என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி சாலையில் தனியார் பார் நடத்துபவர் பிச்சைமணி. இவர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அங்கேயே சமையல் செய்து உணவு வழங்கி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் வயிற்றுப் போக்குக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள சமையலர் உணவுக்கு பயன்படுத்தும் அரிசி வேக 1½ மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. மேலும் அந்த சாதத்தை உருண்டையாக பிடித்து தரையில் வீசினார், அது உதிர்வதில்லை என தெரிவித்துள்ளார்.

    அந்த அரிசி சாதத்தை மருத்துவரிடம் காண்பித்தபோது இதனால்தான் ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பிச்சைமணி, மக்கள் நீதிமய்ய மத்திய மாவட்ட செயலாளர் காளிதாசிடம் தெரிவித்தார். அவர் அரிசியை ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு மனு அனுப்பினார்.

    ஏற்கனவே சீனாவில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டிற்கு வந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுபோல தற்போது விருதுநகர் சந்தையில் ரப்பர் அரிசி பயன்பாட்டில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி செல்வராஜனிடம் கேட்ட போது, தமிழகத்தில் பிளாஸ்டிக், ரப்பர் அரிசி பயன்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்கள் புகாரை தொடர்ந்து விருதுநகர் சந்தைகளில் இந்த வகை அரிசி உள்ளதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளதாலும் மாமரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துள்ளதாலும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    ராஜபாளையம்:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவமழை வெளுத்து வாங்கியதால் அணைகள் அனைத்தும் நிரம்பியது.

    காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

    மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மாமரங்களில் இந்த ஆண்டு இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    இது பார்வைக்கு அழகாக இருந்தாலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான அறிகுறி இது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையத்தைச் சேர்ந்த மூத்த விவசாயி ராமச்சந்திர ராஜா என்பவர் கூறியதாவது:-

    மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய். மங்கும் காலத்தில் அதிகளவு மாமரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் இந்த ஆண்டு அதிக அளவு வெயில் இருக்கும்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மாமரங்கள் பூத்துக் குலுங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டும் பருவமழை நன்றாக பெய்துள்ளதாலும் அதிகளவு பூக்கள் பூத்துள்ளதாலும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருதுநகர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் இ.குமாரலிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம் (வயது 37). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்தார்.

    நேற்று தனது வீட்டு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை சந்தனமகாலிங்கம் அரிவாளால் வெட்டினார். அப்போது வெட்டப்பட்ட மரக்கிளை அந்த பகுதியில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் சில வீடுகளுக்கு மின்தடை ஏற்பட்டது.

    இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரசேகரன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் சந்தன மகாலிங்கத்திடம் சென்று கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சந்தனமகாலிங்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை சந்திரசேகரன் உள்பட 3 பேரும் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியதில் சந்தனமகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் வச்சக்காரப்பட்டி போலீசார் விரைந்து சென்று சந்தனமகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் அருகே ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவலின்பேரில் இரிடியம் மோசடி கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் (வயது 35). இவர் தனது ஆட்டோவில் பெயிண்ட் அடிப்பதற்காக விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஒரு தொழிற்கூடத்திற்கு தனது நண்பர் கருப்பையா என்பவருடன் வந்தார்.

    ஆட்டோவை தொழிற்கூடத்தில் விட்டு, விட்டு அங்குள்ள டீக்கடையில் நண்பருடன் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அருகில் பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய 2 பேர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் தாங்கள் வைத்துள்ள பானையில் இரிடியம் இருப்பதாக கூறி அதை வாங்க வரும் நபரிடம் கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து விட்டு தப்பி விடலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை முத்துக்குமார் கேட்டுவிட்டார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அருகில் விடுதி முன் நின்று கொண்டிருந்த சொகுசுகாரை நோக்கி சென்று விட்டனர். இதுபற்றி முத்துக்குமார், ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்தநிலையில் போலீசார் சிவகாசி ரோட்டில் உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு விடுதி அறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் கும்பல் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அனைவரும் நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, ஹைதராபாத், பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ஏதோ ஒரு மோசடி செய்ய பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் ஒரு கோபுர கலசம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த கும்பலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்த கோபுர கலசத்தை அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் உதவியோடு திருடியதாகவும், அதனை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்வதற்காக விருதுநகரில் விடுதியில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த கோபுர கலசத்தை தடய அறிவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வுக்கு ஏற்பாடு செய்தனர். ஆய்வில் அந்த கோபுர கலசத்தில் இரிடியம் எதுவும் இல்லை என தெரிய வந்தது.

    மோசடியாக அந்த கோபுர கலசத்தை இரிடியம் இருப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்திற்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த கும்பலில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் (51), நாகர்கோவிலை சேர்ந்த ஜோசப் டேவிஸ் (63), ெகாடைக்கானலை சேர்ந்த குப்புசாமி (38), பெங்களூரை சேர்ந்த ராம்பிரசாத் (38), பழனியை சேர்ந்த வினோஜ் (29), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), கொடைக்கானலை சேர்ந்த கருப்பையா (29), நெல்லை மாவட்டம் நடுசாைல புதூரை சேர்ந்த பொன்னரசு (46), நாகர்கோவிலை சேர்ந்த டோமினிக் சேவியர் (45), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சாத்தக்குட்டி என்ற சதீஷ் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த ஜோசப்கென்னடி (52) ஆகிய 11 பேரை ைகது செய்தனர்.

    மேலும் இந்த கும்பலுடன் விருதுநகரைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம் அருேக மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் நரிமேடு பகுதியில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் இசக்கி ராஜா, மின் மோட்டார் பழுதை நீக்குவதற்காக மம்சாபுரத்தை சேர்ந்த தங்கேஸ்வரன் (வயது 45) என்பவரிடம் கூறினார்.

    அவர் மின்மோட்டார் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் தங்கேஸ்வரன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி குத்திக்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கொல்லூர்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 55), தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் வெள்ளைச்சாமி (44).

    இவரது சொந்த ஊர் வெம்பக்கோட்டை ஆகும். கூலித்தொழிலாளியான வெள்ளைச்சாமி வேலைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லூர்பட்டியில் வீடு எடுத்து வசித்து வந்தார். இதனை காரணம் காட்டி சிவலிங்கம் அடிக்கடி கேலி செய்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு 2 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது போதையில் வெளியூர்காரன் இங்கு வந்து பிழைப்பு நடத்துவது ஏன்? என சிவலிங்கம் கேட்டுள்ளார். இது வெள்ளைச்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    மது மயக்கத்தில் இருந்தவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை சரமாரியாக குத்தினார். பலத்த காயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    கொலை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிவலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வெள்ளைச்சாமியை கைது செய்து செய்தனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வத்திராயிருப்பில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்முருகன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் கருப்பையா கோரிக்கைகள் குறித்து பேசினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, நீதித்துறை மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாலன், விவசாய சங்க மாவட்டத்தலைவர் சந்திரமோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாத்தூாில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    வேளாண்திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சாத்தூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். வாழ்க விவசாயிகள் சங்கத்தலைவர் காளிராஜ் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய முருகன், தாலுகா செயலாளர் சாமிநாதன், முன்னாள் விவசாயிகள் மாவட்ட செயலாளர் சுப்புராஜ் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவு

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதையடுத்து அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க அமைப்பினரை சாத்தூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதுடன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகளையும் கேட்கிறார். இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வழக்கமாக நடைபெறும் தேர்தல் பிரசாரம் போல் இல்லாமல் இந்த முறை அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்களை தன்னுடன் எடுத்து செல்வதுடன் அந்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கையை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்து முடிக்கப்படும் என்ற உறுதியையும் பொதுமக்களுக்கு தருகிறார்.

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் இந்த பிரசார பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு, மக்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் அவர்களது கருத்துக்களையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விருதுநகர் வருகிறார்.

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அருகே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க. சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நடந்த இடத்திலேயே இந்த பிரசார கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் 25,000 முதல் 30,000 பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இக்கூட்டத்தில் மாலை 4 மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக மதியம் 1 மணி அளவில் மாவட்ட முழுவதும் இருந்து வருபவர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு 300 தொண்டர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான ஒப்புகைச்சீட்டுகளையும் வழங்குகின்றனர்.

    இந்த கோரிக்கை மனுக்களை மு.க. ஸ்டாலின் தன்னுடன் சென்னைக்கு எடுத்து செல்கிறார்.

    மேலும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தவர்களில் இருந்து 15 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தங்கள் கோரிக்கைகளையும், தங்களது கருத்துக்களையும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து பதிலளித்து பேசுகிறார்.

    மேலும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டிய அவசியத்தை விளக்கி பேசுகிறார்.

    இதற்காக விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 30,000 பேர் அமரக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூட்டம் நடக்கும் இடத்தின் அருகில் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்டத்திற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட மக்களை சந்திக்க வருகை தர உள்ள நிலையில் அனைவரும் திரளாக வந்து அவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். அவரது கருத்தையும் கேட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வத்திராயிருப்பில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தாலுகா செயலாளர் கோவிந்தன், சுப்பையா, ராமராஜ், முத்துராஜ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    சேத்தூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் வீராசாமி, ராஜபாளையம் நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, ராமர், விவசாய சங்க பிரதிநிதி ராமச்சந்திர ராஜா உள்பட 50 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்கைது செய்தனர்.
    போனில் ‘ராங் கால்’ மூலம் ஏற்பட்ட பழக்கம் மாணவியின் உயிரை பறித்துவிட்டது. நெருக்கமாக இருந்ததை காதலன் படம் எடுத்து பரப்பியதால் இந்த முடிவை எடுத்ததாக மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துவிட்டு மாணவி உயிரைவிட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் திடீரென தனது வீட்டின் மாடியில் உள்ள குளியல் அறையில் மாணவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 100 சதவீத தீக்காயத்துடன் அவர் உயிருக்கு போராடிய மாணவியிடம் சிவகாசி மாஜிஸ்திரேட்டு, மரண வாக்குமூலம் வாங்கினார்.

    அதில் மாணவி, தான் தீக்குளித்ததற்கான காரணம் குறித்து கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் இரவு அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மாணவி அளித்த மரண வாக்குமூலம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கல்லூரி மாணவியின் செல்போனுக்கு ஒரு ராங்கால் (தவறுதலான அழைப்பு) வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த விக்கி என்கிற வெங்கடேஸ்வரன் (வயது 23) என்றும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறி உள்ளார். பின்னர் இருவரும் சில நாட்கள் நட்பாக பேசி வந்துள்ளனர்.

    விக்கி சிவகாசிக்கு அவ்வப்போது வந்து மாணவியை நேரில் சந்தித்து பேசி உள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்னர் சிவகாசிக்கு வந்த விக்கி, மாணவியை இருசக்கர வாகனத்தில் சித்துராஜபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்னர் நேற்று முன்தினம் மாணவியிடம் பேசிய விக்கி, இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்ததை போனில் ஆபாச வீடியோ பதிவு செய்துள்ளேன். அது சம்பந்தமான படம், காட்சிகளை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன். இதை வெளியில் சொன்னால் உனக்கு தான் அவமானம்” என்று கூறி மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

    சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி செல்லபாண்டியன் நகரை சேர்ந்த மாணவர் விக்கியை கைது செய்தனர்.
    சாத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் முரளிதரன் (வயது22). இவர் கேட்டரிங் படித்து முடித்து உள்ளார்.

    கேட்டரிங் வேலை கிடைக்காததால் முரளிதரன் கடந்த ஒரு ஆண்டாக சாத்தூரில் கிளீனராக வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்து உள்ளார். ஆஸ்பத்திரியில் சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முரளிதரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.

    அதன்படி சம்பவத்தன்று சாத்தூர் வந்த முரளிதரன் தண்டவாளத்தில் அந்த வழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் முரளிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×