என் மலர்
புதுச்சேரி
- மாசிமக திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாசிமக திருவிழாவை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- ஏனாம் பிராந்தியத்தில் தோல்வியை தழுவிய முதல்- அமைச்சர் முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார்.
- சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏனாம் பிராந்தியத்தில் தோல்வியை தழுவிய முதல்- அமைச்சர் முன்னாள் அமைச்சருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவியை வழங்கினார். முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட. பதவியை வைத்துக் கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு எல்லாவிதத்திலும் முன்னாள் அமைச்சர் தொல்லை கொடுத்து வருகிறார்.
முதல்-அமைச்சர் அளித்த பதவி மாநிலத்தை வளர்ச்சி பெற செய்ய வழங்கப்பட்டது அல்ல, சுயேச்சை எம்.எல்.ஏ.வின் அடிப்படை உரிமைகளை குழிதோண்டி புதைப்பதற்குத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஒரே மேடையில் எம்.எல்.ஏ.வை வைத்துக் கொண்டே, முன்னாள் அமைச்சர் மூலம் பயனாளிகளுக்கு ஆணையை வழங்க வைத்துள்ளார். இதை தன்மானம் உள்ள எவரும் தட்டிக்கேட்பது நியாயமான ஒன்று.
சுயேச்சை எம்.எல்.ஏ தனது உரிமை கண்முன்னே பறிக்கப்படுவதை கண்டு வேதனைப்பட்டு, வெளியேறியுள்ளார். இந்த காட்சியை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டாரா ? இதே நிலையை இன்னாள் முதல்- அமைச்சர், முன்னாள் முதல்- அமைச்சராக ஆகும்போது ஏற்றுக்கொள்வாரா?
முதல்-அமைச்சரின் சர்வாதிகார செயல்பாடை தட்டிக்கேட்காமல், கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மவுனம் காப்பது உங்கள் உரிமையை மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமையையும் பறிக்கும் செயல் என்பதை நினைவூட்டுகிறேன்.
பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.வுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலை புதுவை மாநில மக்கள், பா.ஜனதா கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளது.நாகரீகமற்ற இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை கவர்னர் தட்டிக்கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் கவர்னர் தனக்குள்ள. அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி, புதுவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு வாரிய தலைவர் பதவிகளை வழங்கலாம். இதேநிலை இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வருகிற காலத்தில் ஏற்படலாம்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- பட்டனூர்- இடையன்சாவடி செல்லும் சாலையில் விஜயா இருந்ததை பார்த்த ராஜு அருகே சென்று பார்த்த பொழுது விஜயா முழு போதையில் நிதானம் இன்றி இருந்தார்.
- விஜயா இந்த பகுதிக்கு ஏன் வந்தார்? மது அருந்தியது எப்படி?
புதுச்சேரி:
புதுவை பாக்கமுடையான்பட்டு வினோபா நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜுவின் 2-வது மனைவி விஜயா .
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயா வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் சென்று ராஜு தேடினார். ஆனால் எங்கும் விஜயா இல்லை.
இந்நிலையில் திண்டிவனம் பைபாஸ் சாலையில் தமிழக பகுதியான பட்டனூர்- இடையன்சாவடி செல்லும் சாலையில் விஜயா இருந்ததை பார்த்த ராஜு அருகே சென்று பார்த்த பொழுது விஜயா முழு போதையில் நிதானம் இன்றி இருந்தார்.
விஜயா கேட்டதன் பேரில் ராஜு கடைக்கு சென்று புரோட்டா வாங்கி வந்து போதையில் இருந்த விஜயாவுக்கு ஊட்டினார். புரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்த விஜயா சிறிது நேரத்தில் மயங்கி இறந்தார்.
இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ராஜுவிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இறந்து கிடந்த விஜயா உடலை பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயா இந்த பகுதிக்கு ஏன் வந்தார்? மது அருந்தியது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. வருகிற 16-ந் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன், அரசு செயலர் கேசவன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா, அவ்வையார் விழா, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா ஆகியவற்றை நடத்துகிறது.
இதன் தொடக்கவிழா புதுவை கடற்கரை சாலையில் நடந்தது. வருகிற 16-ந் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நாட்டிய விழா நடக்கிறது. சிறுவர் இசை நாட்டிய விழா வருகிற 6 மற்றும் 7-ந் தேதி நடக்கிறது.
அவ்வையார் விழா வருகிற 9-ந் தேதி நடக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகள் விழா 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
தொடக்கவிழாவில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் வரவேற்றார். தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன், அரசு செயலர் கேசவன் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி விழாவை மணியடித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து குமார் குழுவினரின் தவில் இசை, கோபக்குமார் குழுவினரின் நாதசங்கமம், ராஜேந்திரன் குழுவினரின் பக்தடஇசை, பிரபு கிராமிய கலைக்குழுவுடன் இசை நிகழ்ச்சி நடந்தது. கண்காணிப்பாளர் அருள்ராசு நன்றி கூறினார்.
புதுவை கடற்கரை சாலையில் நாள்தோறும் இந்த விழாக்கள் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.
- கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
- அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத்தலை வர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார்.
ஷோகோ நிறுவன இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியை தொடங்கி வைத்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார்.
எந்திரவியல் துறை பேராசிரியர் ரட்ஜராம் தேசிய அறிவியல் தினம் குறித்து பே சினார். அறிவியல் தினவிழாவினையொட்டி நடந்த கண்காட்சியில் ஏராளமான அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெங்களூரு போர்செமி கண்டக்டர்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விநாயக பாவு, புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஐயராஸ் ஆகியோர் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் ெதாகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் ஒருங்கிணைத்தார். முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுமித்ரா நன்றி கூறினார்.
- புதுவை கோரிமேடு சஞ்சீவிநகர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.
- கத்தி குத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த மகேசை அவரது தந்தை மாணிக்கம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
புதுச்சேரி:
மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திய நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை கோரிமேடு சஞ்சீவிநகர் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்(வயது37). எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான அய்யனார், முருகன், வீரப்பன் ஆகியோருடன் அங்குள்ள குளக்கரை அருகில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். அப்போது திடீரென மகேசுக்கும் அய்யனாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மற்ற நண்பர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் மகேஷ் வீட்டுக்கு வந்து விட்டார்.
ஆனால் ஆத்திரம் தீராத அய்யனார் நள்ளிரவு 12 மணியளவில் மகேஷ் வீட்டுக்கு வந்தார். பின்னர் மகேசிடம் சமாதானம் பேசலாம் என கூறி வெளியே அழைத்து சென்றார். வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் சென்ற போது திடீரென அய்யனார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேசை சரமாரியாக குத்தினார்.
மேலும் இனிமேல் என்னிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவேன் என்று அய்யனார் அங்கிருந்து சென்று விட்டார். கத்தி குத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த மகேசை அவரது தந்தை மாணிக்கம் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு மகேசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை தேடி வருகிறார்கள்.
- புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
- மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமை செயலர் ராஜுவ் வர்மா, கால்நடை பராமரிப்புத்துறை செயலர் உதயகுமார், மீன்வளத்துறை செயலர் கேசவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை, பாண்லே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கால்நடை வளர்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவற்றின் செயலபாடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மத்திய அரசின் கால்நடை அபிவிருத்தி, சுகாதார திட்டங்களில் செலவு செய்யாத தொகையை பயனாளிகள் பயன்பெறும் வகையில் குறித்த காலத்தில் செலவு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு களை பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
புதுவையில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தி பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
புதுவையில் கடல்வாழ் உயிரின காட்சியகம், அறிவியல் அரங்கம், கடல் மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். மீன் கண்காட்சியை நடத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.
- ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
- நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.
சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.
வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.
அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.
ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:
நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.
அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.
அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.
பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.
நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.
இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.
இவ்வாறு ரங்கசாமி கூறினார்.
இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
- சுடுகாட்டில்தகனமேடை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் இளநிலைப்பொறியாளர் ரமேஷ், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.67 கோடியில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை விழா நடந்தது.
வாய்க்கால்களை புனரமைத்தல், நேரு நகரில் உள்ள குறுக்கு வீதிகளில் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி செய்தல், சுடுகாட்டில்தகனமேடை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இது போல் உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் ரூ.7 கோடியே 24 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., கென்னடி, முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், உள்ளாட்சித் துறை செயலர் ஜவகர், கலெக்டர் மணிகண்டன், உள்ளாட்சி துறை இயக்குனர் ரவிதீப் சிங் சாகர், புதுவை நகராட்சி ஆணையர் ரொமில் சிங் டாங்க், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப்பொறியாளர் வெங்கடாசலபதி, இளநிலைப்பொறியாளர் ரமேஷ், ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.
- கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரை பிரெஞ்சு தூதுக்குழுவினர் சந்தித்தனர்.
கலாச்சாரம் மற்றும் பிராந்தியத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு மைய துணைத் தலைவர் டெல்பின் பெனாசி, உணவுக்கான பிராந்திய ஆலோசகர் எஸ்டெல் கோச்சார்ட், பிராந்திய தலைவரின் ஆலோசகர் சோலீன்பெனாய்ட், ஹெர்னாண்டஸ், ஒருங்கிணைப்பாளர் பாலின் சால்சிடோ, கூட்டாண்மை இயக்குனர் ஆலிவர் ரோலின் உட்பட 16 பேர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
கலாச்சாரம், உணவு, சமூக அக்கறை, நீர்வள நிலவரம், தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப விவசாயம் செய்முறையை பிரெஞ்சு குழுவினர் அமைச்சரிடம் விளக்கினர்.
இயற்கை விவசாயத்தைப் பற்றி விரிவாக விவாதித்தனர். இயற்கை விவசாயம், ஆர்கானிக் விவசாயம் செய்யும் வழிமுறைகள் குறித்து அமைச்சர் பிரெஞ்சு குழுவிடம் கேட்டறிந்தார். பிரெஞ்சு குழுவுக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்து தரும் என அமைச்சர் தேனீ.ெஜயக்குமார் உறுதியளித்தார்.
- பெற்றோர் கண்டித்தால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தினேஷ் மது குடித்து விட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்தார்.
புதுச்சேரி:
கோரிமேட்டில் மது குடித்துவிட்டு வந்ததை பெற்றோர் கண்டித்தால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை கோரிமேடு ஆனந்தாநகர் புகழேந்தி வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.இவர் கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஊழியராக பணி புரிந்து வருகிறார்.
இவர்களது மகன் தினேஷ் (வயது 29). பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்தார். அதுபோல் தினேஷ் மது குடித்து விட்டு பெற்றோரிடம் பிரச்சினை செய்தார். இதனை பெற்றோர் கண்டித்து சாப்பிட்டு தூங்குமாறு தினேஷிடம் கூறிவிட்டு அவர்கள் தூங்க சென்றனர்.
இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தினேஷ் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தினேஷை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது தந்தை வைத்தியநாதன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பயிற்சி மூலம் புதுவையை போதை இல்லாத நகரமாக மாற்ற பல விழிப்புணர்வுகள் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் சமூகநலத்துறை சார்பில் அன்னை தெரசா முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், போதைப்பொருள் குறைப்புக்கான தேசிய செயல் திட்டம் மற்றும் நஷா முக்ட் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
என்.எஸ்.எஸ், என்.சி.சி., நேருயுவகேந்திரா மாணவர்களுக்கு அமைச்சக ஒருங்கிணைப்பாளர்கள், துறை வளமிக்க விளக்கவுரையாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி மூலம் புதுவையை போதை இல்லாத நகரமாக மாற்ற பல விழிப்புணர்வுகள் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் தவிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். பயிற்சி முகாமை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். சமூகநலத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா, கலெக்டர் மணிகண்டன், பாரதமாதா ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை மறுவாழ்வு மைய சேர்மன் கோபால் பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர். கள அதிகாரி கனகராஜ் நன்றி கூறினார்.






