search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Shop Fire Accident"

    • சிவகாசியில் இருந்து தீயணைப்புத்துறையினர் 3 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • 5 தளங்களிலும் தீ பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம். இவர் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு மின் சாதனங்கள் மற்றும் பிளம்பிங் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ரவி அருணாச்சலம் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்த நிலையில் அதிகாலையில் எலெக்ட்ரிக்கல் கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சிவகாசியில் இருந்து தீயணைப்புத்துறையினர் 3 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 5 தளங்களிலும் தீ பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

    தென் மண்டல இயக்குனர் விஜயகுமார், விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன், சிவகாசி நிலைய அலுவலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 5 மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான மின் சாதனங்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. சிவகாசி டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் சுபகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கடை சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×