என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    புதுவை அரசின் எச்சரிக்கையை மீறி தனியார் மயத்தை கண்டித்து திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம்- மின்துறை போராட்டக்குழு அறிவிப்பு

    மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது.

    புதுவை மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி தனியார் மயத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஊழியர்களின் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.

    போராட்டக்குழுவினர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர். இதனிடையே தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து போராட்டக்குழுவினர் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

    போராட்டத்தை தடுக்க தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் மின் துறையை அத்தியாவசிய பணிகள் துறையாக அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் நலத்துறையின் மூலம் சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று மாலை போராட்டக் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    மின்துறை தலைவர் சண்முகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்துறை ஊழியர்கள் அத்தியாவசிய பணிகளை செய்பவர்கள். அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பணி விதிகளுக்கு எதிரானது. எனவே வேலைநிறுத்தத்தை கைவிடும்படி துறைரீதியாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    மீறி போராட்டம் நடத்தினால் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம் பணியிடை முறிவு காலமாக கருதப்பட்டு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. எனவே வேலை நிறுத்தத்தை கைவிட்டு வழக்கம் போல பணிகளை செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

    இவ்வாறு சண்முகம் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் மின்துறை போராட்டக்குழுவின் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் தொடங்கும் என அறிவித்துள்ளனர். போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்துறை ஊழியர்களின் போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. புதுவை மக்களின் போராட்டம். எங்கள் போராட்டத்துக்கு ஆளும்கட்சியை தவிர்த்து அனைத்து அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், இயக்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன. முதல்-அமைச்சரும், அமைச் சர்களும், ஆளும் கட்சியினரும் மட்டும்தான் மவுனம் சாதித்து வருகின்றனர்.

    மின்துறை தலைவர் தனியார்மயமாக்கும் பணியை வேகப்படுத்தியுள்ளார். தனியார் மயமானால் துரித சேவை கிடைக்கும் என்கிறார். இதுவரை துரிதசேவை கிடைக்க வில்லையா? எங்களை போராட்டத்துக்கு அரசுதான் தள்ளியுள்ளது.

    வேலை நிறுத்த போராட்டத்தின் போது ஒட்டுமொத்த ஊழியர்களும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒன்று கூடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம். இதனால் ஏற்படும் மின் இடர் பிரச்சினைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசும், மின்துறை நிர்வாகமும்தான் பொறுப்பு. திட்டமிட்டபடி நாளை போராட்டம் தொடங்கி இதற்கு தீர்வு காணும்வரை நீடிக்கும்.

    எங்களின் நியாயமான போராட்டத்துக்கு மின்நுகர்வோர், அரசு ஊழியர், அரசியல்கட்சியினர் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×