என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார்: ராஜேந்திரபாலாஜியிடம் 134 கேள்விகள் கேட்ட போலீசார்
விருதுநகர்:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறப்பட்டது. அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி, சாத்தூர் எலக்ட்ரானிக்ஸ் கடை அதிபர் ரவீந்திரன் கொடுத்த புகாரின்பேரில் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் போலீசார தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தலைமறைவான அவரை கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் போலீசார் கைது செய்து விசாரணைக்காக விருதுநகர் அழைத்து வந்தனர்.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
அதன்படி ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு தயாரானபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து அவர் குணமடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆனால் விசாரணைக்கு வந்த ராஜேந்திரபாலாஜி கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை வைத்திருக்கவில்லை. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தாமல் சான்றிதழுடன் வரும்படி கூறினர். அதன்படி ராஜேந்திர பாலாஜி சார்பில் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் பகல் 11 மணிக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டதா?. அது யார் மூலம் பெறப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பினர். தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்காக சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ராஜேந்திர பாலாஜி வந்ததும் மீண்டும் விசாரணை தொடங்கியது.
இரவு 10.30 மணி வரை போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். சுமார் 134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பகல் 11 மணிக்கு விசாரணைக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 11 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அ.தி.மு.க. வக்கீல் அணியினர் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... பொங்கல் பரிசு மூலம் 120 கோடி கமிஷன் - திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு






