என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண்டும்- நாராயணசாமி வலியுறுத்தல்

    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெகாசஸ் விசாரணை எந்த வித பாரபட்சமுமின்றி நடப்பதற்கு பிரதமர் மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா  செய்ய  வேண்டும். வெளிப்படையான விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும். பிரதமர் தன்னையும் அந்த விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். 

    புதுவை மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கொரோனா தொற்றை குறைவாக காட்டுவதற்காக உமிழ்நீர் பரிசோதனையை குறைத்து ஒரு நாடகத்தை புதுவை அரசும், மருத்துவ துறையும் நடத்துகிறது. இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது. 

    இதற்கான காரணத்தை மருத்துவத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்வதில்லை. இதனை அரசும் கண்டு கொள்வதில்லை. மக்கள் உயிரை துச்சமென நினைத்து அரசும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர். 

    புதுவையில் மின்துறை தனியார் மயமாக்குகின்ற வேலையை ரங்கசாமி அரசு செய்து கொண்டிருக்கிறது. மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான காரணம் என்ன? மின்துறை நஷ்டத்தில் இயங்கவில்லை. பொதுமக்கள் வரிப்பணம் வீணாகவில்லை. 

    மின்துறையை தனியார் மயமாக்கினால் மின்கட்டனம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும். 

    நமது மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகளை தனியாரிடம் மத்திய அரசு தாரை வார்த்துக் கொடுக்க தயாராகி விட்டது. இதை முழுமையாக காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்க்கிறோம். 

    மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து மதசார்பற்ற அணிகளோடு இணைந்து போராட்டம் நடத்துவோம். மின்துறை தனியார் மயமாக்கலை எங்கள் அரசு ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மின்துறை அமைச்சர்களுக்கு ரங்கசாமி கடிதம் அனுப்ப வேண்டும். 

    இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×