என் மலர்
புதுச்சேரி
- நிறுத்தப்பட்ட சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
- புதுவையில் மாலை 6.25 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
புதுச்சேரி:
புதுவையிலிருந்து பி.ஆர்.டி.சி. மூலம் நாகர்கோவி லுக்கு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். நிறுத்தப்பட்ட சேவையை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து பஸ் புதிதாக கட்டமைப்பு செய்யப்பட்டு முதல் புதுவையில இருந்து நாகர்கோவிலுக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. புதுவையில் மாலை 6.25 மணிக்கு புறப்படும் பஸ் மறுநாள் காலை 5 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இந்த பஸ் நாகர்கோவிலை சென்றடையும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புஷ்பேக் இருக்கையுடன் இந்த புதிய பஸ் இயக்கப்படுகிறது. புதுவை பஸ் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தி லும், பஸ் இந்தியா செயலி மூலமும் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
- உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
- மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
அடுத்த கட்டமாக கட்சியின் 23 அணிகளில் முதல் அணியாக உள்ள மாநில இளைஞர் அணிக்கு தலைமை கழகத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
தி.மு.க. அமைப்பாளர் சிவா பரிந்துரைப்படி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதலுடன், புதுவை மாநில தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமித்து தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுவை மாநில தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய அமைப்பாளராக முலியார்பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை அமைப்பாளர்க ளாக மணவெளி தொகுதி தமிழ்பிரியன், முத்தியால் பேட்டை உத்தமன், உருளையன் பேட்டை வக்கீல் ரெமி எட்வின்குமார், மண்ணாடிப்பட்டு வக்கீல் அகிலன், உருளை யன்பேட்டை தொகுதி தாமரைக்கண்ணன், நெல்லித்தோப்பு கிருபா சங்கர், நெல்லித்தோப்பு சந்துரு, வில்லியனூர் பஜூலுதீன், உப்பளம் நித்திஷ் நிமோத்தி, திருபுவனை முகிலன் அல்லிமுத்து ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து கட்டிடங்களிலும் அருட்தந்தையர்களால் புனித நீர் தெளிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு175 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் புதியதாக175 ஆம் ஆண்டு நினைவு பேரரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்த திருப்பலி நிகழ்ச்சியில் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதனை
தொடர்ந்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் அருட்தந்தையர்களால் புனித நீர் தெளிக்கப்பட்டு புனிதம் செய்யப்பட்டது.
இதனையடுத்து புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் பிரான்சிஸ் கா லிஸ்ட் ஆசியுரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வைத்தியலிங்கம் எம்.பி., உப்பளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் பள்ளியின் துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு
- உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் மற்றும் பசும்தீவனப்புல் சாகுபடி செய்த உழவர்களுக்கு இடு பொருட்களுக்கு மாற்றாக உற்பத்தி மானியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதன்படி 2022-23-ம் ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆயிரத்து 755 பேருக்கு, 2 ஆயிரத்து 926 ஏக்கருக்கு ரூ.ஒரு கோடியே 46 லட்சத்து 31 ஆயிரத்து 200-ம், பசும்தீவனப்புல் சாகுபடி செய்த 153 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் 86 ஏக்கருக்கு ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 320ம், பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக அவர்களின் வங்கி கணக்கில் வேளாண்துறை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
- பொதுப்பணித்துறை ஊழியர் கூட்டுறவு சங்கம் சார்பில் நடைபெற்றது.
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் பொதுநல நிதியில் இருந்து பெண் குழந்தைகள் மற்றும் ஏழை பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இதனை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் இளங்கோ துணைத்தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முருகன், இயக்குனர்கள் சரவணன், சேகர், வெங்கடேஸ்வரன், குணசேகர பாண்டியன், வீரபுத்திரன் மற்றும் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
- இது மக்களுக்கு செய்திகள் மற்றும் பல்வேறு வகைகளில் புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக அகில இந்திய வானொலி நிலையம் 1967-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
இந்த நிலையத்தின் முதன்மை அலைவரிசை புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு கடந்த 34 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. இதன் மூலம் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரெயின்போ பண்பலை அலைவரிசை தொடங்கப்பட்டது. இது மக்களுக்கு செய்திகள் மற்றும் பல்வேறு வகைகளில் புதிய வடிவங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
இதனை லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கேட்டு பயன்பெற்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அகில இந்திய வானொலி நிலையங்களில் உள்ள நூற்றுக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. மேலும் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தாற்காலிக பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்த அரசு நிறுவனத்துக்கு நிதி மற்றும் உரிய வசதிகள் குறைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் பொழுபோக்கு அலை வரிசையான ரெயின்போ பண்பலையில் அவை நிறுத்தப்பட்டு, தகவல் அலைவரிசையான முதன்மை அலைவரிசை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.
இந்த நிலை நாடெங்கும் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி இழப்பர். மேலும் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இது மக்கள் விரோத நடவடிக்கையாகும். எனவே இந்த புதிய நடமுறையை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பொதுமக்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை
- ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு இந்த அளவிற்கு இந்த அரசு பள்ளியை கூட்டு முயற்சியாக உயர்த்தி உள்ளனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள் குப்பத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது.
இந்த ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் பள்ளிக்கு இணையாக இப்பகுதியில் போட்டி போட்டு செயல் பட்டு வரும் அரசு பள்ளியாக இப்பகுதி பொதுமக்களிடம் கருதப்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு இந்த அளவிற்கு இந்த அரசு பள்ளியை கூட்டு முயற்சியாக உயர்த்தி உள்ளனர்.
தற்போது இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு புதுவை கல்வித்துறையின் சார்பில் பணி மாறுதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் புதிதாக வரும் ஆசிரியர்கள் மீண்டும் இவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி கற்பித்து மாணவர்களை முன்னேற்றிச் செல்ல நீண்ட நாட்கள் பிடிக்கும்.
மேலும் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் மீண்டும் தனியார் பள்ளியை நோக்கி படையெடுப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்களும் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லாமல் இருக்கவும், இப்பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருக்கவும் இங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவர் களின் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
- அரசுக்கு நலச் சங்கம் கோரிக்கை
- புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் காரத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், கோகுல்காந்தி. வீரபாரதி, பாலுசாமி, அருள்ஜோதி, பிரகதீஸ்வரர், சுரேஷ், கோடீஸ்வரன் சுப்ரமணி, இருதயராஜ் ஜில் முன்னிலை வகித்தனர். சதீஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
படஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்
மேற்படிப்பு அரசு வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும். விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
செந்தில்வேல் நன்றி கூறினார்.
- கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட உடையார் தோட்டம் பகுதியில் அப்துல் கலாம் அரசு குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தகரிப்பு செய்வதற்கான பணிகள் கென்னடி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பார்த்த சாரதி முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து சுவற்றில் உள்பகுதியில் உள்ள படிந்த பாசிகள் கருவிகள் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கிருமிகளை அழிக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட கிருமி நாசினி தெளித்து அதன் தொடர்ச்சியாக பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை செயலிழக்க செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி விநாயகம், கிளை செயலாளர்கள் சக்திவேல், செல்வம், ராகேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
- பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.
புதுச்சேரி:
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் குணாளன். இவர் தனது மனைவியுடன் சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து அவரது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு புதுவைக்கு வந்தார்.
புதுவையில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள கப்ஸ் தேவாலயம் அருகில் காரை நிறுத்தி இறங்கினர். அப்போது காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த காரின் உட்புறம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசார் விசாரணை நடத்தியதில், காரின் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்டபோது குணாளனும் அவரது மனைவியும் காரை விட்டு இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
- மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
- ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூர் உறுவையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். தனியார் நிறுவன ஊழியர்.
இவரது செல்போனுக்கு அண்மையில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட செயலியில் வரும் கட்டளைக்கு ஏற்ப பதிவிட்டால் செலுத்தும் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறப்பட்டிருந்து.
இதை நம்பிய வீரபத்திரன் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி பணம் இரட்டிப்பாகி யுள்ளது.
இதையடுத்து அவர் பல தவணைகளில் ரூ.7.08 லட்சம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இரட்டிப்பான பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரபத்திரன் புதுச்சேரி இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
மோசடி செய்த நபர் ஹாங்காங்கில் இருப்பதும், அவரது தொடர்புடைய சிலர் சென்னையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களின் செல்போன், வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரே நாளில் ரூ.4 கோடி வரை பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வங்கிக் கணக்கை பணப் பரிவர்த்தனைக்கு அனுமதித்தால் ரூ.1 லட்சம் தருவதாக மர்ம நபர் கூறியுள்ளார். அதன்படி பலரும் வங்கிக் கணக்கை மர்ம நபர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. அவ்வாறு 30 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.
மேலும் மோசடிக்கு முகவர்களாக செயல்பட்டதாக சென்னை எண்ணூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது இலியாஸ், பாடி பகுதியைச் சேர்ந்த மோகன், தமிழ்வாணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், ரூ.75 ஆயிரம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
- புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.






