என் மலர்
புதுச்சேரி
- தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
- புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.
வானூர்:
புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.
- பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
- ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது குறுக்கு தெருவில் கடந்த மாதம் 11-ந் தேதி பாதாள சாக்கடை மேன்ஹோலில் உருவான விஷவாயு கழிவறை வழியாக வெளியேறியது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த செல்வராணி(16), செந்தாமரை(80), அவரின் மகள் காமாட்சி(45) ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர். கனகன் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர இயங்காத தால்தான் விஷவாயு உருவானதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
பாதாள சாக்கடையுடன் இணைப்பு கொடுத்த இடத்தில் வாட்டர் சீல் பி-டிராப் பொருத்தாததால்தான் விஷவாயு தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள கழிவறைகளுக்கு இலவசமாக இந்த டிராப் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நேற்று மாலை துர்நாற்றம் நெடி அதிகரித்தது. இதனால் புதுநகர், மூகாம்பிகை நகர் பகுதி மக்கள் அச்சமடைந்து உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். சிலர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்று விசாரித்தனர்.
மின்தடையால் பணி நடைபெறவில்லை. எனவே துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்தனர். துர்நாற்றம் தாங்க முடியாமல் நேற்று இரவு 8 மணிக்கு அப்பகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ரெட்டியார் பாளையம் கம்பன்நகர் பஸ்நிறுத்தம் எதிரே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சிவசங்கரன் எம்.எல்.ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகளோடுஅங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரவு 9.30 மணியை தாண்டியும் மறியல் நடந்தது. மறியல் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் இரவு 10 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
- புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சவால்கள் நிறைந்த காலத்தில், குறிப்பாக எதிர் கட்சிகள் பலமான கூட்டணியை தாண்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது. புதுவை தொகுதியில் பாஜக தீவிரமாக போட்டியிட்டு 30 சட்டமன்ற தொகுதியிலும் கடுமையாக உழைத்து தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
தேர்தலில் சுமார் 3 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். இது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் வளர்ச்சி. இன்னும் 2 ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பாக சமூகவலைதளங்களில் காங்கிரசின் குடும்ப அரசியல், துஷ்பிரயோகங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வேலைகளை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.
புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும். தேசிய தலைவர் நட்டா, மோடி ஆகியோர் வழிகாட்டுதல்களோடு இந்த பிரச்சனைகளை களைவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறும். புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவும். புதுவை மீது மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
- மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது46). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்ஷா (வயது13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை கொடுத்தனர்.
ஆனாலும் மறுநாள் காலை காய்ச்சல் அதிகரித்ததால் சுபிக்ஷா பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் 3 மணி முதல் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார், மாலையில் அங்குள்ள தனியார் கிளினிக் டாக்டரிடம் சுபிக்ஷாவை காண்பித்தனர்.
அங்கிருந்த டாக்டர் கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தார். அதன்படி இரவு 10 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம் சீராக வில்லை.
மேலும் இ.சி.ஜி.யும் சீராக இல்லாததால் நள்ளிரவு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபிக்ஷா, பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
- பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள்.
புதுச்சேரி:
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் இன்று புதுவையில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுவை அரசு சார்பில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது நமக்கு நாமே சேர்த்துக்கொள்ளும் சிறப்பு. இந்த புனிதநாளில் தான் முத்துக்குமரப்ப ரெட்டியார் மறைந்துள்ளார். ரெட்டியார் சமூகம்தான் புதுவையில் அதிகளவு நிலம் வைத்திருந்தனர். அந்த சமூகத்திலிருந்துதான் முத்துக்குமரப்ப ரெட்டியார் சோசலிச இயக்கத்தை ஆரம்பித்து பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிராக விடுதலை போராட்டத்தை தொடங்கினார்.
நெட்டப்பாக்கத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களுக்கு விடுதலை பெற்று, முதல் முதலாக தேசியக் கொடியை, சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த பெருமைக்குரியவர். சமுதாய நலனே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளனர். அவர்களின் வழியில் நம் பயணத்தை தொடர்வதுதான் நம் சமூகம் முன்னேற உகந்ததாக அமையும்.
ஓரிரு நாளில் புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும். இந்த முறை பட்ஜெட் சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எந்த திட்டங்கள் பாதியில் நிற்கிறதோ அதற்கு முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும். எழுச்சி மிகு புதுவை என்பதே எங்கள் நோக்கம், அதற்கான பயணம் தொடரும்.
அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் விரைவில் இலாகா ஒதுக்கு வார் என நம்புகிறேன். பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள். புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி முதலில் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
என்கவுண்டர் கூடாது என்பதல்ல என் கருத்து. என்கவுண்டர் வராமல் இருக்க ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையிலான கட்ட பஞ்சாயத்துகள் இருக்கக்கூடாது என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, புதுவை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
- அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மத்திய மந்திரி கிஷன்ரெட்டி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர், சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பா.ஜ.க. அமைச்சர்களை மாற்ற வேண்டும். என்.ஆர்.காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் இன்னும் ஒரு படி மேலே போய் புதுவை அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் புரையோடிப் போயுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகங்கள் புரோக்கர்கள் மூலம் செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
அதோடு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு சென்று தேசிய தலைவர் நட்டா, அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய மந்திரி மெக்வால் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டனர்.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய தேசிய தலைமை மேலிட பார்வையாளர் சுரானாவை புதுவைக்கு அனுப்பியது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து புகார் தெரிவிக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேரம் கேட்டு வருகின்றனர்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுவை மாநில பா.ஜனதா செயற்குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சுகன்யா கன்வென்சன் சென்டரில் கூடுகிறது. மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகிக்கிறார்.
கூட்டத்தில் பா.ஜ.க. அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி, புதுவை மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோரும் பங்கேற்கின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மத்திய மந்திரி கிஷன்ரெட்டி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியையும் சந்திப்பார் என்று கட்சி வட்டார ங்கள் தெரிவிக்கிறது.
- என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.
- புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேர்தல் தோல்வியை மறைக்க என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா உட்கட்சி பிரச்சனை என்று நாடகமாடுகிறார்கள் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.
ஆட்சி ஆளும் தார்மீக உரிமையை இழந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த மக்கள் விரோத என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜனதா அரசை அகற்றி, மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்க தொடர்ந்து போராடுவோம்.
மக்களை பாதிக்கின்ற 3 குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்த வேண்டாம் என்றும் அதற்காக போராடும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளிக்கும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 65 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
- காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது. அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.
- ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதிகளில் இருந்து சாலை மற்றும் ரெயில்வே பணி விரிவாக்க பணிகளுக்காக தினந்தோறும் மணல் ஏற்றிக் கொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது.
இந்த லாரிகள் எந்தவித சாலை விதிகளையும் பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. லாரிகளில் இருந்து வெளியேறும் மண் புழுதிகளால் எதிரில் வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
அதிவேகமாக சென்று வரும் லாரிகளால் விபத்தும், உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் இருவர் மணல் லாரியால் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சென்று வரும் நேரத்தில் அதிவேகத்தில் மணல் லாரி இயக்கப்படுவதாக மாவட்ட போக்குவரத்துத் துறை போலீசாரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதனால் காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் லாரிகள் இயக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. ஆனால் உத்தரவை காற்றில் பறக்க விட்டு மணல் லாரிகள் வழக்கம் போல் பள்ளி விடும் நேரத்தில் அதிவேகமாக இயங்கி வந்தன.
இதையடுத்து திருநள்ளாறு சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக சென்ற 30-க்கும் மேற்பட்ட லாரிகளை மடக்கிப் பிடித்தனர். இதில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் உட்பட ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயக்குவது தெரிந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆய்வின்போது ஒரு ஓட்டுநர் தனக்கு தெரிந்த வி.ஐ.பி. பேசுவதாக கூறி போனை ஆய்வாளரிடம் கொடுக்க வந்தார். போனை வாங்க மறுத்த ஆய்வாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். பொது மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி லாரிகளை இயக்கினால் இனிவரும் காலங்களில் தண்டனை கடுமையாக இருக்கும் என எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார்.
- பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார்.
- புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பா.ஜனதா தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் பா.ஜனதா அமைச்சர்களுக்கு எதிராக பா.ஜனதா மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதில் பா.ஜனதா ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் முதலமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். ஆளும் அரசில் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், புரோக்கர்கள் மூலம் அரசு செயல்படுவதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து 7 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டா, மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், கட்சி அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி மீது புகார் கூறினர். அதோடு ரங்கசாமி அரசிற்கான ஆதரவை விலக்கி வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பாஜக மாநிலதலைவர் செல்வ கணபதி எம்.பி.யின் செயல்பாட்டை முன்னாள் தலைவர் சாமிநாதன் விமர்சித்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சிக்குள் போர்குரல் எழுந்துள்ளது. இதனால் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியிலும், பா.ஜனதா கட்சிக்குள்ளும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி பாஜக கட்சியின் பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அவர் எம்.எல்.ஏ.க்கள் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்காக புதுச்சேரிக்கு நாளை (திங்கட்கிழமை) வரும் நிர்மல் குமார் சுரானா காலை 10.30 மணிக்கு கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்கிறார்.
பின்னர் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திப்பார் என கூறப்படுகிறது. கூட்டணி மோதல் மற்றும் உட்கட்சி பிரச்சனையில் சமரசம் காணுமாறு பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவுக்கு பா.ஜனதா தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை நாளைய ஆலோசனை கூட்டத்தில் சமரசம் ஏற்படாத பட்சத்தில் பா.ஜனதா மேலிட பார்வையாளர்கள் அடுத்த கட்டமாக புதுவைக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.
- கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
- கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 85 சாராயக்கடைகளும், 66 கள்ளுக்கடைகளும் உள்ளன.
இதே போல், காரைக்காலில் 25 சாராயக்கடைகளும், 26 கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையான ஏலம் நடைபெறும்.
அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம் கள்ளுக்கடைகளின் 2024-25-ம் ஆண்டு குத்தகை ஆண்டுக்கான சில்லரை விற்பனை உரிமத்துக்கான ஏலம் இணையதளத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. ஆனால் கிஸ்தி தொகை உயர்வு காரணமாக, சாராயக்கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை.
அதன் பிறகு சாராய கடைகளுக்கு 5 சதவீதம் கிஸ்தி தொகை குறைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கிஸ்தி தொகை குறைப்புக்கு பின் சாராயக்கடையின் ஏலம் சூடுபிடித்துள்ளது. நேற்று முன்தினம் வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 38 சாராயக்கடைகளும், 35 கள்ளுக்கடைகளும் ஏலம் எடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஏலம்போகாத 72 சாராயக்கடைகள் மற்றும் 57 கள்ளுக்கடைகளுக்கு நேற்று மறு ஏலம் நடத்தப்பட்டது. இதில் புதுவை 29, காரைக்கால் 1 என ஒரே நாளில் 30 சாராயக்கடைகள் ஏலம் போயின. புதுவையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள சேதராப்பட்டு கடையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடைசியில் சேதராப்பட்டு கடை அதிகபட்சமாக ரூ.27,60,351-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக திருக்கனூர் கடை ரூ.14,52,783-க்கும், கன்னியகோவில் கடை ரூ.13,03,877-க்கும், லிங்கா ரெட்டிப்பாளையம் கடை ரூ.9.35 லட்சத்துக்கும், குருவிநத்தம் கடை ரூ.6,92,435-க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதில் குறைந்த பட்சமாக ஆரியபாளையம் கடை ரூ.1.54 லட்சத்துக்கு ஏலம் போனது.
இதேபோல், புதுவை 1, காரைக்கால் 1 என 2 கள்ளுக்கடைகள் ஏலம் போயின. அதிகபட்சமாக மணமேடு கடை ரூ.51,408-க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 110 சாராயக்கடைகளில் இதுவரை 68 கடைகளும். 92 கள்ளுக்கடைகளில் 37 கடைகளும் ஏலம் போயுள்ளன. இன்னும் ஏலம் போகாத 42 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகளுக்கு நாளை (திங்கட்கிழமை ) கலால் துறை மூலம் மறு ஏலம் நடத்தப்படவுள்ளது.






