என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புது காலனி பகுதியில் மக்கள் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச மனைபட்டா முழுமையாக வழங்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் மணவெளி தொகுதி நோணாங்குப்பம் புது காலனி பகுதியில் மக்கள் சந்திப்பு மற்றும் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் சுமார் 50 வருடங்களாக குடியிருந்து வருகிறோம். தாங்கள் வசிக்கின்ற பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடியிருந்து வருகின்றனர். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச மனைபட்டா முழுமையாக வழங்கப்படவில்லை.

    மேலும் தற்போது குடும்பங்கள் அதிகமாக உள்ள நிலையில் கூடுதலாக மனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய வேண்டும்.

    அத்துடன் அங்கு கல்வீடு கட்டுவதற்கான மானிய தொகையும் வழங்க வேண்டும். கழிவுநீர் சரிவர செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. தடை இன்றி கழிவு நீர் செல்வதற்கு புதியதாக கழிவு நீர்வாய்க் கால்களை அமைத்துத் தரவேண்டும். சாலை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு பதில் அளித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    இலவச மனை பட்டா வழங்கும் ஆய்வுகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக பயனாளிகளை தேர்வு செய்வார்கள். அதில் எவ்வித அரசியல் குறிக்கீடும் இருக்காது. இலவச மனை பட்டா பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்த பிறகு பட்டா வழங்க ஆவன செய்யப்படும். மேலும் இந்த பகுதிக்கு புதியதாக சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் முடிவு பெற்று இந்த புதுகாலனி பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்" என உறுதி அளித்தார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் அசோகன், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், நல அதிகாரி மோகனா, இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் உள் ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னை வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • மாநில சுயநிதி தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    திருபுவனை அன்னை வித்யா மந்திர் பள்ளியின் மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தனசெல்வம் தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனசெல்வம் பள்ளி மாணவர்களின் படைப்புகளை விளக்கி பேசினார்.

    அறிவியல் கண்காட்சியை புதுவை மாநில சுயநிதி தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். ரங்கநாதன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    சங்கத்தின் நிர்வாகிகள் சுப்பிரமணியன், இளமதியழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த கண்காட்சியை திருபுவனை தொகுதியில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு பயன்பெற்றனர். கண்காட்சி க்கான ஏற்பாடுகளை பள்ளியின் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை தன்னாட்சி பெற்ற, பதிவு பெற்ற ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி மற்றும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் உள்ளது.
    • விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை தன்னாட்சி பெற்ற, பதிவு பெற்ற ராஜீவ் காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி மற்றும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில் உள்ளது. இதனை முழுவதுமாக மூடி ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 1980-ம் ஆண்டு பதிவு பெற்ற இந்த தன்னாட்சி அமைப்புகளை ஏன் சட்ட திட்டங்களுக்கு எதிராக ஏன் கலைக்க வேண்டும்? என்பதை இந்த புதுவை அரசு விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு சங்கங்களுக்கும் விளக்க வேண்டும்?

    இப்பொழுது மீண்டும் விளையாட்டுத்துறையில் ஊழல் செய்வதற்கு என்று ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.

    புதுவை மாநில விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது கல்வித்துறையின் கீழ் இயங்கும் விளையாட்டை தனியாக பிரித்து தனியாக விளையாட்டுத்துறை அமைப்பது என்பதாகும்.

    ஆனால் மீண்டும் கல்வித்துறைக்கு இயங்குவதற்காக இத்தகைய ஒரு அமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பது தேவையில்லாத ஒன்று.

    இது தொடர்பாக கல்வித்துறை அலுவலகத்தில் ஒரு ரகசிய கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே புதுவை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தகுந்த அறிவுரையை கல்வித் துறை அதிகாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.

    இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் விளையாட்டு வீரர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருடம் பணி முடித்த காவலர்களை தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
    • ஜனாதிபதி உத்தரவு 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என்று 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொது நல இயக்க பொது செயலாளர் கணேசன் மத்திய உள்துைற மந்திரி அமித்ஷா, புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காவல்துறையில் 6-வது சம்பள கமிஷன் அடிப்படையின்படி 10 வருடம் பணி முடித்த காவலர்களை தலைமை காவலர்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். மேலும் 20 வருடம் பணி முடித்தவர்களை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    அதுபோல் 30 வருட பணி முடித்தவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பணி உயர்வு வழங்க வேண்டும் என்று 6-வது சம்பள கமிஷன் உத்தரவு பிறப்பித்தது. 7-வது சம்பள கமிஷன் அமுல்படுத்தியும் இதுவரை பதவி உயர்வு உத்தரவை அமுல்படுத்தாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.

    ஜனாதிபதி உத்தரவு 6-வது சம்பள கமிஷன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என்று 2012-ம் ஆண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் காவலர் பொதுநல இயக்கம் புகார் அளித்தது.

    அந்த புகாரின் அடிப்படையின்படி புதுவை போலீசாருக்கு உடனே பதவி உயர்வு அளிக்க ஐ.ஜி-க்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வு வழங்காமல் உள்ளதை, போர்க்கால அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுவை போலீஸ்

    டி.ஜி.பி. ஆகியோர் நடவடிக்கை எடுத்து போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும்.

    மேலும் காவல்துறையில் போலீசார் சோர்வு இல்லாமல் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில் இந்த பதவி உயர்வு அமையும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தட்டச்சுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்த்தி வழியனுப்பு விழா நடைபெற்றது.
    • ஜீவானந்தபுரம் கிராமக் குழு பொறுப்பாளர் சபாநாயகம், செண்பகா கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யா மாரியப்பனர்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவனாந்தபுரம், நாடார் உறவின் முறைச் சங்கத்தில் தட்டச்சுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்த்தி வழியனுப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு அறக் கட்டளை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை யாற்றினார்.

    நிகழ்ச்சியில் நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு நோக்க வுரையாற்றினார்.

    ஜீவானந்தபுரம் கிராமக் குழு பொறுப்பாளர் சபாநாயகம், செண்பகா கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு முருகையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினர்.

    பேராசிரியர் இளங்கோ, குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் உசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்படக் குழுவினர் சுகுமார், ஜெயகுமார், சஞ்சய் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் இருளா யம்மாள், ஜீவானந்தம், கோபாலன், காசிராஜன், சொக்கமுத்து அய்யனார், ராஜராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் தேன்மொழி நன்றி கூறினார்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரி புலம்புவதை விடுத்து அரசியல் ரீதியாக செயல்படவேண்டும்.
    • மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டால், பா.ஜனதா தயவில் ரங்கசாமி முதல்-அமைச்சராக ஏன் தொடரவேண்டும்? வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதே முக்கியம்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் புதுவையில் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம், பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டதற்கு, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பேற்க வேண்டும். ஒரு நாடு, ஒரு தேர்தல் என பா.ஜனதா செயல்படுவது நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச்சார்பின்மையையும் பாதிக்கும். கூட்டாட்சி நெறிமுறை புறந்தள்ளப்பட்டு மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரி புலம்புவதை விடுத்து அரசியல் ரீதியாக செயல்படவேண்டும். மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டால், பா.ஜனதா தயவில் அவர் முதல்-அமைச்சராக ஏன் தொடரவேண்டும்? வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதே முக்கியம்.

    எனவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். அதற்காக அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அழைக்கிறோம். மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி வருகிற ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரையில் தேசிய அளவில் மக்கள் இயக்கம் நடத்தப்படும்.

    மத்தியில் ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம், பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மாறுபட்டு நிற்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

    மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினையில்லை. தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம்.

    ஏற்கெனவே அதுபோல பிரதமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக பிரதமரை தேர்வு செய்யலாம். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் தன்னை முன்னிலைப்படுத்துவது அவரது தனிக்கருத்து. ஆம் ஆத்மியின் துணை முதல்-அமைச்சர் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

    இடதுசாரிகள் பீகார், மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்களில் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். இடது சாரிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டோம்.

    இவ்வாறு டி.ராஜா கூறினார்.

    • குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைப்பது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமையில் தெருவோரவாசிகள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.
    • மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ரங்கசாமி விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சின்னசுப்பராய பிள்ளை வீதி, மோந்திரேஸ் வீதி, கந்தப்பாவீதி, புஸ்ஸி வீதி போன்ற வீதிகளில் நடைபாதையில் தங்கி இருந்த குடும்பங்களுக்காக ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

    இந்த குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைப்பது பற்றி தொகுதி எம்.எல்.ஏ. நேரு தலைமையில் தெருவோரவாசிகள் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.

    அப்போது, சாலையோரம் வசிப்போரின் வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்து கொடுக்கும்படியும், வீடுகளை ஒப்படைக்கும் படியும் நேரு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ரங்கசாமி விரைவில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

    அப்போது அரசு செயலர் கேசவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கல்லூரியின் ஆராய்ச்சி சபை மாணவர் அமைப்பும் இணைந்து தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் ஆலோசனையின் படி, இயக்குநர் பொறுப்பு ஆண்ட்ரு ஜான் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர் சுகந்தி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் கார்த்திகேயன் பங்கேற்று மாணவர்களுக்கு மருத்துவ துறையில் அறிவியலின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியின் துணை தலைவர் பேராசிரியர் சசி கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில்150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 50 விளக்க மாதிரிகளை சமர்பித்து விளக்கம் அளித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    முடிவில் உதவி பேராசிரியரும் கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் துணை தலைவருமான கிருஷ்ணக்குமார் நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு, கல்லூரியின் ஆராய்ச்சி சபையின் தலைவர் சுகந்தி, ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணக்குமார், ஆராய்ச்சி சபையின் உறுப்பினர்கள் தீபிகா, கோவரத்ன விஷ்ணு, கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள், அனிதா, வளர்மதி, வெண்ணிலா மற்றும் விரிவுரையாளர் மிராக்ளின் ஷேரண், ஜெயசூரியா, தமிழ் செல்வன், என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் நுண்கலை மாணவர்கள் செய்திருந்தனர்.

    • தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி ஈடுபட்டுள்ளார்.
    • களி மண்ணை கையால் தொட்டு விநாயகர், குதிரை, மான், மயில், பூ போன்றவை தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயின்றனர்.

    புதுச்சேரி:

    டெரகோட்டா எனப்படும் சுடு களிமண் பொம்மை தமிழ் பாரம்பரியத்தில் வெளிப்பாடாக உள்ளது.

    புதுவை கிராமங்களில் பெருமளவில் இந்த பொம்மைகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி ஈடுபட்டுள்ளார். இதற்காக திருக்காஞ்சி கிராமத்தில் மத்திய-மாநில அரசின் வழிகாட்டுதலோடு டெரகோட்டா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

    இந்த மையத்துக்கு வெளிநாட்டினர் குழுவாக வந்து பார்வையிட்டு பயிற்சி பெற்று செல்கின்றனர். தற்போது மும்பையை சேர்ந்த சர்வதேச தனியார் பள்ளியை சேர்ந்த 54 மாணவர்கள் இங்கு வந்து களிமண் பொம்மைகளை செய்வதை ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். களி மண்ணை கையால் தொட்டு விநாயகர், குதிரை, மான், மயில், பூ போன்றவை தயாரிப்பது குறித்து ஆர்வத்துடன் பயின்றனர்.

    வளரும் தலை முறைகளுக்கு இது போன்ற பயிற்சி அளிப்பதால் அழிவின் விளிம்பில் உள்ள இந்த கலை பாதுகாக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் இதை ஒரு கலையாக கொண்டுவர வேண்டும். அமெரிக்காவில் குரு குலப்பள்ளியில் உள்ளது போல் இந்தியாவிடம் குருகுல கல்வி முறையில் இதை பயிற்று தர வேண்டும் என பத்மஸ்ரீ முனுசாமி தெரிவித்துள்ளார்.

    • புதுவை தெற்கு பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
    • அக்கூட்டத்தில், பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மதில் சுவர் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை தெற்கு பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் புதியதாக உருவான குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில், பிள்ளையார்குப்பம் லா பிரான்ஸ் வில்லா, சார்காசிமேடு பெலிக்கான் சிட்டி, கன்னியகோவில் சீனிவாச கார்டன் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    அக்கூட்டத்தில், பங்கேற்ற குடியிருப்பு வாசிகள், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு மதில் சுவர் இல்லாமல் இருப்பதால் சமூக விரோதிகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    இதனால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே பகல் நேரத்தை விட இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வெளியூர் நபர்கள் பொதுஇடங்களில் மதுகுடித்து கொண்டு இருக்கிறார்கள்.இதனால் இரவு நேரத்தில் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமாகி கரடுமுரடாக உள்ளதால் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இது தொடர்பாக குடியிருப்பு நிறுவனத்திடம் தெரிவித்தால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. எனவே சாலைகளை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க அரசிடம் வியூருத்த வேண்டும். மின்விளக்குகளும் சரிவர எறிவது இல்லை என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

    மேலும், இப்பகுதிகளில் இருக்கின்ற குறைகளை சரி செய்வதற்கு உதவி செய்யுமாறும். மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடந்தாலும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

    • தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
    • அப்போது மாணவனின் பெற்றோர்களும் பயிற்சியாளரும் உடன் இருந்தனர்.

    புதுச்சேரி:

    ஆல்பா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வெ. விஷால் ஷரன். இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தேக்வோண்டா போட்டியில் ஜூனியர் பிரிவில் 2-ம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.

    இதுமட்டுமின்றி கொல்கத்தாவில் நடை பெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஜூனியர் பிரிவில் தங்க பதக்கம் பெற்று முதல் பரிசினை வென்றார்.

    இதுபோன்று தொடர்ந்து சாதனை படைத்து வரும் மாணவனை ஆல்பா கல்வி குழுமங்களின் இயக்குநர் தனதியாகு பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கி, பூங்கொத்து கொடுத்து பாராட்டினார். அப்போது மாணவனின் பெற்றோர்களும் பயிற்சி யாளரும் உடன் இருந்தனர்.

    • சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார்.
    • வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

    பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

    அவரின் வருகைக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்கள் என தெரிவித்தனர். ஆனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னரும், முதல்-அமைச்சரும் பங்கேற்கவில்லை.

    அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார். வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    சென்னை வரை வந்த துணை ஜனாதிபதி புதுவை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுவதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அங்கு அவர் பேராசிரியராக பணியாற்றிய போது தங்கியிருந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அதற்கான வாடகை பாக்கி ரூ.23 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு சங்கத்தினர் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    அதில் புதுவை பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். டிஜிட்டல் போர்டு அமைப்பது உட்பட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த புகார் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை துணை ஜனாதிபதி, கவர்னர் தமிழிசை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ×