என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம்- இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா யோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம்- இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா யோசனை

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரி புலம்புவதை விடுத்து அரசியல் ரீதியாக செயல்படவேண்டும்.
    • மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டால், பா.ஜனதா தயவில் ரங்கசாமி முதல்-அமைச்சராக ஏன் தொடரவேண்டும்? வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதே முக்கியம்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் புதுவையில் நடந்தது.

    கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டின் மதச்சார்பின்மை, அரசியலமைப்பு சட்டம், பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டதற்கு, பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பேற்க வேண்டும். ஒரு நாடு, ஒரு தேர்தல் என பா.ஜனதா செயல்படுவது நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச்சார்பின்மையையும் பாதிக்கும். கூட்டாட்சி நெறிமுறை புறந்தள்ளப்பட்டு மாநில உரிமைகள் பாதிக்கப்படும்.

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரி புலம்புவதை விடுத்து அரசியல் ரீதியாக செயல்படவேண்டும். மக்கள் நலன் புறக்கணிக்கப்பட்டால், பா.ஜனதா தயவில் அவர் முதல்-அமைச்சராக ஏன் தொடரவேண்டும்? வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்படுவதே முக்கியம்.

    எனவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். அதற்காக அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அழைக்கிறோம். மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி வருகிற ஏப்ரல் 14-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரையில் தேசிய அளவில் மக்கள் இயக்கம் நடத்தப்படும்.

    மத்தியில் ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம், பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மாறுபட்டு நிற்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

    மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினையில்லை. தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம்.

    ஏற்கெனவே அதுபோல பிரதமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக பிரதமரை தேர்வு செய்யலாம். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் தன்னை முன்னிலைப்படுத்துவது அவரது தனிக்கருத்து. ஆம் ஆத்மியின் துணை முதல்-அமைச்சர் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

    இடதுசாரிகள் பீகார், மேற்குவங்கம் உட்பட பல மாநிலங்களில் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். இடது சாரிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டோம்.

    இவ்வாறு டி.ராஜா கூறினார்.

    Next Story
    ×