என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    விருதுநகர் அருகே அரசு பஸ் கண்டக்டர் வெட்டிக்கொலை

    விருதுநகர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் இ.குமாரலிங்காபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம் (வயது 37). இவர் சாத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்தார்.

    நேற்று தனது வீட்டு முன்பு நின்ற மரத்தின் கிளைகளை சந்தனமகாலிங்கம் அரிவாளால் வெட்டினார். அப்போது வெட்டப்பட்ட மரக்கிளை அந்த பகுதியில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் சில வீடுகளுக்கு மின்தடை ஏற்பட்டது.

    இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரசேகரன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் ஆகியோர் சந்தன மகாலிங்கத்திடம் சென்று கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சந்தனமகாலிங்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை சந்திரசேகரன் உள்பட 3 பேரும் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியதில் சந்தனமகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் வச்சக்காரப்பட்டி போலீசார் விரைந்து சென்று சந்தனமகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது மனைவி சுதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரன், அவரது தம்பி குணசேகரன் மற்றும் அய்யப்பன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×