என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கணுவாய்பேட்டை 2-வது வன்னியர் தெருவை சேர்ந்தவர் செங்கதிர்செல்வன் (வயது39). இவரது உறவினரான சம்பத் என்பவர் பா.ஜனதா கட்சியின் சிறப்பு அழைப்பாளராக உள்ளார். இவரது தந்தை சபாபதி முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஆவார்.

    சம்பவத்தன்று சபாபதி வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது தி.மு.க. நிர்வாகியான வில்லியனூரை சேர்ந்த பூக்கடை சண்முகம் சபாபதிக்கு சால்வை அணிவித்ததாக கூறபடுகிறது.

    மேலும் சால்வை போடும் போட்டாவை சமூக வலைதளங்களிலும் பூக்கடை சண்முகம் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

    இதனை கண்ட சம்பத் தனது தந்தையை பூக்கடை சண்முகம் அவமானப்படுத்தி விட்டதாக கருதினார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத் இதனை தட்டிக்கேட்க செங்கதிர்செல்வனும் பூக்கடை சண்முகம் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் பூக்கடை சண்முகத்துக்கும், சம்பத்துக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் பூக்கடை சண்முகம் தனது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயை அவிழ்த்து விட்டு செங்கதிர்செல்வனை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்து போய் செங்கதிர்செல்வன் கீழே விழுந்தார். அப்போது செங்கதிர் செல்வனையும், சம்பத்தையும் கொலை செய்து விடுவதாக பூக்கடை சண்முகம் மிரட்டியதாக தெரிகிறது.

    இதுகுறித்து செங்கதிர் செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பூக்கடை சண்முகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும்.
    • புதுவை மாநிலத்தில் சினிமா தொழிலாளர்கள் யூனியன் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நடிகர் குணாநிதி மற்றும் தயாரிப்பாளர் சபரிஷ் சந்தித்தனர்.

    அப்போது ஒவ்வொரு மாநில அளவில் திரைத்துறையில் இருக்கும் சினிமா யூனியன்கள் போல புதுவைக்கென்று தனியாக சினிமா யூனியன் அமைக்க வேண்டும். இதன் மூலம் புதுவை பகுதியில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் புதுவையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 40 சதவீத வேலை வாய்ப்பினை பெற முடியும்.

    மேலும் புதுவை மட்டுமல்லாது சுற்று வட்டார சினிமா துறை தொழில்நுட்ப கலைஞர்களும் பயனடைவார்கள். எனவே புதுவையில் சினிமா தொழிலாளர்களுக்கு யூனியன் அமைக்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி இது குறித்து ஆலோசனை நடத்தி புதுவை மாநிலத்தில் சினிமா தொழிலாளர்கள் யூனியன் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தனர். சந்திப்பின்போது, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் முன்னாள் தன்ராஜ் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

    • மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது.
    • படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அனைத்து கிராமங்களிலும் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரிக்கும் திட்ட தொடக்கவிழா நடந்தது.

    கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வாகனத்தை கொடியசைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

    தனியார் நிறுவனம் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கு கொண்டுசெல்லும். இத்திட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் வண்டியை அனுப்ப வேண்டும்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது.

    காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, ஆசிரியர் பற்றாக்குறையை போக்குவது, பள்ளிகளுக்கு தேவையான வசதியை செய்து தருவது, தொழில் முனைவோர் எளிதாக தொழில் தொடங்க சூழ்நிலை உருவாக்குவது என பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. பல ஆண்டு காத்திருந்த 16 ஆயிரத்து 800 முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை முதல்-அமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், சிறப்பு அழைப்பாளர் வீரராகவன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
    • போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலை மாமணி விருதாளர் சங்கம், ஜோதி சிலம்பம் பயிற்சி மையம் மற்றும் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் சிறப்பு விருந்தினராக போலீஸ்துறை ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி வருவாய் அதிகாரி அய்யனார் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை நிறுவனர் ஆனந்த் ஜோதி சிலம்ப குரு குலத்தின் நிறுவனர் ஜோதி செந்தில்கண்ணன், பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வன்,

    கலைமாமணி விருதாளர் சங்க தலைவர் அரியபுத்திரன் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த திருவேங்கடம் கணேஷ் கலைவாணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதீய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது.
    • மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

     புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சண்முகம், பூங்குன்றனார், ரேணுகாதேவி, தொகுதி பொதுச் செயலாளர் மூர்த்தி, சுனிதா தேவி ஆகியோர் வரவேற்றனர்.

    தொகுதி பொறுப்பாளர் ரிசார்ட் ஜான் குமார் எம்.எல்.ஏ. நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநிலச் செயலாளர் மற்றும் நகர, மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள். மாநில விவசாய அணி தலைவர் புகேழந்தி கேந்திர பொருப்பாளரிடம் விசாரணை நடத்தினார். 

    முடிவில் நகர மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா ளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    • மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.
    • மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு பகுதியை சேர்ந்த மினி டிப்பர் லாரி டிரைவருக்கு 18 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருந்து வந்தனர்.

    மகன் அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை 5.30 மணியளவில் அந்த மாணவி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி மாணவியின் உடலை மீட்டனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ராங்கால் மூலம் போன் செய்து அறிமுகமாகி உள்ளார்.

    மாணவி தவறாக போன் செய்துள்ளீர்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இருப்பினும் அவர் தொடர்ந்து மாணவிக்கு போன் செய்து காதலிப்பதாக டார்ச்சர் செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும் என்று பயந்துகொண்டு மாணவி வீட்டில் கூறாமல் இருந்தார்.

    இந்நிலையில் தொடர்ந்து காதலிக்கும்படி அந்த வாலிபர் மாணவியிடம் தொந்தரவு செய்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் கூறினார்.

    அப்போது மாணவியின் அண்ணன், சேலத்தை சேர்ந்த மணிக்கு போன் செய்து தட்டிக் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி உங்கள் ஊரில் வந்தே உன்னை வெட்டுவேன். என்னை ஒன்னும் செய்யமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவிக்கும்படி கேட்டுள்ளனர். தன் மீது சந்தேகப்படுவதாக கருதிய மாணவி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போனில் பேசிய சேலத்தை சேர்ந்த மணி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் செல்போன் விபரங்கள் மூலம் அந்த வாலிபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
    • அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சமூக பங்களிப்பு பொறுப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளியாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

    புதுவையில் உள்ள அரசு பள்ளிகளை அடுத்த தலைமுறை கல்வி என்ற திட்டத்தின் மூலம் சமூகபங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்து அமைச்சர் கடிதம் வழங்கினார்.

    மேலும் அமைச்சர் பேசும்போது, புதுவையில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக பங்களிப்பு நிதி மண்டல மேலாளர் மதன் குமார், மேலாளர் மகேஷ்குமார், துணைத்தலைவர் மன்கோகன் லால்வாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • உருளையன்பேட்டை பெரியார்நகரில் நடுரோட்டில் சண்டை போட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை பெரியார்நகரில் நடுரோட்டில் சண்டை போட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உருளையன்பேட்டை பெரியார் நகரில் பொது இடத்தில் நின்றுக்கொண்டு 2 பிரிவினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது25),அமுது(24) மற்றும் சோமு(46), ராஜா(19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வில்லியனூர் அருகே கழிவறையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.
    • படுக்கை அறையில் சுப்பிரமணியன் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கழிவறையில் காவலாளி மயங்கி விழுந்து இறந்து போனார்.

    வில்லியனூர் அருகே கோர்க்காடு ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது54). இவருக்கு மோகன வள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சுப்பிரமணியனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் இவருக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் இருந்து வந்தது.

    இதனால் கடந்த சில மாதங்களாக சுப்பிரமணி யன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சுப்பிரமணியன் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு தூங்க சென்றார். படுக்கை அறையில் சுப்பிரமணியன் இல்லாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கழிவறையில் சுப்பிரமணியன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே காரில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மூத்த மகன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உழவர்கரை நகராட்சியானது வீட்டுவரி, சொத்துவரி செலுத்துவோரின் நலன்கருதி ரெயின்போ நகர் 9-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ளது.
    • வீட்டுவரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர்கரை நகராட்சியானது வீட்டுவரி, சொத்துவரி செலுத்துவோரின் நலன்கருதி ரெயின்போ நகர் 9-வது குறுக்கு தெருவில் அமைந்துள்ள சத்யா சிறப்பு பள்ளியில் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாமை  9 மணி முதல்  5 மணி வரை இடை விடாமல் நடத்த உள்ளது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரெயின் போநகர், கிருஷ்ணாநகர், எழில் நகர், வசந்தநகர், செந்தாமரைநகர், சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து, வீட்டுவரி நிலுவை தாரர்கள் வரியை செலுத்தலாம்.

    மேலும் ஜவகர் நகரில் உள்ள நகராட்சி தலைமை அலுவலகம், வி.வி.பி.நகர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி ஆகிய இடங்களில் உள்ள வீட்டுவரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது.
    • காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டன் போலீஸ் அதிகாரிகளிடையே பேசியதாவது:-

    தமிழகம்,ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைதியாக இருக்கும் புதுவையில் கடந்த சில நாட்களாக சமூக விரோத சக்திகளின் செயல்பாடு அதிகரித்துள்ளது.

    காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது. இதனால் போலீஸ் சூப்பிரண்டுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

    எந்த ஒரு ரவுடிகளுக்கும் புதுவையில் இடம் இல்லை. குற்றம் இழைக்க கூடிய நபர்களுக்கு ஆதரவாக காவல் துறை அதிகாரிகள் செயல்பட கூடாது. சிலர் குற்றவாளிகளை வெளியே விடும் வகையில் முதல் தகவல் அறிக்கையை எழுதுவதாக புகார் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நானே பரிந்துரை செய்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.
    • கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    சென்னை துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து தென் தமிழக பகுதிக்கு வரும் கண்டெய்னர்களை புதுவை துறைமுகத்துக்கு கொண்டு வந்து அனுப்பி வைக்க இரு துறைமுகம் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதன்படி ஒரே நேரத்தில் 106 கண்டெய்னர்களை ஏற்றிச்செல்லும் சிறிய ரக கப்பல் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி புதுவைக்கு வந்தது.

    கடந்த 15 நாட்களாக உப்பளம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், கடந்த 26-ந் தேதி சென்னைக்கு சென்றது. அங்கிருந்து 50 காலி கண்டெய்னர்களுடன் உப்பளம் துறைமுகத்திற்கு கப்பல் திரும்பியது.

    கப்பலில் வந்த கண்டெ ய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்க மீனவ தொழிலாளர் சங்கம், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கண்டெய்னர்களை டிரெய்லர் லாரியில் இறக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று போலீசார் முன்னிலையில் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனிடையே கப்பலில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றி, இறக்க ராட்சத கிரேன் புதுவைக்கு கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டது.

    மரப்பாலம் சந்திப்புக்கு வந்தது. அங்கிருந்து மற்றொரு சிறிய கிரேன் மூலம் பெரிய கிரேன் இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலியார்பேட்டை, உப்பளம் சாலை வழியாக கிரேன் துறைமுகம் சென்றது.

    கிரேன் சென்ற நேரம் அரசு ஊழியர்கள், பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நேரம் என்ப தால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் கிரேன் துறைமுகத்தை அடைந்தது. இருதரப்பினர் பேச்சுவார்த்தைக்கு பின் கண்டெய்னர்கள் இறக்கி, ஏற்றும் பணி தொடங்கும் என தெரிகிறது.

    ×