search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்"

    • திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்கள் தமிழகப் பகுதியான கலைவாணன் நகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்தம்பித்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை மின்துறை தனியார் மயமாக்கப்படுவதாக வெளியான தகவல் மற்றும் அதற்கான அரசு வெளியிட்ட டெண்டர் அறிவிப்பால் புதுவை மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மின்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் புதுவை முழுவதும் பல்வேறு இடங்களில் மின்வெட்டுகள் ஏற்பட்டு அதனை சரி செய்ய ஆள் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கிராமப் பகுதிகளில் குறிப்பாக காலாப்பட்டு, சேதராப்பட்டு, பத்துக்கண்ணு சுற்றியுள்ள பகுதிகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டு காரணமாக தண்ணீர் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் நேற்று புதுவையில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. பத்துக்கண்ணு சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் இரவு வரை தொடர்ந்தது. இதனால் விழுப்புரம், திருக்கனூர் வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 2மணி நேரம் சேதராபட்டில் ஏற்பட்ட மின் தடை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்பவர்கள் தண்ணீர் கூட இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில் சேதராப்பட்டைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மந்தைவெளியில் சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டு மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இவர்கள் மறியலில் ஈடுபட்ட சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. கோரிமேடு பகுதியில் தமிழக-புதுவை எல்லையில் அமைந்துள்ள காமராஜர் நகரில் காலை முதலே தொடர் மின்தடை காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோரிமேடு எல்லையான மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திண்டிவனம்- சென்னை செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது.

    திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்கள் தமிழகப் பகுதியான கலைவாணன் நகரில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    காலாப்பட்டு பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் 4 இடங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மீனவகுப்பத்தைச் சேர்ந்தவர்கள் சின்ன காலாப்பட்டு ஜெயா தியேட்டர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து காலாப்பட்டு பஸ் நிறுத்தம் அருகிலும், கனகச்செட்டிகுளம் உள்ளிட்ட 4 இடங்களில் பொதுமக்கள் பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்தது. அலுவலக நேரத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுவையில் இருந்து சென்னை செல்லும் வாகனங்களும் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

    மறியல் காரணமாக போலீசார் கனகசெட்டிக்குளத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்புவதை அறிந்த பொதுமக்கள் அங்கேயும் சாலை மறியலில் ஈடுபட்டதால் கீழ் புத்துப்பட்டு வரை வாகனங்கள் சாலையின் இருபுறத்திலும் வரிசையில் நின்றது.

    • மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.
    • விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களுக்கான மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசின் அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து மின்துறை போராட்ட குழுவினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர்.

    இதனால் மின்துறை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே தொழிற்சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி வாக்குறுதி அளித்தார். இதனை ஏற்று மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.

    இந்த நிலையில் மின்துறையை தனியார் மயமாக்க அமைச்சரவை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மின் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

    விதிப்படி வேலை, புதிய மின் இணைப்பு அளிப்பதில்லை, மின் கட்டணம் கணக்கிட்டு ரசீது வழங்குவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தினர். மீண்டும் அரசு தரப்பில் வாக்குறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில். முன்மொழிவுக்கான கோரிக்கை வருகிற 30-ந் தேதி தொடங்கும். நவம்பர் 25-ந் தேதி விண்ணப்பிக்க இறுதிநாள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து மின் ஊழியர்கள் மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். புதுவை முழுவதும் மின்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் திரண்டனர்.

    அங்கு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு போராட்ட குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.

    போராட்டக்காரர்கள் தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை மூடினர். மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மின் கட்டண வசூல் மையங்களும் மூடப்படாததால் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

    ×