என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர்.
    • கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இன்று நடைபெற்றது.

    இதையொட்டி காலை 9.25 மணிக்கு கவர்னர் மாளிகையிலிருந்து கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கார் மூலம் புதுச்சேரி சட்ட சபைக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை செயலாளர் தயாளன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து கவர்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கவர்னரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்டசபை மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். சட்ட சபையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கவர்னரை வரவேற்றனர். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்தவுடன், காலை 9.30 மணிக்கு சபை நிகழ்வுகள் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

    கவர்னர் தனது உரையை தொடங்க முயன்றபோது, எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், செந்தில் குமார், சம்பத், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் எழுந்து, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கவில்லை.


    இந்த நிலையில் கவர்னர் உரையில் எந்த மக்கள் நலத்திட்டமும் இருக்காது என குற்றம்சாட்டி விமர்சித்து பேசினர்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் என வைத்துக்கொண்டாலும், நான் என்ன சொல்லப் போகிறேன் என முழுமையாக கேட்டுக்கொண்டு, அதற்கு பின் பதில் வைத்தால் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். தயவு செய்து அமர்ந்து என்ன உரையாற்றப் போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள், தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், அதை ஆளும் கட்சி திருத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் அற்புதமான சிந்தனை இருந்தால் அதையும் எடுத்து வையுங்கள். அதை ஆளும் கட்சி எடுத்துக் கொள்ளட்டும். தயவு செய்து அமருங்கள், நான் எனது உரையை தொடங்குகிறேன் எனக்கூறி உரையாற்ற தொடங்கினார்.

    இதையேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்டனர். சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கவர்னர் உரையை அமைதியாக கேட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை. கடந்த பட்ஜெட் அறிவிப்புகளையே அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறினர்.

    தொடர்ந்து 9.45 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில், கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி சபையிலிருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

    • பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
    • ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    நாளை 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது.

    நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, வருகிற 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை கூட்டத் தொடரில் வழக்கம் போல், மாநில அந்தஸ்து, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ரேசன் கடை திறக்காதது குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.

    இதற்கிடையில், பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    மேலும், தங்களுக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவி கேட்டும் போர்க்கொடி உயர்த்தினர்.

    டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி, பாஜக தலைவர்களை சந்தித்து பாஜக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    அதிருப்தி எம்.எல். ஏ.,க்களின் பிரச்சனை பாஜகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும், என்.ஆர்.காங்.,-பாஜக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளர் சுரானா, மத்திய மந்திரியின் சமாதான பேச்சுகளை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை. மேலிட பொறுப்பாளரை சந்திக்காமலும் அதிருப்தி எம்எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    சட்டசபை கூட்ட தொடரில் எதிர்கட்சியினர் போல, ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

    சமாதானப்படுத்த வந்த பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசிய போது, கூட்டணி அரசை கண்டித்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி வரிசையில் அமர விரும்பினால், அமர்ந்து கொள்ளட்டும் என தெரிவித்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதையொட்டி தலைமை செயலாளர் சரத் சவுகான் அரசு செயலாளர்கள், இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்ற கூட்ட விவாதங்கள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள் சட்டசபை வளாகத்தில் இருக்க வேண்டும். அமைச்சர்கள் பதில் அளிக்க தேவையான பதில்களை உடனுக்குடன் வழங்க வேண்டும். எதிர்மறையான விவாதங்களின்போது தேவையான ஆதாரங்களை முன்கூட்டியே தயார் செய்து அமைச்சர்களுக்கு வழங்கிட வேண்டும்.

    கேள்வி நேரங்களின் போது விவாதிக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் கேள்விகளுக்கான பதில்களை 48 மணி நேரத்துக்கு முன்பாகவே வழங்க வேண்டும். கேள்விகளை தள்ளி வைக்க வேண்டும் என்றாலும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவிக்க வேண்டும்.

    தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட செயலாளர், அமைச்சரின் அனுமதியை பெற்று சட்டசபை செயலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பூஜ்யநேரம் முடியும்வரை அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும். முக்கியமான விவரங்கள் தொடர்பாக துறை செயலாளர்கள் தலைமை செயலாளருக்கு விளக்கமான குறிப்பு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே மாங்குரோவ் காட்டில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

    சுனாமி பேரழிவின் போது, கடற்கரையில் வளர்ந்திருந்த அடர்ந்த மாங்குரோவ் காடுகள் தடுப்புச் சுவராக நின்று சுனாமி அலைகளை தடுத்து, கரையோரம் வாழும் மக்களை காத்தன. இதனால், சுனாமிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடற்கரையோரம் மாங்குரோவ் காடுகள் வளர்க்க அரசுகள் பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, தேங்காய்த் திட்டு துறைமுக பகுதியில் ஏற்கனவே இருந்த மாங்குரோவ் காடுகளுடன், புதிதாக பல இடங்களில் மாங்குரோவ் செடிகள் நட்டு வளர்க்கப்பட்டன. அவை சிலரது சுயநலத்தால் தற்போது அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேங்காய்த் திட்டு துறைமுகத்தின் தெற்கு பக்கம் வீராம்பட்டினம் கரையோரம் மாங்குரோவ் மரங்களுடன், கருவேல மரங்களும் சேர்ந்து வளர்ந்து இருந்தது.

    இதற்கிடையில், அரசு இடத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் மாங்குரோவ் மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் யாரோ அழித்து ஒரே இடத்தில் குவித்து வைத்து இருந்தனர். நேற்று இரவு வெட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் அருகில் இருந்த கருவவேல மரங்களும் மற்றும் மாங்குரோவ் மரங்களும் தீயில் கருகியது.

    புதுச்சேரி மற்றும் கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரம் அருகே கரையோரம் பல ஏக்கரில் இருந்த மாங்குரோவ் காடுகள் ஏற்கனவே அழிந்து விட்டது.

    தற்போது, வீராம்பட்டினம் முகத்துவார பகுதியில் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மரங்கள் அல்லது காய்ந்த சருகுகள் தானாக எரிய வாய்ப்பு இல்லை. எனவே, இதுகுறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் மாநில முதல்-அமைச்சர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி நிதி ஆயோக் அழைப்பு விடுத்திருந்தது. புதுச்சேரியை பொருத்தவரை கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பதிலாக டெல்லி கூட்டங்களில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று வந்தார்.

    ஆனால் இந்த முறை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்ததாக கூறி இந்தியா கூட்டணி மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

    இதனால் மத்திய அரசு பா.ஜ.க. ஆளும் மாநில முதல்- அமைச்சர்கள் மற்றும் கூட்டணி முதல்- அமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என விரும்பியது.

    இந்த நிலையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

    மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பேச உரையும் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று மாலை முதல்- அமைச்சர் ரங்கசாமி சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதல்- அமைச்சர் ரங்கசாமி டெல்லி செல்லாமல் நிதி ஆயோக் கூட்டத்தை திடீரென புறக்கணித்துள்ளார்.

    இது பா.ஜ.க.வை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. வை ஆதரிக்கும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்கொடி தூக்கி உள்ளனர்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி அரசுக்கு தரும் ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் ரங்கசாமி அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்றும் புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

    இது முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரசாருக்கு பா.ஜ.க. மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு இருக்கும் போது எதற்காக சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்று என்.ஆர்.காங்கிரசார் கேள்வி எழுப்பினர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி தரப்பில் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெறுமாறு பா.ஜ.க. தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பா.ஜ.க. விலக்கி கொள்ளவில்லை.

    இதனாலும், பட்ஜெட் கூட்ட தொடர் கூட உள்ள நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. தலைமை சரியாக கையாண்டு சமரசம் செய்யாததும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனாலேயே நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

    • பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26) இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு,புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இவர் வேலைபார்க்கும் ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மிலன் அருள்மணி (46) என்பவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றுதருவதாக கூறி அவரிடம் இருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.

    பின்னர் படிப்படியாக பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன் மொத்தம் ரூ.1¼ லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார்.

    அதனை அடுத்து பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் சரிபார்த்தார். அப்போது அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மிலன் அருள்மணி பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழை போலியாக தயாரித்து தபாலில் பாலமுருகனுக்கு அனுப்பியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சிடைந்த பாலமுருகன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த மிலன் அருள்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம்.
    • பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் தோல்வி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர், பாஜக அமைச்சர்களின் அணுகுமுறை, செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    அவர்கள் ஏற்கனவே டெல்லியில் மத்திய மந்திரி மெக்வால், பாஜக தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் மீது புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களை சமரசப்படுத்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார். அவருடைய சமாதான முயற்சியும் கைகூடவில்லை.

    இதனிடையே புதுவை மாநில பா.ஜனதா செயற்குழுவில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியிடமும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர்.


    அதோடு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றனர். 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டும், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் அமித்ஷாவை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு திரும்பிவிட்டனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து கூட்டத்தொடர் 15 நாட்கள் வரை நடைபெறும் என தெரிகிறது. எம்.எல்.ஏ.க்கள் சமரசம் அடையாத நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிருப்தியை வெளிப்படுத்தலாம் என கூறப்படுகிறது.

    இது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். இதனால் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய இறுதிகட்ட முயற்சியை பாஜக தலைமை எடுத்துள்ளது. இதற்காக நாளை (சனிக்கிழமை) பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வருகிறார். அவர் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சமரசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    • வருகிற 31-ந்தேதி காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் கடந்த மாதம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுச்சேரி அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதன்படி வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

    ஆகஸ்டு 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று தெரிவித்தார்.

    15-வது சட்டசபையின் 5-வது கூட்டம் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சபையில் கவர்னர் உரையாற்றுகிறார். 1-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்கூட்ட தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார்.

    • அரசியல் கட்சிகளும் ரேசன்கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன.
    • பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரேசன் கடைகள் மூடப்பட்டன.

    ரேசன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் ரேசன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

    அரசியல் கட்சிகளும் ரேசன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. நடந்து முடிந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் ரேசன் கடைகளை எப்போது திறப்பீர்கள்? என பெண்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது விரைவில் ரேசன்கடைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதையடுத்து கடந்த 7 ஆண்டாக மூடிக்கிடக்கும் ரேசன்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதியும் அளித்துள்ளார். இதையடுத்து ரேசன்கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி, அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சிகப்பு ரேசன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் கடந்தகாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிகப்பு ரேசன்கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது.

    இதோடு பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி ரேசன்கடைக்கு சென்றார். வீட்டில் டென்னிஸ் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த அவர் அந்த உடையிலேயே சென்றார்.

    அங்கு ரேசன்கடை ஊழியர்களிடம் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை கேட்டு பெற்று அதன் தரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ரேசன்கடைகளில் மாதந்தோறும் என்ன பொருட்கள் வழங்கப்படுகிறது? என்ற விபரத்தையும் கேட்டறிந்தார்.

    புதுவையில் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க டெண்டர் விடப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்காகவே தமிழக ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை முதலமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டுள்ளார்.

    • சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.
    • நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணியை நாய் துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவை கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உலா வருகிறது. இந்த நாய்கள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை துரத்திச்சென்று மிரட்டுவது வழக்கமாகி வருகிறது.

    கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் விரட்டி விரட்டி கடித்து குதறியது.

    அருகில் இருந்த பொதுமக்கள் நாயை விரட்டிவிட்டு காயம்பட்ட சுற்றுலா பயணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடற்கரையில் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    • மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உள்ளூர் முதல் வெளிநாடுகள் வரையிலான பலவிதமான மது பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காகவே தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

    புதுவையில் குறைந்த விலையில் விற்கப்படும் மதுபானங்களை பக்கத்து மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர்கள் வாங்கி சென்றும் அருந்தி வருகின்றனர். அவர்கள் சில நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த விஷசாராய சாவு சம்பவத்துக்கு புதுவையில் இருந்து மெத்தனால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுபோல் புதுவையில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி சென்று குடித்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்து போனார்கள். இதனால் புதுவை சாராயக் கடைகளில் புதுவை கலால் துறை அதிகாரிகள் அனைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் புதுவையில் உள்ள மதுபான கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக மதுபானங்களில் சிலர் கொள்ளை லாபம் ஈட்ட கலப்படம் செய்து விற்கப்படுவதாக கலால் துறைக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப் படி தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் கலால் துறை அதிகாரிகள் புதுச்சேரி வில்லியனூர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரும் உடன் சென்றனர்.

    ஆய்வின்போது அனைத்து மது பாட்டில்களிலும் ஹாலோகிராம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும் பாட்டில்களின் சீல்கள் சரியாக உள்ளதா? என்றும் சோதனையிட்டனர்.

    மேலும் உயர் ரக மது பாட்டில்களில் மாதிரி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்த கலால் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

    கலால் துறையினரின் இந்த திடீர் சோதனையால் மதுபான கடைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அங்கு மது குடித்துக்கொண்டிருந்த மது பிரியர்களும் தாங்கள் அருந்திய சரக்கு ஒரிஜினல்தானா? என்ற குழப்பத்துக்குள்ளானார்கள்.

    • பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
    • உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர். காங்., பா.ஜனதா கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.

    தோல்விக்கு பொறுப்பேற்று தற்போதுள்ள அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு, வெங்கடேசன், மற்றும் பா.ஜ.க. ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    ரகசிய கூட்டம் நடத்திய கையோடு, மாநில பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.யுடன் டெல்லி சென்று தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ஆகியோரை சந்தித்தனர். ஆனால் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முடியாமல் திரும்பினர்.

    இதற்கிடையே பா.ஜ.க. மாநில பொறுப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்ட நிர்மல்குமார் சுரானா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த மத்திய மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால், சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், அதிருப்தி எம். எல்.ஏ.க்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கும் பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சர் மீது புகார் தெரிவிப்பதோடு புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்துவார்கள் என கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.
    • தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி ரவுடி திருவேங்கடம், புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரை, ஆகியோரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

    போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பயந்து தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பிற மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். புதுச்சேரியிலும் தமிழகத்தை சேர்ந்த ரவுடிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுவை போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா உத்தரவின் பேரில் புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அண்ணாசாலை, புஸ்சிவீதி, காந்தி வீதி, சுப்பையாசாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டனர்.

    இதே போல் அரியாங்குப்பத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.


    மேலும் தங்கும் விடுதிக்கு வருபவர்கள் விவரங்களை நிச்சயம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஓட்டல் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

    சந்தேகத்திற்கு இடமளிக்கும்வகையில் யாரும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ, காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் தமிழக எல்லை பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனை செய்த பின்னரே புதுச்சேரிக்கு அனுதிக்கின்றனர்.

    திண்டிவனம் சாலையில் கோரிமேட்டிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளத்திலும், கடலூர் சாலையில் முள்ளோடையிலும், விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டிலும் மற்றும் தமிழக எல்லையில் இருந்து வரும் உள்புற சாலைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ×