள், தங்களது படிப்பு முடித்தவுடன் குறைந்தது 2 ஆண்டு காலம் அரசு மருத்துவமனையில் தங்களது மருத்துவ பணியை அரசு நிர்ணயம் செய்யும் சம்பளத்தில் பணி செய்ய ஒப்பந்தம் போடவேண்டும்.

    தமிழகத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சட்ட
    ரீதியாக பெற்று தந்தனர். 

    தமிழகத்தை பின்பற்றி மருத்துவக் கல்வியின் அரசு ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கையை இந்த கல்வி ஆண்டில் அரசு எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அன்பழகன் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
    மின்துறை தனியார்மய எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.- காங். கூட்டணிகட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    தனியார் மயத்தை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பிப்ரவரி 1-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். 

    இந்நிலையில் அரசியல் கட்சியினர் மின்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

    இதுதொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர்  ஜெயராம் ஓட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். 

    கூட்டத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், எதிர்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர். தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், புதியநீதிக்கட்சி பொன்னுரங்கம், ம.தி.மு.க.  கபிரியேல், கம்யூனிஸ்ட் (எம்.எல்)  சோ.பாலசுப்பிரமணியம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து  ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 
    மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை விவசாயிகள் சங்கம் சார்பில் அண்ணா சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன், ரவி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் மாசிலாமணி, ராஜா, கலியமூர்த்தி, பெருமாள், தாமோதரன், கருணாகரன் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் செல்வகணபதி, தி.மு.க. விவசாயிகள் பிரிவு தலைவர் செந்தில்குமார், கம்யூனிஸ்டு (எம்.எல்.) விவசாய பிரிவு புருஷோத்தமன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் செல்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவுதமிழ்வளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை செயல்படுத்த வில்லை. விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறவில்லை. உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை பற்றி தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவோடு அரசு பேச்சு வார்த்தையை தொடர வில்லை. 

    விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த நிகழ்வில் மத்திய அமைச்சருக்கும் தொடர்பு உண்டு என்று விசாரணை அறிக்கை வந்த பிறகும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் உள்ள பிரதமர் மோடியின் செயலை கண்டிக்கும் வகையில் ஜனவரி 31 துரோக தினமாக கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் கடலூர் சாலை கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கதிர் வேல் முன்னிலை வகித்தார். வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

    புதுவை நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்கு களையும் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஐகோர்ட்டு அனுமதிக்க வேண்டும். வாரிசு உரிமை வழக்குகளை புதுவை மாநிலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 

    புதுவை அரசு வாரிசுரிமை சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அளித்த அதிகாரத்தை வக்கீல்கள், மற்றும் பயனாளிகள் நலன்கருதி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

    போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களுக்கு சங்க செயற்குழு உறுப் பினர் மணிகண்டன் மரணமடைந்ததாக தகவல் வந்தது. இதையடுத்து 11 மணியளவில் வக்கீல்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    புதுவை அருகே விவசாய நிலத்தில் வேலை பார்த்த மூதாட்டி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாகூர்:

    புதுவை எல்லைப் பகுதியான பாகூரை அடுத்த சோரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் மற்றும் முள்ளோடை பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மதுக்கடை, சாராயக்கடை இருந்து வருகிறது.

    இங்கு மது குடிக்க அண்டை மாநிலமான கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் வந்து மது அருந்தி செல்கின்றனர்.

    சிலர் சொகுசாக இருக்க வேண்டும் என்று மது பானங்களை வாங்கிக் கொண்டு நிலத்திலும், ஆற்றின் கரையில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர்.

    இதனால் அவ்வப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பெண்கள், சிறுவர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எல்லைப் பகுதியில் கடுமையாக அவதிக் குள்ளாகின்றனர். பாகூர் போலீஸ் நிலையத்தில் போலீசார் குறைவாக இருப்பதால் ரோந்துப் பணியில் மந்தமாக இருந்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி பல குற்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று 63 வயது மூதாட்டி ஒருவர் மணிலா விவசாயம் செய்ய அப்பகுதியில் உள்ள நிலத்திற்குச் சென்று உள்ளார். அங்கு களை எடுத்துக் கொண்டிருக்கும்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் குடிபோதையில் மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ளார்.

    அப்பொழுது அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த அந்த வாலிபர், திடீரென அங்கிருந்து ஒரு தடியால் மூதாட்டியின் கழுத்தில் தாக்கினார்.

    இதில் மயங்கி கீழே விழுந்த மூதாட்டியை அந்த வாலிபர் தரதரவென இழுத்துச் சென்று அங்கு உள்ள ஒரு புதரில் வைத்து கற்பழித்தாக கூறப்படுகிறது.

    மயக்க நிலையில் இருந்த அந்த மூதாட்டியிடம் வெளியில் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு மூதாட்டி காதில் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இந்தநிலையில் வயலுக்குச் சென்ற மூதாட்டி வெகு நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நிலத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மூதாட்டி அலங்கோலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.

    இது குறித்து பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், தீபிகா ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மூதாட்டியை கற்பழித்து நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கட்டணம் குறையும், மானியம் தொடரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மின்துறை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மின்துறை தலைவரும், கண்காணிப்பு பொறியாளருமான சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மின்துறைகளின் செயல் திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு மின்துறைகளை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது. 

    இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு பரிமாற்ற திட்டத்தின்படி தற்போது புதுவை அரசு மின்துறை ஊழியர்களால் பெறப்படுகின்ற ஊதியம், ஓய்வூதியம், வருடாந்திர ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர அனைத்தும் ஓய்வுக்கால பலன்கள் பாதுகாக்கப்படுகிறது.

    இதேபோல், மின் கட்டண நிர்ணய செயல்முறை தற்போது உள்ளது போல் கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் தொடரும். புதிதாக வரக்கூடிய தனியார் நிறுவனமும் கூட தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளுடன் வருடாந்திர மின் கட்டண நிர்ணய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். 

    எனவே,  நுகர்வோருக்கான மின் கட்டணத்தை தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக அதிகரித்து கொள்ள முடியாது.  எனவே, ஒரு சிலர் கூறுவதுபோல் மின் கட்டணமானது எப்போதும் அதிகமாக இருக்கும் என்றும், தனியார் நிறுவனத்தால் தன்னிச்சையாக நிர்ணயிக்கப்படும் என்ற கருத்தும் முற்றிலும் தவறானது. 

    உண்மையில், தனியார் மயமாக்கலால் விநியோக செயல்பாட்டு திறன் அதிகரிக்கும். அதன் பலனாக பொதுமக்களுக்கு மின் கட்டண உயர்வு விகிதம் குறைவதற்கு ஏதுவாகும். மேலும், தனியார் மயமாக்கப்படும் பட்சத்தில் அனைத்து பொது
    மக்களுக்கும் உடனடி சேவையும் சிறந்த பரா மரிப்பும் உறுதி செய்யப்படும். 

    எனவே, புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. வரைவு பரிமாற்ற திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஊழியர்களின் பணி பாதுகாப்புகளை பற்றி விளக்குவதற்காக மின்துறை, ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தும், ஊழியர் சங்கங்கள் பரிமாற்ற திட்ட விதிகளை அறிய ஆர்வம் காட்டவில்லை.

    இதனிடையில், ஒரு சில இயக்கங்கள், பொதுமக்கள் மத்தியில் விவசாய மானியம் திரும்ப பெறப்படும் என்றும், மின் கட்டணம் பல மடங்கு உயரும் என்றும் வதந்திகள் பரப்புகின்றன. ஆனால் உண்மையில் தனியார் மயமாக்குதலுக்கு பின்பும் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மானியங்களை புதுவை அரசு வழங்க இயலும். 

    எனவே, மானியம் பறிபோகும் என்று பொதுமக்கள் மத்தியில் பரப்பப்படும் வதந்தி ஆதாரமற்றது. 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெகாசஸ் விசாரணை எந்த வித பாரபட்சமுமின்றி நடப்பதற்கு பிரதமர் மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா  செய்ய  வேண்டும். வெளிப்படையான விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும். பிரதமர் தன்னையும் அந்த விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். 

    புதுவை மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கொரோனா தொற்றை குறைவாக காட்டுவதற்காக உமிழ்நீர் பரிசோதனையை குறைத்து ஒரு நாடகத்தை புதுவை அரசும், மருத்துவ துறையும் நடத்துகிறது. இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. 

    இதற்கான காரணத்தை மருத்துவத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்வதில்லை. இதனை அரசும் கண்டு கொள்வதில்லை. மக்கள் உயிரை துச்சமென நினைத்து அரசும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர். 

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்குகின்ற வேலையை ரங்கசாமி அரசு செய்து கொண்டிருக்கிறது. மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான காரணம் என்ன? மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. பொதுமக்கள் வரிப்பணம் வீணாகவில்லை. 

    மின்துறையை தனியார் மயமாக்கினால் மின்கட்டனம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். 

    நமது மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகளை தனியாரிடம் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுக்க தயாராகி விட்டது. இதை முழுமையாக காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கிறோம். 

    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதசார்பற்ற அணிகளோடு இணைந்து போராட்டம் நடத்துவோம். மின்துறை தனியார் மயமாக்கலை எங்கள் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர்களுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண்டும். 

    இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    ×