என் மலர்
புதுச்சேரி

காரை இரவலாக வாங்கி சென்று ரூ.12 லட்சத்துக்கு அடகு வைத்த கணவன்-மனைவி
- காரை இரவலாக வாங்கி சென்று ரூ.12 லட்சத்துக்கு அடகு வைத்த கணவன்-மனைவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தயாளனிடம் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் காரை ரூ.12 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பாப்பாஞ்சாவடி கொட்டம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது40). இவர் வில்லியனூர் பைபாஸ் ரோடு அருகே கண்ணகி பள்ளி எதிரிலும் மற்றும் புதுவை குயவர் பாளையம் லெனின் வீதி மற்றும் கோரிமேட்டில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக புதுவை காமராஜர் நகரை சேர்ந்த பேட்டரி கடை நடத்தி வரும் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோரிடம் வியாபார விசயமாக சிவபாலனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவபாலன் வில்லியனூரில் உள்ள பேட்டரி கடையில் இருந்த போது உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் வந்தனர். அவர்கள் சிவபாலனிடம் தங்களது கார் விபத்துக்குள்ளாகி விட்டப்படியால் அவசர வேலை காரணமாக சென்னை செல்ல இருப்பதால் தங்களுடைய காரை கொடுத்து உதவுமாறு கேட்டனர்.
அன்று மாலையே காரை திருப்பி கொடுத்து விடுவதாக அவர்கள் சிவபாலனிடம் தெரிவித்தனர்.
அவர்களது வார்த்தையை நம்பி சிவபாலன் தனது காரை அவர்களிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் மறுநாள் வரை அவர்கள் காரை ஒப்படைக்கவில்லை. பலமுறை சிவபாலன் கேட்டபோது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிவபாலன் திண்டிவனம் சென்ற போது அங்கு தனது கார் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரில் இருந்தவரிடம் சிவபாலன் விசாரித்தார். அப்போது அவர் மரக்காணத்தை சேர்ந்த தயாளன் என்பது தெரியவந்தது. தயாளனிடம் உதயகுமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் காரை ரூ.12 லட்சத்துக்கு அடமானம் வைத்து பணம் பெற்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து சிவபாலன் இதுபற்றி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






