என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50 மன வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப் பணி சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கான பள்ளியில் (எல்வின் நிலையம்) நடந்தது. பள்ளி நிர்வாகி தயாளன் பர்னபாஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட வேம்பு. புங்கை. அரசமரம் மற்றும் புளியமர கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.

    இந்த மரக்கன்றுகள் சாட்சியாபுரம் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களால் பராமரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    75 இளங்கலை வணிகவியல் துறை மாணவர்கள் மற்றும் 50 மன

    வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் விரிவாக்கப் பணி பொறுப்பாளர் பாபுபிராங்கிளின் செய்திருந்தார்.

    • இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.
    • பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமா வாசை பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா குறைந்ததையடுத்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி கடந்த 25-ந்தேதி முதல் இன்று (30-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 6 நாட்களில் சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், குழந்தைகள் என 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர்.

    கடந்த 27-ந்தேதி முதல் சதுரகிரி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையால் மலை பாதைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சிக்கிய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மீட்டனர். மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் சதுகிரிக்கு மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    இறுதி நாளான இன்று காலை 7 மணிக்கு மலையேற வனத்துறை அனுமதி அளித்தது.

    அடிவாரத்தில் குவிந்திருந்த பக்தர்களின் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டு தாணிப்பாறை வழியாக அனுமதிக்கப்பட்டனர். இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.

    • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • 2-வது சனிக்கிழமையான 13-ந் தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த திருவிழா கடந்த 24-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் வருகிற 1-ந் தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அதனை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு மாதத்தின் 2-வது சனிக்கிழமையான 13-ந்தேதியன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவிலில் ஆடிப்பூரத்தேரோட்ட திருவிழா 5 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.

    விழாவையொட்டி தினமும் பல்வேறு அலங்கா ரங்களில் ஆண்டாள்-ரங்க மன்னார் வீதி உலா, ஆன்மீக கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், சொற்பொழிவு நடைபெறுகிறது. விழா 10 நாட்கள் நடைபெறும்.

    முதல் நாள் கொடியேற்றம், 5-ம் நாள் கருட சேவை, 7-ம்நாள் சயன சேவை, 9-ம் நாள் தேரோட்டம் ஆகிய விழாக்களில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 5-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 5 கருடசேவை கோலாகலமாக நடந்தது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு 5 வருட சேவையை வழிபட்டனர்.

    காலையில் மங்களாசனம் நடைபெற்றது. 5-ம்நாள் திருவிழாவில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ரங்க மன்னார் -பெரிய பெருமாள், சுந்தராச பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    • மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில் அடுத்த மாதம் நடக்கிறது.
    • ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை வருகிற 8-ந் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டைப் பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையிலுள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஓய்வூதியர் கூட்டம், குறைகள், Pensioners Meeting, Grievances,

    ஓய்வூதியர் கூட்டம், குறைகள், Pensioners Meeting, Grievances,

    • பொதுமக்களுக்கு இலவசமாக சுத்தமான குடிநீர் வழங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையத்தின் பொதுக்குழு கூட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு மவுண்ட் சீயோன் கிராமத்தில் நடந்தது.

    தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமணசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மவுண்ட் சியோன் கிளைத்தலைவர் எட்வின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    25 ஆண்டுகள் பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் காப்பாளர் மனோகரன் சாமுவேலுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வனுக்கும் விருது வழங்கப்பட்டது.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ராஜா, ராஜபாளையம் நகர்மன்ற உறுப்பினரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஷியாம் ராஜா ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதினை நுகர்வோர் மன்ற உறுப்பினர் தர்மகிருஷ்ணராஜா வழங்கினார். ''தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005'' என்ற புத்தகத்தை பொதுச் செயலாளர் மனோகரன் சாமுவேல் வெளியிட்டார்.

    புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக மாரிமுத்து துணைத்தலைவராக தர்ம கிருஷ்ணராஜா, செயலாளராக லட்சுமண சாமி, பொதுச்செயலாளராக சாமுவேல் மனோகரன், ராஜேந்திரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராஜபாளையத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும், நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் ெரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஐ.என்.டி.யு.சி. நகர் வழியாக ெரயில்வே தண்டவாளம் நோக்கி செல்லும் பாதையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை அகற்றக் வேண்டும், பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் உயர் அழுத்த மின் கம்பம் அமைத்து அதில் மின் விளக்குகள் பொருத்தி, மது அருந்தாமல் பாதுகாத்து கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த அனுப்பங்குளம் மின்வாரிய நிர்வாக என்ஜினீயராக இருப்பவர் ஆருத்ரா மகேஸ்வரி.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த அனுப்பங்குளம் மின்வாரிய நிர்வாக என்ஜினீயராக இருப்பவர் ஆருத்ரா மகேஸ்வரி.இவருக்கு சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மன்பட்டி பகுதியில் 68 மின்கோபுரங்களில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு ஆங்கர்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி அவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பபதிவு செய்து மின் கோபுரங்களில் இரும்பு ஆங்கர் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதுபற்றி ஆருத்ரா மகேஸ்வரி கூறும்போது, சிலர் ஆபத்தை உணராமல் மின் கோபுரங்களில் ஏறி இரும்பு ஆங்கர்களை திருடி உள்ளனர். இதனால் மின்கோபுரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இதில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த மாலதி.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த மாலதி (வயது23) என்பவருக்கும், சிவகாசி சங்கர் நகரை சேர்ந்தவர் நித்யன் (34) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக 60 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம், ரூ.4 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர்.

    மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 பவுன் நகை மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நித்யன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் டாக்டரிடம் சிகிச்சை பெற்று உள்ளார். மேலும் தொடர்ந்து மாலதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் நித்யன், மாமனார் அரவிந்தன், மாமியார் தேவி, நாத்தனார் நிதர்சனா ஆகியோர் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாலதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக ராஜபாளையம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். அதன்பேரில் ராஜபாளையம் போலீசார் கணவர் நித்யன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    • புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன்.
    • பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 39). இவர் வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 5 வருடத்திற்க்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த ரகுவின் மகன் பூவரசன் கண்ணன் பணி புரியும் அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்தார். இதற்கிடையே பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது 7-ம் வகுப்பு மாணவன் ஜவகரை பூவரசன் கடுமையாக தாக்கினார்.

    அப்போது பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆசிரியர் கண்ணன் இருந்ததால் பூவரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து பூவரசனை அனுப்பிவிட்டார்.

    பின்னர் மீண்டும் 1 வருடம் கழித்து பூவரசன் இதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்து படித்தார்.

    அப்போது மீண்டும் மீண்டும் சக மாணவர்களை பூவரசன் அடித்து தாக்கி பிரச்சினை செய்து வந்ததால் அவரை மீண்டும் பள்ளியில் இருந்து நீக்கினர். இதனால் ஆசிரியர் கண்ணன் மீது பூவரசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த போது பூவரசன் திடீரென ஆக்ரோசமாக ஓடிவந்து ஆசிரியர் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் கண்ணன் தடுமாறி கீழே விழுந்த போது பூவரசன் அவரது உடலின் மீது ஏறிக்கொண்டு முகத்திலும் கண்களிலும் பலமாக குத்தினார்.

    இதனால் வலி தாங்காமல் ஆசிரியர் கண்ணன் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து தாக்குதலை தடுத்தனர்.

    இதையடுத்து பூவரசன் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து ஆசிரியர் கண்ணன் மேல் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு தாக்குதலில் காயமடைந்ததற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி முதல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

    நேற்று ஆடி அமாவாசை நாளையொட்டி அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் மலை பாதைகள், சுந்தர மகாலிங்கம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாைதகளில் தீயணைப்பு வனத்துறையினர், போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று மாலை 3 மணியுடன் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் தொடர்ந்து அடிவாரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதே போல் வருசநாட்டு மலைப்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அடிவாரத்திற்கு இறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவித்தனர். தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அந்தப்பகுதிகளை கடக்க முடியாமல் அங்கேயே தடுத்து நிறுத்தப்படட்னர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பலமணி நேரம் ஒரே இடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    நள்ளிரவு நேரத்தில் ஓடைகளில் தண்ணீர் சற்று குறைந்தவுடன் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பக்தர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மழை பெய்ததால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் கனமழையால் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    இன்று காலையும் சதுரகிரி செல்ல தாணிப்பாறை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
    • தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.

    தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.

    • சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா அன்னப்பராஜா பள்ளியில் நடந்தது.
    • 10 நாள் பயிற்சி முகாமில் மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மற்றும் மாநில அளவில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த தோல்பாவைக் கூத்திற்கான பொம்மை செய்தல் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் வெற்றிபெற்று தேசிய அளவில் நடந்த போட்டியிலும் கலந்துகொண்ட அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்து, ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம் பெற்றார்.

    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக அரசு நடத்தும் தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சம்பத்குமார் ராஜா, ராஜபாளையம் மணிமேகலை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற யுவராணி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி சார்பில் நடந்த சைக்கிள் போட்டியில் 3-ம் பெற்ற மாணவர் ஹேமந்த்சிவா, தேசிய மாணவர் படை சார்பில் மதுரையில் நடந்த 10 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் யுவராஜன், திவ்யதர்ஷினி, கனிஷ்கா ஆகியோரை பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா பாராட்டினார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர்கள் மாரியப்பன், இளையபெருமாள் ஆகியோரும் மாணவ-மாணவிகளை பாராட்டி பேசினர்.

    ×