என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • உலக ஈர நில தின விழாவில் நடந்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு புலிகள் காப்பக துணை இயக்குநர் வழங்கினார்.
    • அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வன அலுவலகம் சார்பில் உலக ஈரநில தின விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.

    இதில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஈர நிலங்கள் அரிய வகை பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகிறது.

    சதுப்பு நிலங்கள் குளிர்கால பறவைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்களுக்கான புகலிடமாகவும் உள்ளது. சதுப்பு நிலங்கள் நீர் சேமிப்பு செயல்பாடுகளில் முக்கிய பங்குவகிப்பது மட்டுமின்றி வெள்ளத்தில் அதிகப்படியான நீரை தேக்கி வைப்பதன் மூலம் வெள்ள அபாயத்தையும் குறைக்கிறது. ஈரநிலங்கள் ''பூமியின் நுரையீரல்'' ஆகும். அவை வளிமண்டலத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்கின்றன.அதனடிப்படையில், ஆண்டு தோறும் பிப்ரவரி 2-ந்தேதி உலக ஈர நிலநாள் கொண்டாடப்படுகிறது. பூமிக்கு ஈரநிலங்களின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை மக்களி டையே ஏற்படுத்துவதே இந்த நாளை கொண்டாடுவதன் நோக்கமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகள் பல்வேறு குளங்களின் நீர் ஆதாரமாக இருக்கி ன்றன. அதனையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்பட வன சரக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இன்று முதல் 6-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
    • 5-ந்தேதி பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்று மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி தினத்தன்று மழை பெய்தால் அனுமதி இல்லை. மழை பெய்யவில்லை என்றால் அன்று அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்கள் யாரும் அனுமதி இல்லாத நாட்களில் தாணிப்பறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி.எம்.டி.எஸ்., ஹவில்தார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

    தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வரை. 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்க லாம். வருகிற 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

    இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை (3-ந்தேதி) அன்று முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் சார்பில் ''ஜும்பா உடற்பயிற்சி (கற்றுநர் மற்றும் தகுதி யாகுதல்)'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

    முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர்- கல்லூரி ஜூனியர் ஜேசீஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை ஜும்பா உடற்பயிற்சி பயிற்சி யாளர் சுதா தயாளன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், ஜூம்பா உடற்பயிற்சி என்பதன் பொருள், மற்ற உடற்பயிற்சிகளை விட இதிலுள்ள உற்சா கமான விஷயம் உடலில் உள்ள கலோரிகளை எரித்தல், மனதிலும், உடலிலும் ஏற்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றி எடுத்து ரைத்தார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

    வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவி ஹேமியஸ்ரீ தொகுத்து வழங்கினார். மாணவி ஜமுனாதேவி வரவேற்றார். மாணவி ஜெயராசாத்தி நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியர், ஜூனியர் ஜேசிஸ் விங் பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார். இதில் 270 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை.
    • இரவு பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சிவகாசியில் இருந்து தீயணைப்புத்துறையினர் 3 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • 5 தளங்களிலும் தீ பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ரவி அருணாச்சலம் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் அதிகாலையில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சிவகாசியில் இருந்து தீயணைப்புத்துறையினர் 3 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 5 தளங்களிலும் தீ பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

    தென் மண்டல இயக்குனர் விஜயகுமார், விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், சிவகாசி நிலைய அலுவலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5 மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. சிவகாசி டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடை சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பகுதியில் வருகிற 28-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    சிவகாசி

    நகராட்சியாக இருந்த சிவகாசி 2021-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சொத்து வரி உயா்வு, நகராட்சி கணக்குகளை இணைத்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி வசூலில் காலதாமதம் ஏற்பட்டது.

    சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் வரி இனங்கள் மறு சீரமைப்புக்கு பின் கடந்த செப்டம்பா் மாதம் வரி வசூல் தொடங்கியது. உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    2021-22-ம் நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலை யில் அந்த ஆண்டு வரி வசூல் நிலுவை ரூ.7.70 கோடி உள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டிற்கான வரி வசூல் தற்போது வரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இதனால் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வருகிற 28-ந் தேதிக்குள் செலுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் வரி செலுத்தாமல் உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் வருகிற மாா்ச் இறுதிக்குள் 100 சதவீத% வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

    • விருதுநகரில் விதி மீறிய 14 பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதுடன், விபத்தில்லா விருதுநகரை உருவாக்குவது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட கலெக்டரால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடப்பில் உள்ள அரசு விதி முறைகளுக்கு முரணாக, சிறப்பு ஆய்வுக் குழுக்களின் ஆய்வின்போது உள்குத்தகை நடவடிக்கைகள் மற்றும் அதிகளவிலான பட்டாசு பொருட்கள் இருப்பு வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

    சிவகாசி வட்டத்திற்குட் பட்ட நாகர் பயர் ஒர்க்ஸ், திருச்செல்வி பயர் ஒர்க்ஸ், தமயந்தி பயர் ஒர்க்ஸ் ஆகிய 3 பட்டாசு ஆலைகள், வெம்பக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட நயா கார்னேசன் பயர் ஒர்க்ஸ், ஸ்ரீ பாலகுரு பயர் ஒர்க்ஸ், எம்.பி. பயர் ஒர்க்ஸ், தாமரைக் கண்ணன் பயர் ஒர்க்ஸ், குரு பயர் ஒர்க்ஸ், சண்முகா பயர் ஒர்க்ஸ், முத்துகணேஷ் பயர் ஒர்க்ஸ், சீகல் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 8 பட்டாசு ஆலைகள், சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட ராஜேசுவரன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை, ஸ்ரீவில்லி புத்தூர் வட்டத்திற்குட்பட்ட என்.எஸ்.வி.பயர் ஒர்க்ஸ், தினேஷ் பயர் ஒர்க்ஸ் ஆகிய 2 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 14 பட்டாசு தொழிற்சாலைகளின் படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணையி டப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் அனைத்தும், உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சா லைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது என்றும், ஆய்வின் போது உள்குத்தகை விடப்பட்டது கண்டறிய ப்பட்டால் இனி வரும் காலங்களில் மேற்கண்ட பட்டாசு தொழிற் சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதில் இருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தகவல் தொழில் நுட்பவியல் துறை உதவிப்பே ராசிரியர் முத்துகுமார் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாணவரும், சென்னை அகரம் இன்போடெக் நிறுவனத்தின் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினர் ேபசுகையில், பணிபுரியும் நிறுவனம் பற்றியும், நிறுவனத்தின் செயல் முறைகள் பற்றியும், எடுத்துக் கூறினார். மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் நேர்காணல் முறையை எடுத்துரைத்தார். நேர்காண எவ்வாறு எதிர்கொள்வது? தொடக்க நிறுவனங்களில் இருந்து எவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னேறுவது? என்பது பற்றியும் விளக்கினார்.

    கணினிப் பயன் பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் விசுவநாதன் நன்றி கூறினார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைகளைச் சேர்ந்த 119 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • அருப்புக்கோட்டை பகுதியில் அதிகரிக்கும் கொள்ளை-வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக வழக்கத்தை விட குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமூக விரோதிகள் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளில் கொள்ளை, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களில் அருப்புக்கோட்டை பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, பழக்கடையில் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் அஜித் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (29). மளிகை கடை நடத்தி வரும் இவரது ரூ. 1 அரை லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து அருப்புக்கோட்டை டவுன் மற்றும் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் சரண்யா என்பவரது பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று அருப்புக்கோட்டை பகுதிகளில் நாள்தோறும் கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்தில் இறங்கி சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் நடவடிக்கை தீவிரமாகும் பட்சத்தில் மட்டுமே சமூக விரோத சம்பவங்கள் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • விருதுநகரில் நர்சு-மாணவன் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரைட்டான்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி யேசுதாசன் (வயது47). இவரது மகள் மேகலா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று பணிக்கு சென்ற மேகலா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம் சூரியசா மிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் மாதவன் (12). இவர் அல்லம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு வெளியே சென்ற மாதவன் பின்னர் பள்ளிக்கு திரும்பவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை.

    இதுகுறித்து தலைமை யாசிரியர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள ஆர்.வி.ஆர். நகரை சேர்ந்தவர் மலர்கொடி. இவரது மகள் சந்தியா (19). விருதுநகரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சந்தியா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார்.
    • சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி நேரு காலனி துப்புரவு பணியாளர் குடியிருப்பை சேர்ந்தவர் லதா (வயது 44). இவரது மகன் ராம்குமார் (19). சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ரோட்டின் குறுக்கே நாய் புகுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    அப்போது பின்னால் அமர்ந்திருந்த லதா தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லதாவின் மற்றொரு மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×