என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே செவிலியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாமணி. இவரது மனைவி சரசா என்கிற சரஸ்வதி (வயது 55). இவர், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராதாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம், பட்டு சேலைகள், வெள்ளி கிண்ணம் மற்றும் குத்துவிளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பாபு, இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள இருளாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மரிக்கொழுந்து (வயது 27).சென்னையில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.

    ஏலகிரியை சேர்ந்தவர் விஜய் ஏ.சி, மெக்கானிக் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிரிப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இன்று காலை பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    பேரணாம்பட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 4 விநாயகர் சிலைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என பல்வேறு அமைப்பினர் மற்றும் பொது மக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.

    பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் ‘விசர்ஜன நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் திருடுபோயுள்ளது.

    பேரணாம்பட்டு டவுன் பாண்டியன் வீதியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகில் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சுமார் 3 அடி உயரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து மேள தாளம், தப்பாட்டம் அடித்து கொண்டாடினர்.

    இன்று சிலை ஊர்வலம் நடத்த கோலாகலமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் விநாயகர் சிலையை லாரியில் ஏற்றிக் கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல், பேரணாம்பட்டு பக்காலப்பல்லி மற்றும் சாலப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகிலும், வீ.கோட்டா ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    விடிந்து பார்த்தபோது, சிலைகள் மாயமானதை கண்டு விழாக்குழுவினரும், பொதுமக்கள் அதிர்ச்சியில் திடுக்கிட்டனர். சாமி சிலை திருடப்பட்டுள்ளதால் தங்கள் பகுதிக்கு கெடுதல் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

    இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை திருடி கொண்டு வந்து தங்கள் பகுதியில் வைத்தால் நன்மை நடக்கும் என்று கூறப்படுவதால், விநாயகர் சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என சிலர் தெரிவித்தனர்.

    விநாயகர் சிலைகள் திருடு போனதால், இன்று நடக்க இருந்த விசர்ஜன ஊர்வலம் தடைபட்டுள்ளது. இதனால், சிலைகள் திருடு போன பகுதிகளில் பதட்டமான சூழல் காணப்படுகிறது.

    பேரணாம்பட்டு போலீசில் விழாக்குழுவினர் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    காட்பாடி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள கல்புதூர் சக்திநகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் ஏறி கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை, பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்தனர். கொள்ளையன் ஜட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாணமாக உடலில் எண்ணெய் தேய்த்திருந்தான்.

    பிடிக்க முயன்றவர்களை கத்தியால் வெட்டி விட்டு கொள்ளையன் தப்பிக்க முயன்றான். இதில் பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த கொள்ளையனை விரட்டி பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதுப்பற்றி காட்பாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நெல்லையை சேர்ந்த அய்யப்பன் (வயது 40) என் பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் குழந்தை பிரசவித்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராகதேவன் (26). செங்கல் சூளை தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மகள் சங்கீதாவும் (23) காதலித்து 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில் கர்ப்பமான சங்கீதாவுக்கு கடந்த 4-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 10-ந் தேதி கணவன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். இந்த நிலையில் சங்கீதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, பேரணாம்பட்டு போலீசில் இளம்பெண்ணின் தந்தை ரவி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலு வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் இறந்துவிட்டதால் பிஞ்சுக்குழந்தை ஆதரவின்றி தவிக்கிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அரக்கோணம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள குருவராஜபேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவரது மனைவி பிரியங்கா (வயது22). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 2மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் தம்பதிக்கு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடும்ப தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த பிரியங்கா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வேணுசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    குடியாத்தத்தில் தாழ்வான பகுதியில் உள்ள கோவிலை உயர்த்துவதற்காக 500 ஜாக்கிகள் பொருத்தப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாழையாத்தம் பஜார் வரதராஜ தெருவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டியபடி மற்றொரு கோவில் உள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தற்போது தரைமட்டத்திற்கும் கீழே சென்றுவிட்டதால் மழைகாலங்களில் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆகமவிதிகள் படி கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, 16 அடி அகலமும், 37 அடி நீளமும் உள்ள இந்த கோவிலை பக்கவாட்டில் 1½ அடி நகர்த்தியும், 5 அடி உயர்த்தியும், 13 அடி பின்நோக்கியும் நகர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த பணியில் அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவிலை இடிக்காமல் நகர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும் சென்னை ராமநாதகுருக்கள் கூறியதாவது:-

    கடந்த மே மாதம் கோவிலை நகர்த்துவது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்காக பாலாலயம் பூஜை செய்யப்பட்டு, மூலவர் கோவில் பின்புறம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அரியானா கட்டுமான நிறுவனத்தினர் 500-க்கும் அதிகமான ஜாக்கிகளை கோவிலுக்கு கீழ்பகுதியில் அமைத்து கடந்த 4 மாதமாக முதல் கட்ட பணிகளை முடித்தனர். இதில் 15 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    முதல் கட்டமாக பக்கவாட்டில் 1½ அடி கோவில் நகர்த்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவிலை பின்நோக்கி நகர்த்தும் பணிகள் தொடங்கி உள்ளது. தினமும் 2 அடி முதல் 3 அடி வரை பின்நோக்கி நகர்த்தப்பட்டு 13 அடி தள்ளியபிறகு ஒவ்வொரு அடியாக உயர்த்தப்பட்டு 5 அடி வரை உயர்த்தப்படும். சுமார் 45 நாட்களில் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சினிமாவில் இனி நான் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது என்று கமல்ஹாசன் கூறினார். #KamalHassan #MakkalNeedhiMaiam
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் கலை விழா நேற்று நடந்தது. கமல்ஹாசன் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    மருத்துவர்களின் பெருமை, பெயர் இல்லாவிட்டாலும் பல 100 வரு‌ஷம் வாழும். இந்த மருத்துவக் கல்லூரியை உருவாக்கிய ஐடாஸ்கடர் பெயர். அவர் முகம் மறந்து போகலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற இந்த கல்வி காட்டில் மலர்கள் மலர்ந்து கொண்டும், கனிகள் கனிந்து கொண்டே இருக்கும்.

    நாளைய மருத்துவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் இந்த மருத்துவ கல்லூரியில் நடனம் ஆடினோம் என்றுதான் பெருமைகொள்ள முடியும். ஆனால் உங்கள் பெருமை 100 ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கும்.

    8-ம் வகுப்பு கூட மிதிக்காத நான் இங்கு வந்தது உங்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு பெருமை. நான் இங்கு வந்தது ஒரு தாகத்தால். எனக்கு நல்ல தமிழகத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் தாகமும் இருக்கிறது. அது எனக்கு மட்டும் இல்லை. கைதட்டும் அனைவருக்கும் இருக்கிறது.

    நல்ல தமிழகம் என்பது ஒரு மனிதரிடம் இருந்து வருவது அல்ல. பலர் அதை நினைக்க வேண்டும். நாங்கள் திட்டமிடுவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது அரசு அல்ல. அன்புஅரசு 100 ஆண்டுகள் கூட இருக்கும். மருந்து, மாத்திரை தாண்டி ஏழைகளை நோக்கி உங்கள் மருத்துவம் நீள இருக்கிறது.

    மனிதநேயம் உங்கள் மூலம் இன்னும் வாழும். அதை காப்பாற்ற வேண்டியது என் கடமை. அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் உங்களைத் தேடி வருவேன்.

    நான் இப்போது செய்துகொண்டிருப்பதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் நான் இப்படி உங்களுடன் சேர்ந்து புலம்பிக்கொண்டிருக்க மாட்டேன். தமிழகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதை பற்றி சிந்தித்துகொண்டிருப்போம்.

    நமக்கு எதுக்கு, இது எல்லாம் ஏன் என்று யோசித்தேன். என் சலவை சட்டை கசங்கிவிடுமோ என்று பயந்தேன். இனி பயப்பட மாட்டேன். ஏதோ சினிமா வசனம் பேசுவது போல் தோன்றலாம். ஆனால் அப்படி இல்லை. இதை எல்லாம் எப்போதோ சினிமாவில் பேசிவிட்டேன்.

    நாங்கள் மற்றவர்களுக்காக சிரிப்பவர்கள், அழுபவர்கள். எனவே நான் இப்போது பேசுவதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். மீதம் இருக்கும் என் நாட்கள் என்னை வாழ வைத்த மக்களுக்காகத்தான்.



    இனி நான் சினிமாவில் வேலை பார்ப்பது என்றால் என் கட்சியை நடத்துவதற்கான செலவுக்காக மட்டும்தான். அரசியலை தவிர எனக்கு வேறு வேலைகள் இருக்கக்கூடாது. இருக்காது. இதை உங்களிடம் சொல்லக் காரணம் இவரே செய்யும்போது நான் செய்யக்கூடாதா என்ற எண்ணம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

    நான் ஒரு சினிமா நடிகனாக சம்பாதித்து செட்டில் ஆகி நிம்மதியாக சென்று இருக்கலாமே... 63 வயதில் ஏன் இங்கே வரவேண்டும்? இதை சிந்தியுங்கள். 23, 24 வயதில் நான் செய்யக்கூடாதா என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

    கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்பார்கள். கட்சி அரசியல் தான் பேசக் கூடாது. மக்கள் அரசியல் பேசலாம். உங்களை ஆட்டுவிப்பதே அரசியல் தான். அதை பேச ஏன் தயங்க வேண்டும்?

    உங்கள் பங்களிப்பு இருந்தால் தான் நாட்டை மாற்ற முடியும். அரசியலை அசிங்கம் என்று நினைத்து விடக்கூடாது. ஒதுங்கக்கூடாது.

    மாணவர்கள் அரசியல் பேசியே ஆக வேண்டும். வருங்காலம் உங்களை ஆட்டி வைக்க போகிறதா? நல்லதாக அமைய போகிறதா? என்பதை அரசியல் தான் முடிவு செய்கிறது.

    அரசியலை கண்டு ஒதுங்காதீர்கள். புரிந்து கொள்ளுங்கள். அரசியலில் மாணவர்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் நாட்டை திருத்த முடியும்.

    ஏழைகள் காசு வாங்கி கொண்டு ஓட்டுபோடும் அந்த கொடுமையை மூழ்கடிக்க மாணவர்களின் வெள்ளத்தால் தான் அடித்து செல்ல முடியும்.

    இப்போது ஒதுங்கிவிட்டால் வயதான பிறகு என்னை போல் வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும். இது என்னோடு போகட்டும்.

    அந்த வருத்தம் இந்த தலைமுறையினருக்கு இல்லாமல் போக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHassan #MakkalNeedhiMaiam

    வேலூரில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் தனது கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கு மேல் மதுபானங்கள் விற்பனையானால் ரூ.2 ஆயிரம் வீதமும், ரூ.4 லட்சத்துக்கு மேல் விற்பனையானால் ரூ.5 ஆயிரம் வீதமும் வசூலில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 90-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர் கடந்த (ஆகஸ்டு) மாதம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வர வேண்டிய பணத்தை மேற்பார்வையாளர்களிடம் இருந்து தனித்தனியாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் வேலூர் லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி உள்பட போலீசார் மாலை 6 மணி அளவில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய சோதனை நடைபெற்றது. அப்போது சோபியா ஜோதிபாயின் கைப்பையில் இருந்து ரூ.80 ஆயிரமும், அவருடைய காரில் இருந்து ரூ.25 ஆயிரமும், மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். கணக்கில் வராத பணம் கைப்பற்றியதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சோபியா ஜோதிபாய் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற மாணவர்கள் உள்பட 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் இளம்பாரதி. ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆதித்யன் (வயது 11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது.

    அப்போது மின்விளக்குக்காக பொருத்தப்பட்டிருந்த மின்வயரை சிறுவன் ஆதித்யன் கையால் பிடித்துவிட்டான். இந்த நிலையில் மின்வயரில் கசிந்த மின்சாரம் ஆதித்யன் மீது பாய்ந்ததில் அவன் தூக்கி வீசப்பட்டான். உடனடியாக அவனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ஆதித்யன் இறந்து விட்டான். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பிரதீப், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அப்பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. மின் இணைப்பு மூலம் ஜொலிக்கும் விளக்குகள், ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருந்தது.

    அங்கு ஒலித்து கொண்டிருந்த பாடலுக்கு சிறுவன் பிரதீப் நடனமாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு அறுந்த கிடந்த மின்சார வயரை பிரதீப் எதிர்பாராதவிதமாக மிதித்து விட்டான். இதில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர் அருகே அருந்ததிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 32). இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு வண்ண விளக்குகளால் மின்அலங்காரம் செய்ய வயர்களால் அலங்கரித்து கொண்டிருந்தார்.

    அப்போது மின்வயர் புளியமரத்தின் மீது பட்டு திடீரென்று தெருவில் செல்லும் அதிக உயர் மின்அழுத்தம் கொண்ட கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி அன்பு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா அருகே வாலிபர் தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா ஒழுகூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் விஜயன் மகன் அஜித் (வயது 18). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை பைக்கில் ஒழுகூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    சற்று தூரம் சென்று கொண்டிருந்தபோது அவரது பைக்கில் திடீரென பழுது ஏற்பட்டு உள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரிடம், அஜித் பைக் பழுது சரி செய்ய இந்த பகுதியில் கடை உள்ளதா என்று கேட்டுள்ளார்.

    அப்போது அந்த வாலிபர் நான் என்ன மெக்கானிக்கா? என்று ஆவேசமடைந்து அஜித்தை தாக்கியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த அஜித் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது. #VinayagarChathurthi #GaneshChathurthi
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஊர்வலமாக கொண்டுசென்று கரைப்பதற்கு 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூரில் வைக்கப்பட்டுள்ள 1008 விநாயகர் சிலைகள் நாளை (சனிக்கிழமை) மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது.

    இதற்காக சதுப்பேரி ஏரியில் மாநகராட்சி சார்பில் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சத்துவாச்சாரியில் இருந்து புறப்படும் ஊர்வலம் காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின்பஜார், லாங்குபஜார், அண்ணா கலையரங்கம் வரை செல்கிறது. அதேபோன்று நகரின் மற்ற இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளும் அண்ணாகலையரங்கம் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டை சுற்றுச்சாலை, முள்ளிப்பாளையம், கொணவட்டம் வழியாக சென்று சதுப்பேரி ஏரியை அடைகிறது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் வேலூரில் விநாயகர்சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. #VinayagarChathurthi  #GaneshChathurthi

    ×