என் மலர்tooltip icon

    விருதுநகர்

    தி.மு.க. வேட்பாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 19&வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக செந்தில்குமார் என்ற ராஜா போட்டியிடுகிறார். 

    இவர் நேற்று தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன் மற்றும் சிலர் வந்தனர்.

    அவர்கள் தன்னை கட்டையால் தாக்கி படுகாயப்படுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக ராஜபாளையம் வடக்கு போலீசில் செந்தில்குமார் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அ.தி.மு.க. வேட்பாளர் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், ஆறுமுகபாலாஜி உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பட்டியலில் பெயர் இல்லை என கூறி வாக்களிக்க வந்தவர்களை அதிகாரி திருப்பி அனுப்பினார்.
    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் 5&வது வார்டுக்கான வாக்குச்சாவடி விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

    இங்கு இன்று காலை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். அவர்கள் பூத் சிலிப்பை கொடுத்தபோது அங்கிருந்த அதிகாரி உங்களுக்கு இங்கு வாக்கு இல்லை என திருப்பி அனுப்பினார். இதனால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு எந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என கேட்டபோது சரியான பதில் இல்லை.

    இதேபோல் பல வாக்காளர்களையும் அதிகாரி திருப்பி அனுப்பியபோது, அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் இவர்களுக்கு இங்குதான் வாக்கு உள்ளது என கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விசாரித்தபோது தேர்தல் அதிகாரி வைத்திருந்தது பழைய வாக்காளர் பட்டியல் என்பதும் தற்போது புதிய வாக்காளர் பட்டியல் அமலில் உள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனால் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்த அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு புதிய வாக்காளர் பட்டியல்படி வாக்காளர்கள் வாக் களித்து சென்றனர்.
    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரிசி பைகளுடன் மினி வேன் நிற்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று வேனில் இருந்த அரிசி பைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்து விட்டது. நாளை (19-ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் போன்றவை வழங்கப்படுகிறதா என்பதை தேர்தல் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் அரிசி பைகளுடன் மினி வேன் நிற்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று வேனில் இருந்த அரிசி பைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    அந்த வேனில் 5 கிலோ அரிசி பை 900 எண்ணிக்கையில் இருந்தது.

    இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி ஜெய பாண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து அரிசியை பார்வையிட்டார். அப்போது அது ரே‌ஷன் அரிசி இல்லை என்றும் பொன்னி அரிசி என்றும் தெரியவந்தது.

    பின்னர் அந்த அரிசி பைகள் திருத்தங்கல் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் அரிசி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருத்தங்கலில் உள்ள ஒரு கடைக்கு அந்த அரிசி கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதற்கிடையில் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு அரிசி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அந்த அரிசி ஒதுக்கப்பட்டிருந்த தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக உணவு பொருள் தடுப்பு கடத்தல் பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர்.

    விருதுநகரில் 761 வாக்குச்சாவடிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பதால் பதட்டமான 103 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
    விருதுநகர்

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக் கோட்டை,  திருத்தங்கல் ஆகிய 5  நகராட்சிகளுக்கும், சேத்தூர், வத்திராயிருப்பு, செட்டியார்பட்டி, காரியாபட்டி, மம்சாபுரம், சுந்தரபாண்டியபுரம், மல்லாங்கிணறு, தென்கோடிகுளம், வ.புதுப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுகிறது. 

    ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 363 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 1,613 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் 357பேரும், தி.மு.க. சார்பில் 293பேரும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 161 பேரும், நாம்தமிழர் கட்சி சார்பில் 113பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 34பேரும், தே.மு.தி.க. சார்பில் 34பேரும், போட்டியிடுகின்றனர்.

    அவர்களைத்தவிர வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நாளில் இருந்தே பிரதான கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களின் வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது.இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. 

    வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலெக்டர் தலை மையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 363 வார்டுகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 761 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொதுமக்கள் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களித்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச் சாவடிகளாக கண்ட றியப்பட்டுள்ள 103வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார்  பணியமர்த் தப்பட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவை  வெப்கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

    மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் இன்று முதல் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இந்நிலையில் வாக்கு பதிவிற்காக  பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள்  வாக்குச்சாவடிகளுக்கு இன்று பலத்த போலீஸ் பாது காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக் கப்பட்டன. அவற்றை வாக்குச்சாவடிகளில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். 

    வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக தீர்வுகாணும் வகையில் கூடுதல் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
    ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசிமக தேரோட்டம் நடந்தது.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் சொக்கர் என்ற ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு தற்போது மாசிமக பிரம்மோற்சவ திருவிழா நடந்துவருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தோரோட்டம் நடைபெற்றது.

    கோவில் பரம்பரை அறங்காவலராக பொறுப்பு வகிக்கும் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மாசிமக தோரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.

    முன்னதாக  தேரில் சொக்கர்-மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தேர் முன்பு பல்வேறு வாத்திய மேளதாளங்களுடன் திருமுறை மன்றம், பஞ்சோபசார குழு, சைவ சித்தாந்த சபை மற்றும் சங்கரன்கோவில் அடியார்கள் குழு கலந்துகொண்டு பாடல்கள் பாடி சென்றனர்.

    தோரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ராமமந்திரம், காந்தி கலைமன்றம் உள்ளிட்ட முக்கிய ரத வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.
    ராஜபாளையம் அருகே புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    விருதுநகர்

    வத்திராயிருப்பு ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் சின்னஓட்டக்காரன் என்ற குமார்(வயது 32). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று குமார் மதுகுடிக்க தனது தாயரிடம் பணம் கேட்டுள்ளார். 

    ஆனால் அவர் பணம் தர மறுத்ததோடு கண்டித்துள்ளார். இதில் விரக்தியடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கூமாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார்(21). ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்த இவர் சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். 

    இதில் விரக்தியடைந்த அய்யனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளைமறுநாள்(19ந்தேதி) நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 43பி.பி. அடிப்படையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி தேர்தல் நடைபெறும் நகர்ப்புற இடங்களில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை வழங்க வேண்டும்.

    மேலும் தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில் களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கவேண்டும். அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

    மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் 19ந்தேதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை 8807429192, 04562&252130 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொழிலாளர்கள் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    2-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் கே.செவல் பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 28). இவர்களது ஒரு வயது பெண் குழந்தை ஹாசிணி.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் இறந்து விட்டார். அதன் பிறகு கலைச்செல்வி தனது தந்தை கருப்பசாமி வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டமிட்டனர்.

    இதற்காக வரன் பார்த்தனர். அப்போது கலைச்செல்விக்கு குழந்தை இருப்பது தெரிந்து பலரும் பின் வாங்கினர். இதனால் அந்த குழந்தையை விற்று விட குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக சிவகாசியை சேர்ந்த திருமண புரோக்கர் கார்த்தி என்பவரை தொடர்பு கொண்டனர்.

    அவர் குழந்தையை விற்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதுபற்றி தனக்கு தெரிந்த தேவேந்திரன், நந்தகுமார் ஆகியோரிடம் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் குழந்தையை விற்பது தொடர்பாக நந்தகுமார் பலரிடம் பேசி உள்ளார்.

    மதுரையை சேர்ந்த செண்பகராஜன், மகேஸ்வரி என்ற உமா, மாரியம்மாள் ஆகியோரிடம் பெண் குழந்தை குறித்து நந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர்கள் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வடை வியாபாரி கருப்பசாமி- பிரியா தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்றும், அவர்களிடம் குழந்தையை விற்றுவிடலாம் என்றும் கூறினர்.

    இதனை தொடர்ந்து கருப்பசாமி-பிரியா தம்பதியிடம் குழந்தையை பற்றி தெரிவிக்கப்பட்டது. குழந்தையை உங்களுக்கு தர ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வேண்டும் என பேரம் பேசினர். அவர்கள் பணத்தை கொடுத்ததும் குழந்தையை விற்றுவிட்டனர்.

    இதற்கிடையில் குழந்தை விற்பனை குறித்து கூரைகுண்டு கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை விற்பனை நடந்து இருப்பது உறுதியானது.

    இதுகுறித்து சூலக்கரை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி புகார் செய்தார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் துணை சூப்பிரண்டு அர்ச்சனா மேற்பார்வையில் சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் அதிரடி விசாரணை நடத்தியதில் குழந்தையை விற்று தாய் கலைச்செல்வி மற்றும் அவரது தந்தை கருப்பசாமிக்கு ரூ.80 ஆயிரம் கொடுத்திருப்பது தெரியவந்தது. மீதி பணத்தை மற்ற 8 பேரும் பங்கு போட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து கலைச்செல்வி உள்பட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கலைச்செல்வி, கருப்பசாமி, கார்த்தி, தேவேந்திரன், நந்தகுமார், செண்பகராஜன், மகேஸ்வரி என்ற உமா, மாரியம்மாள் மற்றும் குழந்தையை வாங்கிய வடை வியாபாரி கருப்பசாமி, அவரது மனைவி பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான கார்த்தி, நந்தகுமார் ஆகியோர் இதுபோன்று குழந்தையை விற்பதில் குழுவாக செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இதுபோல வேறு குழந்தைகளை விற்று உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2-வது திருமணத்திற்காக பெற்ற குழந்தையை விற்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    விருதுநகரில் நடந்த வாகன சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    விருதுநகர்

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் அதிகாரிகள், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அதன்படி விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் தனிப்படை தாசில்தார் பொன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த விருதுநகர் பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது44) என்பவரை மறித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரொக்கம் இருந்தது. ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. 

    இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சரவணக்குமார் விருதுநகர் பழைய பஸ்நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருவதும், மது விற்ற பணத்தை கொண்டு செல்லும்போது சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது. 

    உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டது.உரிய ஆவணங்களை காண்பித்து அதனை பெற்றுச்செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 
    விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வுக்கான மையம் மாற்றப்பட்டு உள்ளது.
    விருதுநகர் 

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ள தேர்வு மையத்தை முறையாக அறிந்து உரிய நேரத்தில் சென்று தேர்வர்கள் தேர்வு எழுதுமாறு விருதுநகர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
    விருதுநகர் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை முதல் கட்டமாகவும், 16ந்தேதி முதல்  18ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், முதுகலை ஆசிரியர்கள், கணிணி பயிற்றுநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 நேரடி நியமனம் சார்பான கணினி வழியான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

    இதில் காரியாபட்டி, புல்லூர், சேது பொறியியல் கல்லூரியில் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில்  நடைபெற இருந்த கணிணிவழி தேர்வுகள் நிர்வாக  காரணங்களுக்காக வேறு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    எனவே சம்மந்தப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுத உள்ள அனைத்து தேர்வர்களும்  ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வர்களின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மற்றும் Voice Message,  தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரியில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் சார்பான விபரத்தினை மீண்டும் சரிபார்த்து அறிந்து, அதற்குரிய Admit Card - ஐ பதிவிறக்கம் செய்து புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்று தேர்வு எழுத விருதுநகர் மாவட்ட தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

    விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்தை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் சிலர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும் அதனை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவர, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் சிலர் வெடிபொருட்களை பதுக்கிவைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிராஜ் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கீழ தாயில்பட்டி பகுதியை சேர்ந்த மாதவன்(வயது 24) என்பவரிடம் இருந்து 10 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் டி. கோட்டையூரை சேர்ந்த முனீஸ்வரன்(50) என்பவரும் 10 கிலோ உதிரி வெடிகளை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். விஜயகரிசல்குளததை சேர்ந்த நல்லதம்பி (25) என்பவர் ஆயிரம் வாலா சரவெடிகள் மற்றும் உதிரி வெடிகளை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மானாவாரி,  கிணறு மற்றும் குளத்துப்பாசன விவசாயத்தில்,  நில உழவுப்பணியிலிருந்து அறுவடை வரையிலான பணிகளை எந்திரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் வகையில் ‘வேளாண்மை எந்திரமயமாக்கல்” திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை  மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு இயந்திரங்கள்  வாடகைக்கு வழங்கப்படுகிறது. 

    விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல்  துறையில் உழுவை எந்திரம் 8 எண்களும், மண் தள்ளும் எந்திரம் 2 எண்களும், ஜே.சி.பி. எந்திரம் 2 எண்களும், பொக்லைன் எந்திரம் 1 எண்ணும், தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 எண்ணும்  அரசு நிர்ணயம் செய்த குறைந்த வாடகையில் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

    உழுவை  எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.400க்கும், மண் தள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.970க்கும், ஜே.சி.பி. எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.760க்கும், பொக்லைன் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1660க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.650க்கும்  (எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவு உட்பட) விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

    மேலும் பல்வேறு புதிய புதுமையான தொழில்நுட்ப கருவிகளும், டிராக்டருடன் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு ரூ.400- என்கிற குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நேரடியாக உழவன் செயலி மற்றும் வாடகை செயலியினை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகையினை முன்பணமாக அதிகபட்சம் 20 மணி நேரத்திற்கு வங்கி அட்டை பரிவர்த்தனை மூலம் செலுத்தி பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
      
    விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் உதவி  செயற்பொறியாளரையும், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக் கோட்டை மற்றும்  சாத்தூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளரையும்  தொடர்பு கொண்டு பயன டையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    ×