என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகாசி நகர்குழு செயலாளர் முருகன், மாவட்ட கலெக்டர் கண்ணனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 3 லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லை. இதனால் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் தற்போது 15 பேர் தான் பணியில் உள்ளனர். எனவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்களை நியமித்து கொரோனா பாதிப்பு அடைந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தளவாய்புரம் அருகே 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தளவாய்புரம்:

    தமிழக அரசு தற்போது கொரோனா காலம் என்பதால் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிய தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று தளவாய்புரம் அருகேயுள்ள முகவூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சுமார் 50 பெண்கள் ஒன்று கூடி எங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தொடர்ந்து பணி வழங்க வேண்டும், எங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. 

    இதனை அடுத்து பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகாசி அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 81). இவரது கணவர் காளியப்பன். கடந்த 19 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த நிலையில் மூதாட்டி சொர்ணம் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் ஆறுமுகச்சாமி (52) அதேபகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் சொர்ணத்துக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் நோய் குணமாகாததால் மனமுடைந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பாலத்த தீக் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ஆறுமுகச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    திருச்சுழி

    திமுக

    விருதுநகர்

    திமுக

    அருப்புக்கோட்டை

    திமுக

    சிவகாசி

    காங்கிரஸ்

    சாத்தூர்

    திமுக

    திருவில்லிபுத்தூர்

    காங்கிரஸ்

    இராஜபாளையம்

    அதிமுக

    பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி சாத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் வடக்கு ரத வீதியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசு அறிவித்த உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைக்கான பணத்தை பெற்று தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாத்தூர் வட்டார செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பட்டாசு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலைவாசகன், தமிழாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சமுத்திரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கடந்த பிப்ரவரி 12-ந் தேதி அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சம் காசோலையும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.3 லட்சமும் நிவாரணத்தொகையாக அறிவித்தனர்.

    ஆனால் நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலைகள் அனைத்தும் பணமில்லாமல் திரும்பியதால் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

    குடும்பத்திற்கு ஆதாரமாக இருந்தவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட பணமும் வராமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நடுசுரங்குடி, கண்மாய், சூரங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வெடிவிபத்தில் சிக்கி கால், கைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    நிர்வாகத்திடம் இருந்து உரிய உதவித்தொகையை பெற்றுத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் லிங்கம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பழனி குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முத்துமாரி, மாநில துணைத்தலைவர் பாலமுருகன், சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 19,393 ஆக உயர்ந்துள்ளது.

    17,870 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,283 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

    கொரோனா நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று விருதுநகர் பாண்டியன் நகர், பாத்திமா நகர், பர்மா காலனி, பாலாஜி நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமிநகர், ரிசர்வ்லைன், சங்கரலிங்காபுரம், மத்திய சேனையில் உள்ள ஒரு கல்லூரியில் 7 பேர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, நரிக்குடி, சாத்தூர், மேட்டமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், மல்லாங்கிணறு, வீரகுடி, ஆலங்குளம், சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    மீனவ தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    விருதுநகர்:

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டத்தில் ஆறு,குளம், குட்டை, ஏரி, அணைக்கட்டு, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் மீன் பிடித்தும் கடல் மீன்களை வாங்கி விற்பனை செய்தும் மீனவ தொழிலாளர்கள் பிழைத்து வருகின்றனர். இவ்வாறு தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் இதுகுறித்த புள்ளி விவரங்களை முறையாக சேகரிக்காமல் உள்ள நிலையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் இதற்கான விவரங்களை சேகரித்து நலவாரிய அட்டை வழங்குவதற்காக மனு கொடுத்தும் உதவி இயக்குனர் இதுவரை ஆய்வு செய்யாமல் அடையாள அட்டை வழங்க மறுக்கப்படுகிறது. மீன்வளத்தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் மீன்பிடிதடைக்காலத்தில் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்து அதன் மூலம் நலவாரிய அட்டை வழங்கி சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீனவதொழிலாவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மீன்வளத்துறை மூலம் மீனவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கவும் நலவாரிய அட்டை கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை நாகலிங்க நகரை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஜெயபாரதியின் தந்தை ராமசாமி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சரத்குமாரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் சில நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் குறித்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆலங்குளம்:

    கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

    இந்தநிலையில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 60 பேருக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.
    செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    ராஜபாளையம்:

    மங்குகிற காலத்திற்கு மாங்காயும், பொங்குகிற காலத்திற்கு புளியங்காயும் காய்த்து குலுங்கும் என்பது முதியோர் பழமொழியாகும். இந்த ஆண்டு சீசனில் மா மரங்களில் அதிகமாக பூக்கள் பூத்துக்குலுங்கியது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் மழை பெய்து பூக்கள் உதிரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அடுத்தடுத்து பெய்த மழை காரணமாக மீண்டும் மாமரங்கள் பூத்து கை கொடுத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாங்காய்க்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் மாமரங்கள் ஏராளமாக உள்ளன.

    செம்மண் பூமியில் விளைந்த மாங்காய் ருசியாக இருக்கும் என்பதால் ராஜபாளையம் மாங்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பகுதியில் விளையும் நெல்லூர் சப்பட்டை எனும் இமாம்சா ரகம் அதிக ருசி உள்ளது. இதன் விலை கிலோ ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகிறது.

    2-ம் ரக மாங்காய்களான கிளிமூக்கு, ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட பஞ்சவர்ணம், நீலம், காசாலட்டு போன்ற மா வகைகள் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.

    நெல்லூர் சப்பட்டை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டைவிட தற்போது மாங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் சரிந்துள்ளது. இது பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு கசப்பானதாகும்.

    மாமரங்களில் பூ பூப்பது முதல் பிஞ்சு விடுவது வரை தொடர்ச்சியாக மருந்து அடித்து நோயில் இருந்து காப்பது முதல், மாங்காய் இறக்குவதற்கு ஒரு நபருக்கு ஒருநாள் கூலி ரூ.8 வரை செலவாகிறது. இதனை அடிப்படையாக வைத்து பார்த்தால்கூட இந்த ஆண்டு லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனல் மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    வங்கியில் இருந்து எந்த அழைப்பும் உங்களுக்கு வராது. கணக்கு எண், ஏ.டி.எம். எண் கேட்டால் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என எத்தனையோ முறை விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50).

    இவர் அந்த பகுதியில் உள்ள கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 24-ந்தேதி இவரது செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் செலுத்தப்பட உள்ளது. எனவே உங்களது கணக்கு எண், ஏ.டி.எம். விவரங்களை தெரிவிக்கும்படி கூறி உள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய ராஜேஸ்வரி தனது இரு வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 5 லட்சத்து 43 ஆயிரத்து 706-ஐ யாரோ மோசடி செய்துவிட்டனர்.

    ஒரு வங்கி கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரமும், மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 706-ம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

    அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கியில் இருந்து எந்த அழைப்பும் உங்களுக்கு வராது. கணக்கு எண், ஏ.டி.எம். எண் கேட்டால் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என எத்தனையோ முறை விழிப்புணர்வு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இன்னும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

    காரியாபட்டி அருகே தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 45). இவர்களுக்கு 2 மகன்களும், ஜெயலலிதா (17) என்ற மகளும் உள்ளனர்.

    முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள் ஜெயலலிதாவுடன் தனியாக முனியம்மாள் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.

    வழக்கமாக அதிகாலையில் எழுந்து விடும் முனியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கூலி வேலைக்காக சென்று விடுவார்.

    இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் முனியம்மாள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முனியம்மாளும், ஜெயலலிதாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் தாயும், மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    முனியம்மாளின் தாயார் அடைக்கலம் (65) அதே பகுதியில் தான் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஊர் மக்கள் சென்றபோது அங்கு தோட்டத்தில் கட்டிலில்அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆவியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி தலைமையில், போலீசார் சம்ப இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது காரியாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×