என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல், கடந்த 29-ந்தேதி காரைக்கால் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கு சொந்தமான படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இலங்கை அருகே இந்திய எல்லையில் இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் 9 மீனவர்களையும் படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகில் காரைக்காலை சேர்ந்த எழில் மற்றும் கலைச்செல்வன் உட்பட 9 மீனவர்கள் உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் மீனவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்காலில் நரிக்குறவர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்கால்:

    காரைக்கால் அன்புநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது31). கூலி தொழிலாளி. நேற்று மாலை காரைக்கால் நகர் பகுதியில் வசிக்கும் 33 வயது நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டு வாசலில் நின்றார். அப்போது அவ்வழியே சென்ற மணிகண்டன், அப்பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து, வாயை பொத்தி வீட்டுக்குள் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    அப்போது, அப்பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு நரிக்குறவர் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்தார்.
    சட்ட விரோதமாக கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு உத்தரவு வரும்வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    மின்துறையை தனியார் மயமாக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை ஏற்படுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கு அனைத்து தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து மின்துறை போராட்டக் குழுவினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்தனர். ஊழியர்கள் போராட்டம் நடத்தக்கூடாது. மீறி போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்துறை தலைவர் சண்முகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மின்துறை தலைமை அலுவலகம், துணைமின் நிலையங்கள், மின்துறை அலுவலகங்கள், மின் வினியோக அலுவலகங்கள் ஆகிய இடங்களில் போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    சட்ட விரோதமாக கூடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு உத்தரவு வரும்வரை தடை உத்தரவு நீடிக்கும் என்றும் கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மின்துறை ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம் அருகே திரண்டனர். மின்துறை தலைமை அலுவலகத்தின் இருபுறமும் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்தனர்.

    தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களை மட்டும் பணிக்கு செல்ல அனுமதித்தனர்.

    இதனால் போலீசாருடன் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்ல, செல்ல மின் விநியோக அலுவலகம், துணை மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சாரை, சாரையாக மின்துறை தலைமை அலுவலகம் அருகே கூடினர்.

    அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினரும் திரண்டனர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் தனியார் மயத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தனியார்மய கொள்கையை திரும்ப பெறு, திரும்ப பெறு, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படாதே, பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்காதே என கோ‌ஷம் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் தமிழகம், கேரளாவில் உள்ள மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    ஊழியர்களின் போராட்டத்தால் புதுவை முழுவதும் உள்ள மின்துறை அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மின்கட்டண வசூல் மையங்கள் மூடிக்கிடந்தது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தால் மின் இடர்பாடுகள் சீரமைக்கப்படவில்லை.
    மின்துறை ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக கவர்னர் தமிழிசையுடன் தி.மு.க-காங். கூட்டணி கட்சியினர் சந்தித்தனர்.
    புதுச்சேரி :

    புதுவை கவர்னர் தமிழிசையை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள்  கவர்னர் மாளிகையில் சந்தித்தனர்.

    மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ர மணியன் தலைமையில், தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். 

    பின்னர் தி.மு.க. அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்துறையை தனியார் மயமாக்குவதால் சாதாரண மனிதர்களுக்குக்கூட பாதிப்பு ஏற்படும். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். 

    ஏனெனில் அத்தியாவசிய சேவைகளில் குடிநீர், காற்று ஆகியவற்றோடு மின்சாரமும் அடங்கியுள்ளது. அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை தனியாரிடம் வழங்குவது நியாயம்தானா? என கவர்னரிடம் கேள்வி எழுப்பினோம். 

    பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் கவர்னரிடம் விளக்கினோம். கவர்னர், தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர், மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் பேசி, மின்துறை தனியார் மயத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். 

    கவர்னர் எங்களிடம் பேசியதிலிருந்து, மின்துறை தனியார் மயத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறோம். தனிநபர் பயனடைய ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பது சரியானதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறும் போது, மின்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்க்கட்சிகள் ஒருங் கிணைந்து எதிர்க்கிறோம். 

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு  உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக இன்று (பிப்ரவரி1) மாலை ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தனியார்மயத்தை கைவிடும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறினார். 
    பொதுமக்கள் பாதிக்காத வகையில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறை தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மின்துறை தலைவர் சண்முகம் நிருபர் களிடம் கூறியதாவது:-
    மின்துறை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக திகழ்கிறது. மின் விநியோகம் இல்லாவிட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு போராட்டம் நடத்த தடை விதித்தோம். இது மின்துறை சட்ட விதிகளில் கூட இடம் பெற்றுள்ளது. 

    புதுவை மின்துறையை தனியார்மயமாக்கு வதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. அரசின் ஒப்புதல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் என பல பணிகள் உள்ளது. அது மட்டுமின்றி தற்போது மின்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தங்களின் அரசு ஊழியர் அந்தஸ்து பாதிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

    அவர்களுக்கு எந்தவிதமான குறைபாடும் ஏற்படாது. சம்பளம், பதவி உயர்வு, பென்ஷன் ஆகிய அனைத்தும் தொடரும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதுவை மின்துறையில் உள்ள கட்டமைப்புகள் 30 ஆண்டு பழமையானது. இதை மாற்ற வேண்டிய கட்டாயமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கான நிதி ஆதாரம் இல்லை. இதனால் தொழிற் சாலைகள், வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க முடியாத சூழல் உள்ளது. தனியார் மயமாகும் போது ஒரு சில ஆண்டுகளில் கட்டமைப்பை புதிதாக மாற்றி விடுவர். 

    மின்துறையின் சொத்துக்கள் தனியாருக்கு வழங்கப் போவதில்லை. துறையின் வசம் உள்ள நிலம் அரசிடம் தான் இருக்கும். மின் கட்டமைப்புகளை மட்டுமே தனியாரிடம் வழங்க உள்ளோம். 

    இந்த நிலையில் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.   இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் மின்விநியோகத்தை தொடர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஒப்பந்த  அடிப்படையிலும், மின்துறையில் பயிற்று நர்களாக இருந்தவர்களை, ஐ.டி.ஐ. படித்தவர்களை தொடர்பில்  வைத்துள்ளோம். 

    அவர்கள் தடை ஏற்படும் இடங்களில் மின் விநியோகத்தை சீரமைப்பர். போராட்டத்தில் சமூக விரோதிகள் இடையில் புகும் அபாயம் உள்ளது. இதனால் மின்துறை ஊழியர்களே பாதிக்கப்படுவர். எனவே போராட்டத்தை கைவிடக்கோரி நோட்டீஸ் அளித்துள்ளோம். 

    இன்று (பிப்ரவரி1) குறைவான ஊழியர்களே பணிக்கு வந்துள்ளனர். மக்கள் வழக்கம் போல மின் குறைபாடுகளை 1912 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுச்சேரியில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 31-ந் தேதி 3 ஆயிரத்து 366 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக ஆயிரத்து 640 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 380, காரைக்காலில் 179, ஏனாமில் 71, மாகியில் 10 பேர்  புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 101, காரைக்காலில் 27, ஏனாமில் 8, மாகியில் 8 பேர் என 144 பேர்  தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 830, காரைக்காலில் 101, ஏனாமில் 115,  மாகியில்23 பேர் என ஆயிரத்து 69 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 891 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 689 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் 5 ஆயிரத்து 889, காரைக்காலில் 2 ஆயிரத்து 426, ஏனாமில் 758, மாகியில் 50 பேர் என 9 ஆயிரத்து 123 பேர் வீட்டு  தனிமையில் உள்ளனர். 
    புதுவை மாநிலத்தில் இப்போது 9 ஆயிரத்து 267 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  

    புதுவை கிருமாம் பாக்கத்தை சேர்ந்த 33 வயது ஆண், முள்ளோடையை சேர்ந்த 44 வயது ஆண், லாஸ்பேட்டையை சேர்ந்த 41 வயது ஆண், தட்டாஞ்சாவடியை சேர்ந்த 75 வயது முதியவர் என 4 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 935 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 35 ஆயிரத்து 643 பேர் தடுப்பூசி  போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் ஜிப்மர் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஜிப்மர் ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் வினோத்குமார் (வயது28). இவர்  ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. பிருந்தா என்ற மனைவி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக் கிடையே அடிக்கடி சிறுசிறு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு வினோத் குமார் பணி முடிந்து தாமதமாக வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி பிருந்தா கேட்ட போது நண்பர் விபத்தில் சிக்கி கொண்டதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு வீட்டுக்கு வர தாமதமானதாக வினோத்குமார் கூறினார்.

    ஆனால் இதில் பிருந்தா சமாதானம் அடையவில்லை.  இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வினோத்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பிருந்தா பரசுரெட்டிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். 

    மனைவி கோபித்து சென்றதால் வினோத்குமார் மனவேதனையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வினோத்குமார் மின்விசிறியில் துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் பட்டுரோஜா கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் மின்துறை  தனியார் மயம் ஆக்குவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக  நடைபெற்று வருகிறது. 

    இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின்துறை தனியார் மயம் ஆக்கப்படுவதால் வீட்டு மின்சார கட்டணம் உயர்வு, வைப்பு தொகை உயர்வு, ஊழியர்கள் பணி சுமை அதிகரிப்பு போன்ற பல்வேறு மக்களை பாதிக்கும் விஷயங்கள் இருப்பதாக  உணர்கிறோம். 

    எனவே புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி, மக்களை பாதிக்கும் போராட்டத்தை  முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

    அவர்கள் மீது அடக்கு முறைகள் மேற்கொள்வதும், 144 தடை உத்தரவு  போன்ற செயல்களால் மின்துறை ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். 

    புதுவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மின்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றிட அவர்களுக்கு நியாயம் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல தீர்ப்பு பெற்று தர வேண்டும். 

    மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் இந்த கால கட்டத்தில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் மாணவர்கள் கல்வியை பாதிக்கும். 

    எனவே அரசு விரைந்து செயல்பட்டு மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    புதுச்சேரி:

    தை  மாதம்  அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.

    தை அமாவாசை 31-ந் தேதி மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதனால் கடல் தீர்த்தவாரியில் பெரும்பாலான சுவாமிகள் பங்கேற்கவில்லை. 

    இன்று (பிப்ரவரி1) அமாவாசை தொடர்ந்ததை யொட்டி புதுவை கடற்கரையில் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த உற்சவ சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. 

    லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோவில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோவில், மணக்குளவிநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோவில், கவுசிக பாலசுப்பிரமணியர்,  தண்டுமுத்துமாரியம்மன், வரதராஜபெருமாள் உட்பட பல்வேறு 
    கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

    பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரை காந்தி திடலில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

    இதேபோல சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்று கரையோரங்களிலும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று கென்னடி எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக்கீரப்பாளையம்  பொதுமக்கள் பாண்டி மெரீனாவை தடை செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் ஒதியஞ்சாலை போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ், சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஏழுமலை மற்றும் நகராட்சி அதிகாரிக்ள கலந்து கொண்டனர்.
    கூட்டத்துக்கு தலைமை தாங்கி கென்னடி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மீனவர்களின் வாழ் வாதாரம் காக்கப்படும்.  வரும் காலங்களில் அப் பகுதியில் உள்ள கடைகளை மீனவ மக்களுக்கு டெண்டர் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் கொண்டு வரப்படும் திட்டங்கள் மீனவர்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படும்.

    மெரீனா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அந்த பகுதியில் போலீஸ் பூத் விரைவில் அமைக்க வேண்டும். என்று இன்ஸ்பெக்டரிடம் வலியுறுத்தினார்.

    மீனவ சமுதாய மக்கள் சுற்றுலா பயணிகளுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அப்பகுதியில் முறையான உரிமம் பெற்று கடைகளை அமைத்து கொள்ளலாம் என கென்னடி எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    மீன் வளத்துறை அமைச்சர் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று மீனவர்கள் தொழில் செய்ய ஏதுவாக வலை கூடம், தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளுக்காக நடவடிக்கை எடுத்து அதன் நிலைமையை பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன்,மீனவர் பஞ்சாயத்து துணை தலைவர் ஜலேந்திரன் மற்றும் கோபி, செயலாளர் கார்த்தி, துணை செயலாளர் வீரமணி, பொருளாளர்ஜயமணி, துணை பொருளாளர் ஜெயராமன், உறுப்பினர்கள் விஜய், ராஜ் குமார், தினேஷ், மதிவாணன், சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 
    திருக்கனூர் அருகே பெண்ணை தாக்கி மோட்டார் சைக்கிள் எரித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் புதுநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி (வயது46). குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சுமதி தனது மகன் வசந்த்துடன்(26) வசித்து வருகிறார்.

    சுமதி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சுமதி வேலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரகுராமன் என்பவர் சுமதியின் கையை பிடித்து இழுத்து நீ என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று தகராறு செய்தார்.

    மேலும் சுமதியின் ஆடையை கிழித்து மானபங்கம் செய்ததோடு தகாத வார்த்தை களால் ரகுராமன் திட்டினார். அதனை பொறுத்துக் கொண்டு சுமதி வேலைக்கு சென்று விட்டார். ரகுராமன் மீண்டும் சுமதியின் வீட்டுக்கு வந்து கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சுமதி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ரகுராமன் கத்தியால் வீட்டின் கதவை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து சுமதி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி  வந்த நிலையில் இதனையறிந்த ரகுராமன் தனது மனைவி பாக்கியவதி மற்றும் மகள் ஜான்சிராணியுடன் சுமதியின் வீட்டுக்கு வந்தார். 

    அங்கு சுமதியிடம் எங்கள் மீதே போலீசில் புகார் கொடுக்கிறாயா? என கூறி அவர்கள் சுமதியின் முடியை பிடித்து இழுத்து தாக்கினர். 

    மேலும் காலால் வயிற்றில் எட்டி உதைத்தனர். இனிமேல் உங்களால் இந்த ஊரிலேயே இருக்க முடியாது உங்களை காலி செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்று விட்டனர்.

    சுமதி வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது ரகுராமன் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த சுமதியின் மகன் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதை கண்டு சுமதி திடுக்கிட்டார். அப்போது மீண்டும் ரகுராமன் கொலை செய்து விடுவதாக சுமதியை மிரட்டிவிட்டு சென்றார். 

    இதுகுறித்து சுமதி காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மொழியியல் பண்பாட்டு அரங்கில் நாடக விழாவை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை, தஞ்சைத் தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நிகழ்க் கலைத்துறை ஆகியவை இணைந்து நிகழ் நிலை நாடக விழா  வருகிற 6-ந் தேதி வரை நடத்துகின்றன. 

    இதன் தொடக்க விழா லாஸ்பேட்டையில் அமைந்துள்ள புதுவை மொழியியல்  பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நடைபெற்றது. அமைச்சர் சந்திர பிரியங்கா நாடக விழாவை தொடங்கி வைத்தார். 

    வைத்திநாதன் எம்.எல்.ஏ., கலை, பண்பாட்டுத்துறை செயலாளர்  நெடுஞ்செழியன், கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர்  கந்தன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேராசிரியர் பிரகதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாழ் வாதாரம் இழந்து நலிந்த நிலையில் உள்ள நாடக கஞைர்களுக்கு உதவிடும் வகையில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட 31 நாடகக் குழுக்கள், புதுவை பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்களுக்கு 3 நாடகங்கள் தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் 1 நாடக குழு என 35 குழுக்களுக்கு விழாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

    கொரோனா தொற்று காரணமாக விழாவை முழுமையாக வீடியோ பதிவு செய்து தஞ்சை தென்னகப் பண்பாட்டு மைய முகநூல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது. 

    இன்று(பிப்ரவரி 1) முதல் வருகிற 6-ந்தேதி  (ஞாயிற்றுக்கிழமை) வரை 7 நாட்கள் நாள்தோறும் 5 நாடகங்கள் வீதம் நடத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு கலைக் குழுவிற்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் 35 குழுக்களுக்கும் 10லு  லட்சம் வழங்கப்பட உள்ளது. 

    அதோடு இந்திய அரசு கலாச்சார அமைச்சகத்தின் முகநூல் பக்கத்திலும் இந்த நாடகங்கள் பதிவேடு செய்யப்பட இருப்பதால் புதுவை கலைஞர்களின் திறமை உலகளவில் வெளிப்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
    ×