search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நிவாரண தொகையை பட்டாசு ஆலை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி சாத்தூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் வடக்கு ரத வீதியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசு அறிவித்த உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைக்கான பணத்தை பெற்று தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாத்தூர் வட்டார செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. பட்டாசு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலைவாசகன், தமிழாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சமுத்திரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கடந்த பிப்ரவரி 12-ந் தேதி அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ரூ. 5 லட்சம் காசோலையும், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.3 லட்சமும் நிவாரணத்தொகையாக அறிவித்தனர்.

    ஆனால் நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலைகள் அனைத்தும் பணமில்லாமல் திரும்பியதால் வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

    குடும்பத்திற்கு ஆதாரமாக இருந்தவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட பணமும் வராமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நடுசுரங்குடி, கண்மாய், சூரங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வெடிவிபத்தில் சிக்கி கால், கைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான நிவாரண தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    நிர்வாகத்திடம் இருந்து உரிய உதவித்தொகையை பெற்றுத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் லிங்கம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பழனி குமார், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முத்துமாரி, மாநில துணைத்தலைவர் பாலமுருகன், சிவகாசி வட்டார செயலாளர் ஜீவா, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. சங்க நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×