என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையில் நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது.
    • கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி புதுவையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். மழையால் சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.
    • சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 36 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

    பயிற்சி நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு தேர்வில் சிறப்பிடம் பிடித்த 14 பேருக்கு சான்றிதழையும், கவாத்து பயிற்சியில் சிறந்து விளங்கிய 4 பேருக்கு கோப்பைகளையும் அமைச்சர் நமச்சிவாயம் வழங்கி பேசியதாவது:-

    சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதைப் பொருள் கடத்தலை தடுப்பதிலும் புதுவை போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    போலீஸ் துறையை நவீனப்படுத்தவும்,துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 92 பணியிடங்களை நிரப்பவும்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 390 கான்ஸ்டபிள்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

    இப்போது 60 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊர்க்காவல்படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் சைபர் குற்றங்களை தடுக்க சைபர் குற்ற போலீஸ் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி.சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் பிரதிக்ஷா கோத்ரா, தீபிகா, நாராசைதன்யா உட்படபல ர்கலந்துகொண்டனர்.

    • புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
    • இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.

    நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் மக்களோடு கலந்துரையாடி மக்களின் குறைகளை கேட்டார்.

    இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தெருவிளக்குகளை திடீர் நகர் பகுதி மக்களிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியின் போது மகேஸ் ரெட்டி ரஞ்சித், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, காமாட்சி சிறப்பு அழைப்பாளர் குணாளன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.
    • இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலீத்திர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்விக்கான புதிய பாட வகுப்புகள் தொடங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் பங்கேற்று புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

    தொழில் சார்ந்த கல்விக்கான புதிய பாடங்களான இயந்திரவியல், தையல் பிரிவு புதிய வகுப்புகளாக சேர்க்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சுகந்த குமாரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழில் கல்வி ஆசிரியர்கள் வீரா குமார் வைஷ்ணவி மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளியநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.
    • இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளி யநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு ரூபாய் பஸ் நிறுத்தப்பட்டது.

    விரைவில் இந்த பஸ்கள் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    ஒரு ரூபாய் பஸ்கள் இயக்கப்படாததால் மதகடி ப்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.

    அடுத்த பஸ்சில் அவர்கள் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் அதிகப்படியான கட்டணம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

    எனவே விரைவில் ஒரு ரூபாய் பஸ் போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    • காரை இரவலாக வாங்கி சென்று ரூ.12 லட்சத்துக்கு அடகு வைத்த கணவன்-மனைவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தயாளனிடம் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் காரை ரூ.12 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பாப்பாஞ்சாவடி கொட்டம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது40). இவர் வில்லியனூர் பைபாஸ் ரோடு அருகே கண்ணகி பள்ளி எதிரிலும் மற்றும் புதுவை குயவர் பாளையம் லெனின் வீதி மற்றும் கோரிமேட்டில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளாக புதுவை காமராஜர் நகரை சேர்ந்த பேட்டரி கடை நடத்தி வரும் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோரிடம் வியாபார விசயமாக சிவபாலனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவபாலன் வில்லியனூரில் உள்ள பேட்டரி கடையில் இருந்த போது உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் வந்தனர். அவர்கள் சிவபாலனிடம் தங்களது கார் விபத்துக்குள்ளாகி விட்டப்படியால் அவசர வேலை காரணமாக சென்னை செல்ல இருப்பதால் தங்களுடைய காரை கொடுத்து உதவுமாறு கேட்டனர்.

    அன்று மாலையே காரை திருப்பி கொடுத்து விடுவதாக அவர்கள் சிவபாலனிடம் தெரிவித்தனர்.

    அவர்களது வார்த்தையை நம்பி சிவபாலன் தனது காரை அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் மறுநாள் வரை அவர்கள் காரை ஒப்படைக்கவில்லை. பலமுறை சிவபாலன் கேட்டபோது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிவபாலன் திண்டிவனம் சென்ற போது அங்கு தனது கார் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரில் இருந்தவரிடம் சிவபாலன் விசாரித்தார். அப்போது அவர் மரக்காணத்தை சேர்ந்த தயாளன் என்பது தெரியவந்தது. தயாளனிடம் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் காரை ரூ.12 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    இதையடுத்து சிவபாலன் இதுபற்றி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் மருத்துவ கலந்தாய்வு என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை போல நடந்து வருகிறது.
    • மேலும் இதே போல அவசரமாக உரிய நடைமுறை இல்லாமல் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் மருத்துவ கலந்தாய்வு என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை போல நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி அண்டை மாநிலங்களில் தர வரிசை பட்டியல் வெளியிட பட்டு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்து 2-வது கலந்தாய்வு நடந்து வருகிறது.

    ஆனால், புதுவையில் வரை தரவரிசை பட்டியல் கூட வெளியி டப்படா தது மக்களிடமும் மாணவர்க ளிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பிட்ட காலகட்டத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என தெரிந்தும் வேண்டு மென்றே திட்டமிட்டு காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது முதல்- அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இதே போல அவசரமாக உரிய நடைமுறை இல்லாமல் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் முதல்- அமைச்சர் தலையிட்டு மருத்துவ படிப்புக்கான சென்டாக் தரவரிசை பட்டியலை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் வீட்டின் கீழ் தளத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
    • ஆனால் அந்த பணத்தை தரவில்லை. திடீரென அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை வேல்ராம்பட்டு ஆதிமூலம் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி.

    இவர் வீட்டின் கீழ் தளத்தில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அப்பகுதியில் உள்ள பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். அழகர்சாமி தனது மனைவி செந்தமிழ் செல்வியுடன் இணைந்து ரூ.50 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் என பல சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.இதில் சீட்டு கட்டி ஏலம் எடுத்தவர்களுக்கு கடைசியாக பணம் தருவதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த பணத்தை தரவில்லை. திடீரென அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த சீட்டு கட்டியவர்கள் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்துள்ளனர். பலகோடி ரூபாய் அவர்கள் ஏமாற்றியதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் நியூட்டன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தம்பதியை தேடிவருகிறார்.

    • வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் பஞ்சர் கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் கோட்டைமேடு கண்ணகி நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது57). இவர் வில்லியனூர் கோட்டைமேடு-விழுப்புரம் மெயின் ரோட்டில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு அய்யனார் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில் தலையில் அடிப்பட்ட அவருக்கு ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து விட்டது.

    இதனால் அவர் பஞ்சர் கடையை நடத்த முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அவ்வப்போது தனது மனைவியிடம் தன்னால் குடும்பத்துக்கு சம்பாதித்து தரமுடியவில்லையே என்று வேதனையுடன் தெரிவித்து வந்தார்.

    இந்தநிலையில்  விஜயா சுயஉதவி குழுவில் பணம் செலுத்துவதற்காக பக்கத்து தெருவிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அய்யனார் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யனார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பிலும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும்.
    • அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ஜிப்மரில் மருத்துவக் கல்விக்கான இடங்களில் புதுவைக்கு இட ஒதுக்கீடு தொடரும் நிலையில் வேலை வாய்ப்பி லும் இந்த இடஒதுக்கீடு தொடர வேண்டும். ஜிப்மரின் அனைத்து பதவிகளிலும் 25 சதவீத இடங்கள் புதுவை இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இதனை அடிப்படையாக கொண்டு ஜிப்மர் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செவிலியர் பதவிக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகுதியா னவர்கள் பட்டியலை பெற்று தேர்வு நடத்த வேண்டும். விண்ணப்பிக்கும் தகுதியில் உள்ளூர் மொழிகட்டா யம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இணைக்க வேண்டும்.

    அப்படி இல்லையெனில் மாநில நலனுக்கும், நோயாளிக ளுக்கும் துரோகம் இழைக்கும். தற்போதைய அறிவிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும். அத்துடன் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ., அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சேதராப்பட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேதராப்பட்டு பகுதியில் 10 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.
    • போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மூலம் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேதராப்பட்டு பகுதியில் 10 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது. பிறகு 5 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு 5.10 வரை மின்சாரம் இருந்தது.மீண்டும் 5.10 மணி முதல் 8.15 வரை 3 மணிநேரத்திற்கு மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் பெற முடியாமல் தவித்தனர்.

    இதனை கண்டித்து சேதராப்பட்டு மந்தைவெளி பகுதியில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் மூலம் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. தினந்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால் மின்துறை அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் பொதுமக்கள் மற்றும் மின்துறை அதிகாரி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்ததின் மூலம் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    • மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வாழ்வாதாரதிட்டத்தின் வழிகாட்டுதல்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இதற்காக நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை4 வாரங்களுக்கு தீவிர பிரசாரங்களை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது நடைமுறைப்படுத்த உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய ஊரக வாழ்வாதாரதிட்டத்தின் வழிகாட்டுதல்படி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் ஆண்டுதோறும் நவம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த தினத்தில் புதுவையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள அரியாங்குப்பம், வில்லியனூர், காரைக்கால் வட்டாரங்களில் 3-ம் பாலின வள மையங்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு விடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை4 வாரங்களுக்கு தீவிர பிரசாரங்களை மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது நடைமுறைப்படுத்த உள்ளது.மகளிர் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

    பெண்கள் புகார் செய்யும் வசதி அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    இவ்வாறு சாய்.ஜெ.சரவணன்குமார் கூறினார்.

    ×