என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பிரசாரத்திற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    தேர்தல் பிரசாரத்திற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்ட போது எடுத்த படம்.

    தி.மு.க.வினர் பிரமாண்ட ஏற்பாடு: மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் பேசுகிறார்

    விருதுநகரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதுடன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களது குறைகளையும் கேட்கிறார். இதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க.வினர் செய்துள்ளனர்.
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 29-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    வழக்கமாக நடைபெறும் தேர்தல் பிரசாரம் போல் இல்லாமல் இந்த முறை அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்களை தன்னுடன் எடுத்து செல்வதுடன் அந்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கையை தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்து முடிக்கப்படும் என்ற உறுதியையும் பொதுமக்களுக்கு தருகிறார்.

    ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் இந்த பிரசார பயணத்தை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு, மக்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள குறைகள் மற்றும் அவர்களது கருத்துக்களையும் கேட்டு வருகிறார். அந்த வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விருதுநகர் வருகிறார்.

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அருகே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க. சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நடந்த இடத்திலேயே இந்த பிரசார கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் இருந்தும் 25,000 முதல் 30,000 பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இக்கூட்டத்தில் மாலை 4 மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக மதியம் 1 மணி அளவில் மாவட்ட முழுவதும் இருந்து வருபவர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு 300 தொண்டர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கான ஒப்புகைச்சீட்டுகளையும் வழங்குகின்றனர்.

    இந்த கோரிக்கை மனுக்களை மு.க. ஸ்டாலின் தன்னுடன் சென்னைக்கு எடுத்து செல்கிறார்.

    மேலும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தவர்களில் இருந்து 15 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தங்கள் கோரிக்கைகளையும், தங்களது கருத்துக்களையும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து பதிலளித்து பேசுகிறார்.

    மேலும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டிய அவசியத்தை விளக்கி பேசுகிறார்.

    இதற்காக விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 30,000 பேர் அமரக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு தேவையான அடிப்படை வசதிகள், கூட்டம் நடக்கும் இடத்தின் அருகில் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூட்டத்திற்கு வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதனையொட்டி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட மக்களை சந்திக்க வருகை தர உள்ள நிலையில் அனைவரும் திரளாக வந்து அவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். அவரது கருத்தையும் கேட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×