என் மலர்
உண்மை எது
மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க இந்த தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கம் என கூறும் வலைதளம் மத்திய அரசு வேலை வழங்குவதாக அறிவித்த தகவல் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வலைதளத்தில் மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ரூ. 1,645 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் வைரல் தகவலில் உள்ள வலைதளம் போலியான ஒன்று ஆகும். இதுகுறித்த தகவலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் மத்திய அரசு வேலை வழங்குவதாக கூறும் வலைதளம் போலியானது என உறுதியாகிவிட்டது. மேலும் இந்த வலைதளத்திற்கும் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவாகிவிட்டது.
பொதுவாக அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைசகத்தின் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், முஸ்லீம்கள் சாலையில் நமாஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையின் நடுவே பலர் நமாஸ் செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
'வெள்ளி கிழமை பிரார்த்தனை செய்ய இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடுக்கிறார்கள். இது பிரார்த்தனை போன்று தெரியவில்லை, மற்றவர்களுக்கு எண்ணிக்கையை எடுத்துக்காட்டுவது போன்று இருக்கிறது. பிரார்த்தனையை வேறு இடங்களில் செய்ய கேட்டுக் கொண்டால், அதனை பாரபட்சம் காட்டுவதாக விமர்சிப்பர்,' எனும் தலைப்பில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2020 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதன் உண்மை புகைப்படம் ஜனவரி 2020 வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். இது உலகின் இரண்டாவது பெரிய ஜூம்மா பிரார்த்தனை கூட்டம் ஆகும்.
வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் மிகப்பெரும் முஸ்லீம்களின் கூட்டம் ஆகும். இந்த பிரார்த்தனை கூட்டம் டாக்கா நகரை ஒட்டியுள்ள டுராக் ஆற்றங்கரையில் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் நடைபெறும். அந்த வகையில், வைரல் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை என தெளிவாகிவிட்டது.
இந்தியாவில் ஒமைக்ரான் ஊரடங்கை தவிர்க்க இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி இருக்கும் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 83 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு என்ற அளிவில் ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல இந்தியாவில் பரவ துவங்கி இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு மிக வேகமாக பரவக்கூடியது என சமீபத்தில் உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக ஏற்பட இருக்கும் ஊரடங்கை தவிர்க்க ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்தும் முறையை பைசர் நிறுவன ஆய்வாளர்கள் பரிந்துரைப்பதாக கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே தகவலை நம்ப வைக்கும் விதமாக செய்தி குறிப்பு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டு இருக்கிறது. வைரல் ஸ்கிரீன்ஷாட் செய்தி, 'ஒமைக்ரான் காரணமாக பிறப்பிக்கப்பட இருக்கும் ஊரடங்கை தவிர்க்க வாராந்திர தடுப்பூசி முறை தேவைப்படலாம்,' எனும் தலைப்பு கொண்டுள்ளது.
இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் செய்தி உண்மையானது இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், இதே செய்தி நகைச்சுவை கலந்த தகவல்களை பதிவிடும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வலைதளத்திலேயே இது அன்றாட நகைச்சுவையை வழங்கும் தளம் என குறிப்பிட்டு இருக்கிறது. அந்த வகையில் வாராந்திர தடுப்பூசி முறை பற்றி பைசர் ஆய்வாளர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ள இடுகாட்டில் எடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நூற்றுக்கணக்கான கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவை ஜப்பானில் உள்ள வாகனங்களுக்கான இடுகாடு என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இங்கு கைவிடப்பட்ட வாகனங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை ஜப்பானில் உள்ள இடுகாட்டில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படங்கள் அமெரிக்காவில் உள்ள வாகன இடுகாட்டில் எடுக்கப்பட்டவை ஆகும். இரு புகைப்படங்களில் ஒன்று நியூ மெக்சிகோ பகுதியில் உள்ள வாகன இடுகாடு ஆகும். இதனை தனியார் செய்தி நிறுவன புகைப்பட கலைஞர் 2018 ஆம் ஆண்டு எடுத்தார்.

மற்றொரு படம் துருக்கி கலைஞர் டிஜிட்டல் முறையில் உருவாக்கியது ஆகும். அந்த வகையில், இரு படங்களும் ஜப்பானில் உள்ள வாகன இடுகாட்டில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் செயற்கைக்கோள் காட்சிகள் என கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த துக்க சம்பவத்தில் இருந்து இந்தியா இன்னும் மீளவில்லை.
ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இணையம் முழுக்க விபத்துக்கான காரணம் என கூறி பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் என கூறி ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது செயற்கைக்கோள் மூலம் பட்மாக்கப்பட்ட வீடியோ இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது தனியார் செய்தி நிறுவனம் உருவாக்கிய அனிமேஷன் வீடியோ ஆகும். இந்த வீடியோ செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டது என அந்த சேனலிலும் குறிப்பிடப்படவில்லை.
எனினும், இது செயற்கைக்கோள் வீடியோ என கூறி தவறான தகவல்களுடன் வீடியோவை விஷமிகள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். வைரல் வீடியோவில் தனியார் செய்தி நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்று இருக்கிறது.
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு மூன்று மாத இலவச ரீசார்ஜ் செய்யப்படும் என்பது போன்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில், அரசு மூன்று மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் அல்லது வி இணைப்பில் ஒன்றை பயன்படுத்தினால் இந்த சலுகையை பெற முடியும். கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்தால், உங்களுக்கு ரீசார்ஜ் செய்யப்படும். இந்த சலுகை டிசம்பர் 20 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த இணைய தேடல்களில் மத்திய அரசு இதுபோன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபற்றிய தகவலலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறது.
அந்த வகையில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இலவச ரீசார்ஜ் செய்யப்படுவதாக வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
கத்ரீனா கைஃப் நடனமாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் அவரின் மெகந்தி விழாவின் போது எடுக்கப்பட்டது என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் டிசம்பர் 9, 2021 அன்று திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நடைபெற்றது. திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

திருமணம் பற்றிய அறிவிப்பை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் தங்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். 'மெகந்தி விழாவில் கத்ரீனா கைஃப் அழகாக காட்சியளிக்கிறார். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்த இணைய தேடல்களின் போது, இந்த படம் அடங்கிய செய்தி தொகுப்பு ஜனவரி 24, 2020 அன்று தனியார் செய்தி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இது தனியார் நகை கடைக்காக படமாக்கப்பட்ட விளம்பர வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
விளம்பர வீடியோவில் கத்ரீனா கைஃப் உடன் அமிதாப் பச்சன் மற்றும் அவரின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் உள்ளனர். அந்த வகையில் வைரல் புகைப்படம் கத்ரீனா கைஃப் மெகந்தி விழாவில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
குன்னூர் அருகில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து களத்தில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பலத்தரப்பட்டோரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டு புகைப்படங்கள் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் எடுக்கப்பட்டதாக பகிரப்படுகின்றன.

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை குன்னூர் விபத்தின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படங்கள் 2019 ஆண்டு பூன்ச் பகுதியில் நிகழ்ந்த விபத்தின் போது எடுக்கப்பட்டவை ஆகும். இதே புகைப்படங்கள் முந்தைய விபத்துகளின் போதும் பகிரப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில், இணையத்தில் பகிரப்படும் புகைப்படங்கள் சமீபத்திய குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாதவர்கள் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை அந்நாட்டு அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பில் ஜெர்மனியில் மூன்றில் இருவர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜெர்மன் நாட்டு செய்தி வலைதளத்தின் செய்தி ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பலர் ஒன்றுகூடி முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஜெர்மனியில் இப்படித் தான் போராட்டம் நடத்துகின்றனர் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன்ஷாட் பற்றிய இணைய தேடல்களில், அது மார்பிங் செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில், ஜெர்மன் செய்தி நிறுவனம் இதுபோன்ற செய்தியை வெளியிடவில்லை.
வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள புகைப்படம் செப்டம்பர் 1, 2011 அன்று சிலியில் உள்ள சாண்டியாகோவில் நடைபெற்ற கல்விக்காக உலக முத்த மாரத்தான் எனும் நிகழ்வின் போது எடுக்கப்பட்டது ஆகும். அந்த வகையில், வைரல் படம் சமீபத்திய போராட்டத்தின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
எம்.பி.க்களின் உண்ணாவிரத போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காந்தி சிலையின் பின் சிலர் நின்று கொண்டே உணவு உட்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்ணாவிரதம் இருக்கும் எம்.பி.க்கள் காந்தி சிலையின் பின் உணவு உட்கொள்கின்றனர் எனும் தலைப்பில் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருப்பதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது.
நாங்கள் உண்ணாவிரதம் இருப்பதாக யார் கூறியது? ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து காந்தி சிலையின் முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறோம் என எம்.பி.க்களில் ஒருவரான பிரியண்கா சதுர்வேதி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அந்த வகையில் எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவே இல்லை என உறுதியாகிவிட்டது.
விராட் கோலி தன் மகளுடன் நிற்பதாக கூறி இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா ஷர்மா தங்களின் மகள் வமிகா பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வருகின்றனர். சமூக வலைதளம் பற்றி வமிகா முழுமையாக அறிந்து கொள்ளும் வரை அவரை வலைதளங்களில் அறிமுகம் செய்ய வேண்டாம் முடிவு செய்துள்ளதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், வமிகாவின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விராட் கோலி மற்றும் வமிகா இடம்பெற்றுள்ளதாக கூறி இரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

'ஒருவழியாக விராட் கோலியின் மகள் வமிகா முகம் வெளிப்பட்டு விட்டது,' எனும் தலைப்பில் இரு புகைப்படங்களும் ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கின்றன. புகைப்படங்களை இணையத்தில் ஆய்வு செய்த போது, அதில் இருப்பது விராட் கோலி போன்ற தோற்றம் கொண்ட சுசோபன் லஹிரி என தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த சுசோபன் லஹிரி தன் கையில் வைத்திருப்பது சகோதரரின் மகள் இவான்ஷி பட்டாச்சார்யா ஆகும். இந்த தகவலை சுசோபன் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வைரல் புகைப்படங்களில் இருப்பது விராட் கோலி இல்லை என உறுதியாகிவிட்டது.
தி ஒமிக்ரான் வேரியண்ட் எனும் தலைப்பில் திரைப்படம் உருவாகி 1960-க்களில் வெளியானது என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் இந்தியாவிலும் ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது இதன் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதைத் தொடர்ந்து டுவிட்டரிலும் ஒமிக்ரான் வேரியண்ட் எனும் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக துவங்கியது.
இந்த நிலையில், 'தி ஒமிக்ரான் வேரியண்ட்' எனும் தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகி 1963 ஆம் ஆண்டு வெளியானதாக கூறி படத்தின் சுவரொட்டி டுவிட்டரில் வேகமாக வைரலாகி வருகிறது. சுவரொட்டியில் பூமி மயானமாக மாறிய நாள் எனும் வாசகமும் இடம்பெற்று இருக்கிறது.

இதே சுவரொட்டியை இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'நம்புங்கள் அல்லது மயங்கிவிடுங்கள், இந்த திரைப்படம் 1963 ஆண்டு வெளியானது, இதில் உள்ள வாசகத்தை பாருங்கள்,' எனும் தலைப்பில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த இணைய தேடல்களில் தி ஒமிக்ரான் வேரியண்ட் எனும் பெயரில் எந்த திரைப்படமும் உருவாகவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இதனை ஐரிஷ் இயக்குனரும், எழுத்தாளருமான பெக்கி சீட்டிள் கற்பனையாக உருவாக்கியதாக தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் தி ஒமிக்ரான் வேரியண்ட் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியானதே இல்லை என உறுதியாகிவிட்டது.






