என் மலர்
புதுச்சேரி
- 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.
- மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி:
சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடற்கரை சாலையில் யோகாவில் உலக சாதனை செய்தனர்.
நிகழ்ச்சியில் ஐஸ் கட்டி மீது அமர்ந்து சுமார் 2 மணி நேரம் யோகாசனம் செய்தல், ஆணியின் மீது படுத்து யோகாசனம் செய்தல், ரூபி க்யூப் செய்து கொண்டே யோகாசனம் செய்தல், பானையின் மீது படுத்து யோகாசனம் செய்தல், பந்துகள் மீது படுத்து யோகா சனம் என 64 வகையான யோகாசனங்களை 2 மணி நேரம் செய்து அசத்தினர்கள்.
நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் செய்த யோகா நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.
மாணவர்களுக்கு நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும் வகையில் யோகா நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு உலக சாதனை புரிய வேண்டும் என்பதற்காக ஆணிகள் மீதுப்படுத்தும் பந்துகள் பானைகள் மீது யோகா செய்தும் ஐஸ்கட்டிகள் மீது அமர்ந்து யோகா செய்து மாணவ- மாணவிகள் அசத்தினர்கள்.
மாணவர்கள் தங்களது மனதை ஒருநிலைப்படுத்தி நினைவு ஆற்றலை அதிகப்படுத்த இத்தகைய யோகா சனங்கள் உதவும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
- கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
- 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜிப்மர் மருத்துவமனையில் ஜூன் 19, 2024 அன்று விஷச்சாராயம் அருந்திய 19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில், 10 நோயாளிகளுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட சிரமம் இருந்ததால் அவர்களுக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 நோயாளிகளும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 16 நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனைத்து நோயாளிகளுக்கும் பலதரப்பட்ட மருத்துவ குழுக்களால் மிகுந்த கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.
- போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அனிதா நகரை சேர்ந்த பிரபல தாதா கர்ணா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்தார்.
நன்னடத்தை விதிப்படி தனக்கு விடுதலை கோரி கர்ணா மனுத்தாக்கல் செய்தார். அதை புதுவை அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில் அவர் தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோலுக்கு விண்ணப் பித்தார். ஏற்கனவே பலமுறை அவர் பரோலில் சென்று சரியாக சிறைக்கு திரும்பியதால் 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த 13-ந் தேதி மீண்டும் சிறைக்கு வர வேண்டிய கர்ணா திரும்பாததையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில் கர்ணா தனது குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தேடப்படும் குற்றவாளியாக புதுவை காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில் அவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமான 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே முதலியார்பேட்டை அனிதாநகரில் உள்ள கருணாவின் பூட்டிய வீட்டை கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனையிட்டனர்.
கர்ணாவின் நெருங்கிய கூட்டாளிகள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவையில் இருந்த ரவுடி கர்ணாவை புதுச்சேரி சிறப்பு படை போலீசார் தலைமறைவான 4 நாட்களுக்கு பிறகு கைது செய்தனர். தொடர்ந்து கர்ணாவை இன்று அதிகாலை புதுச்சேரிக்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும்.
- தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்தும் இன்று மின்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். அ.தி.மு.க.வினர் தங்கள் கழுத்தில் மின்சார ஒயர்களை மாட்டிக் கொண்டும், அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 முறை மின்கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தலில் பா.ஜனதாவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தோடு, அபராத கட்டணம், நிலை கட்டணம், மின்விலை ஈடுகட்டுவதற்கான கூடுதல் வரி கட்டணம், காலதாமத கட்டணம் என்ற தலைப்புகளிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது.
மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு, எங்களால் எதுவும் செய்யமுடியாது என கூறுவது வெட்கக் கேடான செயலாகும். புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 150 யூனிட் மின்சாரம் மானியமாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி எதிர்காலத்தில் தனியாருக்கு மின்துறையை தாரை வார்த்து அவர்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவர்னர் இப்பிரச்சினையில் தலையிட்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கோமளா, மாநில இணை செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டு ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, காந்தி, கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
- இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பக்ரீத் பண்டிகை என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்களால் தியாகத்தின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தியாகம், இரக்கம், நன்றியுணர்வு போன்ற மனித மாண்புகளின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் இதுபோன்ற பண்டிகைகள் சமூகங்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்தி நல்லிணக்க உணர்வை வளர்க்க உதவுகின்றன.
பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இந்த புனிதமான நாளில் அல்லாஹ்வின் ஆசீர்வாதமும் கருணையும் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும் என்று கூறி, அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
- அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளு மன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
அதனை தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம் தலைமையில் ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் தனியார் ஓட்டலில் ரகசிய கூட்டம் நடத்தி அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும் என போர்க் கொடி உயர்த்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணனை சந்தித்தனர்.
மதியம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அங்காளன் எம்.எல்.ஏ. தனித்தனியாக கவர்னரை சந்தித்துபேசினர்.
இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் கேட்ட போது தொகுதியில் நிறை வேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து முறையிட்டதாக தெரிவித்தனர்.
- கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில் அதிகாரிகள் இன்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது திருநள்ளாறு நளன் தீர்த்தப் பகுதியில் கெட்டுப்போன பரிகார உணவுகள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
ஆய்வின் முடிவில் யாசகர்களுக்கு வழங்குவதற்காக விற்பனை செய்த கெட்டுப்போன பரிகார உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
- கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.
தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டள்ளார்.
இதுகுறித்து மாநில பொது செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:-
பாஜக மாநில தலைவர் வழிகாட்டுதலின்படி கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சியின் நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதால் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயருகிறது.
- மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணம் 45 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய மின் கட்டண உயர்வு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணம் ரூ.2.25ல் இருந்து ரூ.2.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ.3.25ல் இருந்து 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை தவளகுப்பம் அடுத்த ஆண்டியார் பாளையம் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அப்போது அவர்களை அங்கிருந்தவர்கள் துரத்தி சென்றனர். இதில் அவ்வழியாக வந்த தானம்பாளையத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை பேனர் கிழித்ததாக கூறி தாக்கினர். தகவல் அறிந்தவுடன் தவளகுப்பம் போலீசார் தாக்கியவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதில் ஆண்டியார் பாளையதை சேர்ந்த ஜெயகாந்தனையும் உடன் அழைத்து சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையறிந்த ஜெயகாந்தனின் ஊர் மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் போலீசாரிடம் விசாரிக்க வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பதில் எதும் கூறாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென தவளகுப்பம் போலீஸ் நிலையம் முன்பு புதுவை-கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
இதனால் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நள்ளிரவு வரை நீடித்த பேச்சு வார்த்தையின் முடிவில் பிடிபட்ட ஜெயகாந்தனை போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நேற்று இரவு அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
- 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து விஷ வாயு பரவியது.
விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவில் வசிக்கும் செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகிய 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும் 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அந்த பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் வீடுகளில் உள்ள கழிவறைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். மேலும், அந்த பகுதியின் இறுதியில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாகத்தான் விஷ வாயு பரவியது. இதனால் பொதுப்பணித் துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை சீரமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் 4-வது தெருவில் வசிக்கும் புஷ்ப ராணி (வயது38) கழிவறைக்கு சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மக்கள் திரண்டு நிற்கின்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
- பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறையில் வெளியான விஷ வாயுவால் 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
இறந்த 3 பெண்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்கூராய்வு நடந்தது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, இறந்த செந்தாமரை, காமாட்சி ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், சிறுமி செல்வராணி குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரண தொகை போதாது என்றும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் கம்பன் நகரில் தரையில் அமர்ந்து கட்சி கொடிகளோடு கோஷம் எழுப்பி மறியல் செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள், 3 பெண்கள் மரணத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக சீர்கேட்டுக்கு பொறுப்பேற்று அரசு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.விழுப்புரத்திலிருந்து வந்த பஸ்கள் மூலக்குளம் வழியாக திரும்பிச்சென்றன. மறுபுறத்தில் இந்திராகாந்தி சிலை வரை பஸ்கள் செல்ல முடியாமல் நின்றது.
சுமார் அரைமணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தின்போது மூலக்குளம் வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சிற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டனர்.
நேற்று இரவில் பாதாள சாக்கடை திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மீண்டும் மறியல் போராட்டம் நடந்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






