என் மலர்tooltip icon

    விருதுநகர்

    ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.
    ராஜபாளையம்

     ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் புதுப்பாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக மகா பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. 

    கடந்த 7-ந் தேதி திருவிழா தொடங்கியது.  8ம் நாள் விழாவான நேற்று தெப்ப உற்சவ  விழா நடத்தப்பட்டது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் சொக்கநாதர் மீனாட்சி அலங்கார தெப்பத்தில் எழுந்தருளி 7 முறை வலம் வந்தனர். 

    வாத்திய மேளதாளங்களுடன் திருமுறை மன்றம், பஞ்சோபசார குழு, சைவசித்தாந்த சபை மற்றும் சங்கரன்கோவில் அடியார்கள் குழு கலந்து கொண்டு பாடல்கள் பாடி தெப்போற்சவ  வலம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து---கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
    ராஜபாளையத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரு.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ராஜபாளையம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது  சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்த சீனிவாசன் என்பவரிடம் ரூ.1.50 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். 

    பின்னர் ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் கொண்டு வந்து ஆணையாளர் சுந்தரம்பாளிடம் ஒப்படைத்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 49). இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், கோபிகண்ணன் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    பத்மநாபன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் வேலை  முடிந்து வீட்டுக்கு வந்தபோது வாந்தி எடுத்துள்ளார். அதுகுறித்து மனைவி  கேட்டபோது, தென்னைமரத்துக்கு வைக்கும் விஷமாத்திரைகளை தின்றுவிட்டதாக கூறியிருக்கிறார். 

    இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த பத்மநாபன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததால் விஷ மாத்திரைகளை தின்று அவர் தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், ரமணா, பலராமன் ஆகிய 4 பேர் மீது 2 வழக்குகளை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திரன், அ.தி.மு.க.நிர்வாகி விஜயநல்லதம்பி ஆகியோர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ரூ.3 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், ரமணா, பலராமன் ஆகிய 4 பேர் மீது 2 வழக்குகளை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை கடும் முயற்சிக்கு பின் தமிழக போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.

    அதன்படிட கடந்த 12-ந் தேதி ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். இரவு 10.30 மணி வரை 11 மணி நேரம் போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

    சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    விசாரணை முடிவில் இன்று (15-ந்தேதி) மீண்டும் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜியிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் மோசடி வழக்குகள் தொடர்பாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதையும் படியுங்கள்... தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் மேலும் 48 பேர் நீக்கம்- துரைமுருகன் அறிவிப்பு

    திருச்சுழி அருகே இளம்பெண் மாயமானார். இது சம்பந்தமாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    திருச்சுழி அருகே விடத்தகுளம் புதூரைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகள் கனிமொழி(வயது 22).  சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். 

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.  இது குறித்து வளர்மதி நரிக்குடி போலீசில் புகார் செய்தார். அதில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த கனிமொழி திடீரென மாயமானார். 

    அவர் அடிக்கடி செங்கப்படையை சேர்ந்த ரஞ்சித் என்பவருடன் செல்போனில் பேசி வந்தார். இதனை கண்டித்தோம்.  எனவே அவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
    மின் வாரிய ஊழியர் மற்றும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் சேவுகன். மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருக்கு வினோத் என்ற மகனும், விமல் என்ற மகனும் உள்ளனர்.

    மூத்த மகன் வினோத் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 5 வருடத்திற்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    4 மாதத்திற்கு முன்பு வினோத்திற்கும், அவருடைய மனைவி தீபிகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதில் இருந்து வினோத் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வினோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை சேவுகன் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுத் தொட்டியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். 

    கந்தசாமி குடிப்பழக்கத்திற்கு  அடிமையானார். இதனால் கந்தசாமியை பெற்றோர் சத்தம் போட்டனர்.  இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கந்தசாமியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து கந்தசாமியின் தந்தை சிவனாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளரின் திடீர் இறப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தி.மு.க.வினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 43). தி.மு.க. நிர்வாகியான இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

    அதன்படி வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக முத்தையா அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்த அவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் முத்தையா மற்றும் கட்சியினர் காலை முதலே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இரவு 9 மணி அளவில் பிரசாரத்தை முடித்த அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவர் சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நள்ளிரவில் முத்தையாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் துடித்த அவர் சிறிது நேரத்திலேயே மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும் பத்தினர் உடனடியாக அவரை வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் முத்தையா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தி.மு.க. வேட்பாளரின் திடீர் இறப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தி.மு.க.வினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த தி.மு.க. வேட்பாளருக்கு சுந்தரலட்சுமி என்ற மனைவியும், முத்துஈஸ்வரி, தனலட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப் பதிவுக்கு முன்பு இறந்தால் அந்த தொகுதி அல்லது வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தற்போது வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது தி.மு.க. வேட்பாளர் மாரடைப்பால் இறந்துள்ளதால் அந்த வார்டு தேர்தல் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கான முறையான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இதையும் படியுங்கள்...முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள்- கேரள அதிகாரிகள் ஆய்வு

    ஸ்ரீவில்லிபுத்தூரிர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவன் கைது செய்யப்பட்டான்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி  கல்லூரிக்கு சென்றபோது இரும்பு கடையில் வேலை பார்த்த  17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவரம் தெரியவந்ததும் மாணவியை பெற்றோர் கண்டித்தனர். 

    இந்த நிலையில் கடந்த 10ந்தேதி  வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து  தெரிவிப்பதற்காக  அவரது தாயார்  ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தபோது,  17 வயது சிறுவனின்  பெற்றோர்  மாணவியை அங்கு அழைத்து வந்திருந்தனர்.

    பின்னர் மாணவியை அவரது  தாயார் வீட்டுக்கு அழைத்து சென்று   விசாரித்தபோது, 17 வயது சிறுவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி  நாகப்பட்டினம்  மாவட்டம் பூம்புகாரில் உள்ள  உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். 

    அதன் அடிப்படையில் மாணவியின் தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி  17 வயது சிறுவனை கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் ஹெலன் வின்னரசி (வயது 29). இவருக்கும், பவுல் ஜேம்ஸ்  என்பவருக்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத் தினர் கூடுதலாக 100 பவுன் வதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக  ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் ஹெலன் வின்னரசி புகார் செய்தார். 

    மேலும் தான் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த நேரத் தில் கணவர் பவுல் ஜேம்ஸ் அமெரிக்கா சென்று விட்ட தாகவும், அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி  பவுல் ஜேம்ஸ்  மற்றும் ஸ்டெல்லா,  பரலோக மரியவியாகப்பன்,  ஆரோக்கியமேரி, அந்தோணி என்றஅன்பு ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் 22 பவுன் நகைகள் அபேஸ் செய்யப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 60). இவர்தனது மகள் மகாலட்சுமியுடன் கடந்த 6-ந் தேதி ராஜபாளையத்தில் இருக்கும் அக்காவின் பேத்திக்கு நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்சில் சென்றார்.

    வத்திராயிருப்பு வந்து அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத் தூருக்கு பஸ்சில் ஏறி பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் இலவச மகளிர் பஸ்சில் செல்லும்போது அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த மணிபர்சில்  18 பவுன்  நகை  மற்றும் 4 பவுன்   2  தங்க வளையல்கள் வைத் திருந்தார். அதை யாரோ அபேஸ் செய்து விட்டனர்.

     ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இறங்கி  ஆவாரம்பட்டியில் உள்ள அவரது தங்கை வீட்டுக்கு நடந்தே வீட்டிற்கு சென்றதாகவும், அந்த  வீட்டில் வைத்து  பார்த்தபோது மணி பர்ஸ் மற்றும் அதில் இருந்த சுமார் 22 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 11 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, சாத்தூர் எலக்ட்ரானிக்ஸ் கடை அதிபர் ரவீந்திரன் கொடுத்த புகாரின்பேரில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் போலீசார தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தலைமறைவான அவரை கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் போலீசார் கைது செய்து விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    அதன்படி ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு தயாரானபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து அவர் குணமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.

    ஆனால் விசாரணைக்கு வந்த ராஜேந்திரபாலாஜி கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை வைத்திருக்கவில்லை. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தாமல் சான்றிதழுடன் வரும்படி கூறினர். அதன்படி ராஜேந்திர பாலாஜி சார்பில் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் பகல் 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டதா?. அது யார் மூலம் பெறப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர். தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்காக சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ராஜேந்திர பாலாஜி வந்ததும் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இரவு 10.30 மணி வரை போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 11 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் உடன் இருந்தனர்.

    இதையும் படியுங்கள்... பொங்கல் பரிசு மூலம் 120 கோடி கமிஷன் - திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

    பன்றி கடித்து குதறியதால் பெண் படுகாயம் அடைந்தார்.
    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி காட்டுப்பகுதியில் ஏராளமான  பன்றிகள் உள்ளன. சுமார் 80 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் அடிக்கடி கிராமப்பகுதிகளில் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பாலையம்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாண்டி மனைவி ஆறுமுகம் (வயது 55) என்பவர் கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பொது கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக சுற்றித் திரிந்த  பன்றிகள் திடீரென ஆறுமுகத்தை சுற்றி வளைத்து கடித்து குதறின. 

    இதனால் அவர் கூக்குரலிட்டார். இதை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விரைந்து வந்து  பன்றிகளை விரட்டி யடித்தனர். இருப்பினும் பன்றி கடித்ததில் ஆறுமுகத்துக்கு கை, கால்களில் ரத்தக்காயம்  ஏற்பட்டது. உடனடியாக அவர்  அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பாலையம்பட்டி காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகம் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
    ×