என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்
    • உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறி யாளர் வேல்முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் வரை சுமார் 1 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மூலம் ராஜ்பவன் மற்றும் முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட சாலை வீதி முதல் அதிதி ஓட்டல் சந்திப்பு வரை உள்ள 1650 மீட்டர் நீளமுள்ள சாலை சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் செப்பணிடும் பணியின் துவக்க விழா நடைபெற்றது. முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிடர் விடுதலைக்கழகம் ஆர்ப்பாட்டம்
    • நிலமோசடியில் தொடர்புடைய சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார் பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். இந்தி யகம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், பெருமாள், மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், திராவிடர் கழகம் சிவவீரமணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழர் களம் அழகர், அம்பேத்கர் தொண்டர்படை பாவாடைராயன், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர் உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    காமட்சியம்மன் கோவில் நிலமோசடியில் தொடர்புடைய சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார் பாலாஜியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கோவில் சொத்துக்களை வாங்கிய எம்.எல்.ஏ. ஜான்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

    இந்நிலையில், ஈச்சங்காடு கிராம த்தைச் சேர்ந்த இருவர்கள் பனித்திட்டு பகுதிக்கு வந்து மிரட்டல் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பனித்திட்டு இளைஞர்கள் ஓன்று திரண்டு சுமார் 50 பேர் மீண்டும் ஈச்சங்காடு கிராமத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு சென்று இருந்த நிலையில் அங்குவந்த கும்பல் அங்கு இருந்த தடி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை அடித்து நொறுக்கினர். வீடுகள் மீதும் கல் வீசி தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் ஈச்சங்காடு கிராம மக்கள் உயிர் பயத்தில் சிதறி ஓடினர். இதில், சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

    தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், கலைச்செல்வன் தலைமை யில் இரு கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடு த்தப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் பனித்திட்டு பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரசாந்த் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது.

    • அமைச்சக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • நிர்வாக பணியாளர் சீர்த்தி ருத்தத்துறை முழு பொறுப்பேற்று விடுப்பட்டோர் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    116 யூ.டி.சி காலிபணி யிடங்களுக்கான விண்ண ப்பங்களை வரவேற்று அதற்கான அறிவிப்பாணையை நிர்வாகம் மற்றும் பணியாளர் சீர்த்திருத்தத்துறை கடந்த கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது.

    இந்த யூ.டி.சி பதவிக்கான வி ண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பி க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தெளிவான அறிவுறு த்தல்கள், வழிகாட்டுதல்கள் இல்லாததால் பல இளைஞர்கள் ஆன்லைன் மூலம் யூ.டி.சி பதவிக்காக விண்ணப்பித்தும், விண்ணப்பங்கள் நிர்வாக பணியாளர் சீர்த்திருத்தத்துறைக்கு சென்று சேரவில்லை. இதனால் யூ.டி.சி பதவிக்கான போட்டி தேர்வில் அவர்கள் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு பறிபோய் உள்ளது.

    ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொழுது தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு பிறகு கணினியில் பதிவேற்றம் செய்த தகவல்கள் அனைத்தையும் சரியானதா? என உறுதி செய்யப்பட்ட பின்பே சமர்பிக்கும் முறையை கொடுக்க தவறியதன் விளைவாக விண்ணப்பங்கள் சரியாக சென்றடையவில்லை. இதர பணியாளர் தேர்வாணையங்கள் அனைவரும் புரியும் வகையில் குழப்பம் ஏற்படாமல் இருக்க தெளிவாக குறிப்பிடுகின்றன.

    அதே போல் நிர்வாக பணியாளர் சீர்த்திருத்தத்துறையும் தெளிவாக குறிப்பிட்டி ருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இதனால் நிர்வாக பணியாளர் சீர்த்தி ருத்தத்துறை முழு பொறுப்பேற்று விடுப்பட்டோர் அனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும். முதல்-அமைச்சர் இவ்விவ காரத்தில் தலையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • தகவல் அறிந்த, மங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • ஏம்பலம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஏம்பலம் பாலமுருகன் நகரில் 10-வருடங்களுக்கு முன்னர் ஜல்லி போடப்ப ட்டது. மேற்கொண்டு அதன் மேல் தார் போடாமல் விட்டுவிட்டனர். இதனால் தொடர் மழையினாலும், போக்குவரத்தாலும் ஜல்லி பெயர்ந்து விட்டது. இது குறித்த பலமுறை தொகுதி எம்.எல்.ஏ.விடம் புகார் அளிக்கப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் பாலமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏம்பலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த, மங்கலம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் நேரில் சென்று, விரைவில் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஏம்பலம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் கண்டனம்
    • புதுவை மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது சொத்தை தனியாரிடம் கொடுக்க இந்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதுவை அரசு மின் துறையை தனியார் மயமாக்க புதிய டெண்டர் விடுவதற்கு எடுத்துள்ள முடிவு தவறானதாகும். மக்களின் பொதுச்சொத்தை விற்பதற்கு அரசு தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. மின்துறையை தனியார் மயமாக்க மக்களிடம் கருத்து கேட்கவில்லை.

    அதற்கான ஒரு விரிவான ஆய்வும் நடத்தப்படவில்லை. மின்துறை ஊழியர்களின் கருத்தைக் கூட கேட்கவில்லை. மின்துறை சம்பந்தமாக ஊழியர்கள் முதல்-அமைச்சரையும் மின்துறை அமைச்சரையும் சந்தித்தபோது மின் துறையை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று முதலில் கூறப்பட்டது.

    ஆனால் தற்போது மத்திய அரசு புதுவை அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பியதில் இருந்து மின் துறையின் 51 சதவீத பங்குகளை தனியாருக்கும், 49 சதவீத பங்கு அரசிடம் இருக்கும் என்றும் மின்துறை சொத்துக்கள் அனைத்தும் தனியாருக்கு வாடகைக்கு விடும் வகையில் அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

    இது பொதுநலனுக்கு எதிரான முடிவாகும். எந்த சூழ்நிலையிலும் மின்துறையின் சொத்து புதுவை அரசின் சொத்தாகவே இருக்கவேண்டும். புதுவை மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பொது சொத்தை தனியாரிடம் கொடுக்க இந்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

    இவற்றையும் மீறி அரசு தனியார் மயமாக்க முடிவு செய்தால் இந்த அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதை மக்கள் தெரிந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடத்தை இந்த அரசுக்கு புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.
    • மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    புதுச்சேரி:

    தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், அரச முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது.

    அதனை தொடர்ந்து கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் புதுச்சேரி மாநில செய லாளர் சரவணன் முன்னி லையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கடலூர் கிழக்கு மாவட்ட தொண்டரணி நிர்வாகிகள் மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் சந்தித்து சிறப்பு பூஜையின் பிரசாதம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் அருண்ராஜ், சிதம்பரம் நகர தலைவர் கென்னடி, மாவட்ட தொண்டரணி செயலாளர் விஜய்குரு, நகர செயலாளர் விவேக், மாவட்ட தொண்டரணி பொருளாளர் விக்னேஷ், மாவட்ட தொண்டரணி துணை தலைவர் பிரித்திவிராஜ் மாவட்ட தொண்டரணி இணை செயலாளர்கள் மணிகண்டபிரபு, பாண்டியன், நகர மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் விக்னேஷ், நகர தொண்டரணி தலைவர் அமர், நகர தொண்டரணி செயலாளர் குணா, நகர துணை அமைப்பாளர் சின்னமணி மற்றும் கடலூர் கிழக்கு மாவட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    • மாணவர்-பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
    • புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ படிப்பில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10-சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

    ஏற்கனவே புதுவை அரசு இது சம்பந்தமான கோப்பினை தயார் செய்து ஆளுநருக்கு சமர்பித்துள்ள நிலையில், புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையின் கீழ் செயல்படுவதாலும், எந்தவொரு புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கல்வி ஆண்டே (2023-2024) மேற்படி 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒதுக்கப்பட்டால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட 370 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களில் 37 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்புகிட்டும்.

    இதே போல் 138 இளநிலை மருத்துவ(பி.டி.எஸ்) இடங்களில் 14 இளநிலை மருத்துவ (பி.டி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்பு கிட்டும். தற்போது இது சம்மந்தமான கோப்பை சுகாதாரத்துறை தயார் செய்து புதுவை அரசு அமைச்சரவை ஒப்புதலை பெற்று சட்டத்துறை, மற்றும் நிதித்துறை, ஒப்புதலைப் பெற வேண்டும்.

    ஆளுநரிடம் மேற்படி கோப்பினை கையொப்பம் பெற்று அதனை புதுவை அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன் பரிந்துரையைப் பெற்று 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியில் புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்து 40ஆயிரம் செலவில் வாய்க்கால் மற்றும் சிமெண்டு சாலை மேம்படுத்தல் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.

    தற்போது அங்கு வாய்க்கால் கட்டி கான்கிரீட் சிமெண்ட் போட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

    அப்பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறி யாளர் சண்முகம், பரமானந்தம், தொகுதி செயலாளர் சக்திவேல் அவைத்தலைவர் ஹரிகிரு ஷ்ணன், தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், மற்றம் கிளை செயலாளர்கள் உடன் இருந்தனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நாளை 20-ந் தேதி காலை 8.15 மணிக்கு நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சித்தலைவர் சிவா ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

    22-ந் தேதி இரவு தெப்பல் உற்சவம், 23-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
    • கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு கடந்த மே 21-ந் தேதி நடந்தது. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    பொது நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் புதுவை பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேற்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    • புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகிற 6-ந்தேதி வருகை தருகிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூலை மாதம் புதுச்சேரி வருவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    ஆனால் ஜனாதிபதி வருகை திடீரென ரத்தானது. இந்நிலையில் இருநாள் பயணமாக வருகிற 6, 7-ந் தேதிகளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புதுச்சேரி வர திட்டமிட்டுள்ளார்.

    அவர் புதுச்சேரியில் அரசு சார்பில் சமையல் கியாஸ் மானியம் ரூ.300 வழங்கும் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

    புதுவைக்கு வரும் ஜனாதிபதி கடற்கரை சாலையில் உள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரின் பாதுகாப்புக்காக பெங்களூரில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே ஜனாதிபதி இந்த மாதம் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டு கடைசியில் அவர் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×