என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ தொட்டுவிட்டநிலையில் மாவட்டத்தில் நகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் நோய்கள் பரவல் அதிகரிக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து வருகிறது.
அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளும் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை தொடர்கிறது.
அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு துறைத்தலைவர் பதிவு அலுவலகத்திற்கு வெளியேயும், உள்ளேயும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் என்றும் அனைத்து பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனாலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ளேயும், வெளியேயும் பத்திர பதிவுத்துறை தலைவரின்அறிவுறுத்தலை அதிகாரிகள் முறையாக பின்பற்றப்படாத நிலை நீடிக்கிறது.
பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெளியே பெரும் கூட்டம் கூடி இருக்கும் நிலையில் அதனை தவிர்க்க மாவட்ட பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கிளைகளில் வேலைநேரம் குறைக்கப்பட்டு விட்டது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் வாசல் வரை வாடிக்கையாளர்கள் முண்டியடித்துக் கொண்டு இருந்ததை காணமுடிந்தது.
வங்கி நிர்வாகம் இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவிட்டாலும் குறைந்தபட்சம் காவலர்கள் மூலமாவது வங்கி வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று செல்லுமாறு அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும்.
முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை வங்கிகள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டியதும் அவசியமாகும்.
வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், நெடுங்குளம், பிளவக்கல் அணை, பட்டுப்பூச்சி, தாணிப்பாறை, மாவூத்து ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், குளிர்பானம் தயாரிப்பதற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையக்கூடிய மாம்பழங்கள் சுவை அதிகமாக இருக்கும்.
இதனால் பொதுமக்கள் நேரடியாக தோப்பிற்கு சென்று விரும்பி வாங்கி செல்கிறார்கள். இந்தாண்டு இதற்கு மாறாக மாங்காய் சீசன் தலைகீழாக மாறிவிட்டது. தொடர் மழை மற்றும் மாமரங்களில் பூக்களில் நோய் தாக்குதலால் மா பிஞ்சு எடுப்பதற்கு முன்பாகவே பூக்கள் உதிர்ந்து பூக்கள் மற்றும் பிஞ்சுகள் இன்றி வெற்று மரங்களாக காணப்படுகிறது.
தற்போது மாங்காய்க்கு விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆதலால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்ததால் மாமரங்களில் பூக்கள் தாமதமாகவே பூக்க தொடங்கியது.
பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் மரங்களில் பூக்கள் அதிக அளவில் பூத்தது. இந்த பூக்கள் வெயிலில் கருகி உதிர்ந்து விடாமல் இருப்பதற்காக மருந்துகளை வாங்கி தெளித்தோம்.
மா பிஞ்சு காய்க்கும் நேரத்தில் மரங்களில் செல் நோய், தேன் நோய், பூக்களில் புழுக்கள் என மாறி, மாறி நோய் தாக்கியதாலும் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழையினாலும் மரத்திலிருந்து பூக்கள் மொத்தமாக உதிர்ந்துவிட்டது.
இதனால் தற்போது பூக்கள் இன்றியும், பிஞ்சு காய்கள் இன்றியும் மரங்கள் காணப்படுகிறது. மீண்டும் பூக்கள் எடுத்து காய் காய்ப்பதற்கு உண்டான வாய்ப்பும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இது போன்று தாங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொைக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,758 ஆக உயர்ந்துள்ளது.
17,363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,136 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு மேலும் 2 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் 1,624 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 174 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இம்மாவட்டத்தை சேர்ந்த 19 பேர் பிற மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகரில் பாண்டியன் நகர், என்.ஜி.ஓ.காலனி, கம்பர்தெரு, கவிக்குயில் தெரு, லட்சுமி நகர், சின்ன பள்ளிவாசல்தெரு, வைத்தியன் பொன்னப்பன் சந்து, அகமதுநகர், விக்னேஷ்காலனி, அல்லம்பட்டி, சூலக்கரை, மீசலூர், ரோசல்பட்டி, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தவிர சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, பாலையம்பட்டி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் பாதிப்பு பரவலாக உள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை இது பற்றிய அறிவிப்பினை வெளிப்படைத்தன்மையுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளியிட்டால்தான் பாதித்த பகுதிகளில் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்பு ஏற்படும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுத்து (வயது36). சொந்தமாக ரைஸ்மில் வைத்துள்ளார்.
இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு இன்று காதணி விழா நடை பெறுவதாக இருந்தது
இந்த நிலையில் நேற்று இரவு செல்வமுத்து அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
இதை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சோழபுரம் நல்லமங்கலம் ரெயில்வே தண்டவாளத்தில் செல்வமுத்து உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் மது குடித்ததை கண்டித்ததால் இரவு கொல்லம் சென்ற ரெயில் முன்பு பாய்ந்து செல்வமுத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூத்திப்பாறையை சேர்ந்த லிங்கம் மகள் சத்யபிரியா (வயது 21). இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வசந்தபாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
7 மாதங்களுக்கு பின்பு பேறுகாலத்திற்காக அருப்புக்கோட்டைக்கு வந்த சத்யபிரியா குழந்தை பெற்றும் கணவர் வீட்டுக்குச் செல்லாமல் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் சத்யபிரியாவுக்கும், சாத்தூர் கம்மாச்சூரங்குடியை சேர்ந்த ஞானகுருசாமி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதை தொடர்ந்து சத்திய பிரியா ஞானகுருசாமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஞானகுருசாமி பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாராம்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி வேலைக்கு சென்ற சத்ய பிரியா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. மகளை காணாதது குறித்து தந்தை லிங்கம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக விசாரணை நடத்திய போலீ சார், சத்தியபிரியாவின் மொபைல் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் அடிக்கடி பேசியவர் ஞானகுரு சாமி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஞானகுரு சாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சத்யபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காரணத்தால் சாத்தூர் போக்குவரத்து நகர் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அழைத்து சென்றேன். அங்கு சத்யபிரியாவை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித் தார்.
அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் ஞானகுருசாமியை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சத்யபிரியா காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பகுதியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பின்பு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புஎண்ணிக்கை 18,565 ஆக உயர்ந்துள்ளது. 17,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,029 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 237 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. டாக்டர்கள், நர்சுகள் என மருத்துவ துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முன்கள பணியாளர்களான இவர்களில் சிலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில், நேற்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 36 வயதுடைய பெண் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 25 வயதுடைய நர்சு ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனை குடியிருப்பில் தங்கி இருந்தவர்கள் ஆவார்கள். தங்களது குடியிருப்புகளில் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்த கோபாலகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் நேற்று மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,391 ஆக உயர்ந்துள்ளது. 17,204 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 950 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா பாதிப்புக்கு 237 பேர் பலியாகி உள்ளனர்.
சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு அறிவித்துள்ள இரவு நேர கட்டுப்பாடு காரணமாக 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு 9 மணிக்கு பின்னர் சிவகாசியில் இருந்து பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கு மட்டுமே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு 9 மணி வரை மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் பயணிகள் இருந்தால் மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்தநிலையில் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ் களில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்க வேண்டும் என்று அரசும், போக்குவரத்து கழகமும் உத்தரவிட்ட நிலையில் பெரும்பாலான பஸ்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால் மிகுந்த நெருக்கமான பயணத்தை பயணிகள் மேற்கொள்கிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இதை கடைபிடிக்க பஸ் நிர்வாகத்தினர் மறுக்கிறார்கள்.
இதனால் பஸ் பயணத்தின் போது கொரோனா அதிக அளவில் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுலர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழியில் நிறுத்தி ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






