என் மலர்
புதுச்சேரி

தனியாருக்கு நிகராக செயல்படும் கலிதீர்த்தால்குப்பம் அரசு ஆரம்பப்பள்ளி.
அரசு பள்ளி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்யகூடாது
- பொதுமக்கள் கல்வித்துறைக்கு கோரிக்கை
- ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு இந்த அளவிற்கு இந்த அரசு பள்ளியை கூட்டு முயற்சியாக உயர்த்தி உள்ளனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு அருகே கலிதீர்த்தாள் குப்பத்தில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது.
இந்த ஆரம்பப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மூலம் மாணவ- மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த தனியார் பள்ளிக்கு இணையாக இப்பகுதியில் போட்டி போட்டு செயல் பட்டு வரும் அரசு பள்ளியாக இப்பகுதி பொதுமக்களிடம் கருதப்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து பல்வேறு கடின முயற்சிகளை மேற்கொண்டு இந்த அளவிற்கு இந்த அரசு பள்ளியை கூட்டு முயற்சியாக உயர்த்தி உள்ளனர்.
தற்போது இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலானோருக்கு புதுவை கல்வித்துறையின் சார்பில் பணி மாறுதல் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் புதிதாக வரும் ஆசிரியர்கள் மீண்டும் இவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி கற்பித்து மாணவர்களை முன்னேற்றிச் செல்ல நீண்ட நாட்கள் பிடிக்கும்.
மேலும் இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் மீண்டும் தனியார் பள்ளியை நோக்கி படையெடுப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்களும் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லாமல் இருக்கவும், இப்பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருக்கவும் இங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவர் களின் பெற்றோர்கள் கருதுகிறார்கள்.






