என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அங்கு வந்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில், பொருளாளர் வீரபாண்டியன், துணை தலைவர் சங்கரி, துணை செயலாளர் ஆறுமுகம் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 1,500 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் 2-வது மண்டலத்தில் உள்ளது. இக்கடைகளுக்கு ரூ.700 முதல் ரூ.54 ஆயிரம் வரை வாடகை விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் இருந்து பெறப்படும் வாடகை மாநகராட்சிக்கு ஒரு முக்கிய வருவாய். இதன் மூலம் சுகாதார பணிகள் உள்பட பல்வேறு பணிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் 2 மாதங்கள் வாடகை செலுத்துவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடைகளிடம் இருந்து வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பல கடைக்காரர்கள் முறையாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாடகையை வசூல் செய்யும் பொருட்டு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நோட்டீஸ் வழங்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாநகராட்சியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கணக்கு முடிக்கப்படும். பொதுவாக ரூ.120 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் கொரோனா காரணமாக இந்தாண்டு தற்போது வரை ரூ.70 கோடி கூட கிடைக்கவில்லை.

    எனவே வியாபாரிகளிடம் வாடகையை வசூல் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதை மீறியும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு வருகிற ஜனவரி மாதம் ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    அதன்படி நேற்று 10-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    மேலும், உண்ணாவிரதம் குறித்த அறிக்கையை வேலூர் ஜெயில் அதிகாரிகள் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    பொய்கை சந்தை அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த பொய்கை சந்தை அருகே பெங்களுரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 65 வயது முதியவர் ஒருவர் நேற்று காலை 6.30 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் வெள்ளை மற்றும் நீல கலரில் சட்டையும், வேஷ்டியும் அணிந்திருந்தார்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதியவர் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, அவர் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    வேலூர் ஜெயிலில் 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார். 

    இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதன்படி நேற்று 9-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

    அவரின் உடல்நிலையை ஜெயில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    காட்பாடி அருகே குடிபோதையில் கார் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்பாடி:

    காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சித்தூர் பஸ்நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர்.

    அப்போது காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த சுனில் (வயது 33), சுகர்மில் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பெருமாள் (40) ஆகியோர் குடிபோதையில் கார் ஓட்டி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
    குடியாத்தம் அருகே ஆற்றில் ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தாய் - 2 மகள்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. இதனால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படிப்படியாக தண்ணீர் குறைந்து நேற்று சுமார் ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே சென்றது.

    ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காண குடியாத்தம் நகரம் மட்டுமின்றி, அக்கம்பக்கத்து கிராம மக்களும் வந்தனர். காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் அவர்களை தண்ணீர் அருகே செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

    குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை அருகே உள்ள போடிப்பேட்டை தண்ணீர் டேங்க் அருகே வசிப்பவர் யுவராஜ் (வயது 37). குடியாத்தம் பஸ்நிலையம் அருகே உள்ள மளிகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நதியா (31), இவர்களுக்கு நிவிதா (11), ஹர்ஷிணி (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். நிவிதா 6-ம் வகுப்பும், ஹர்ஷிணி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று வழக்கம்போல மதிய உணவு இடைவேளையின்போது யுவராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பின்னர் கடைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மாலை 3.30 மணியளவில் நதியாவிடம், அவருடைய மகள்கள் இருவரும், வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளனர். உடனே நதியா 2 மகள்களையும் கவுண்டன்யமகாநதி ஆற்றில் தடுப்பணை அருகே அழைத்து சென்று ஆற்றில் வெள்ளம் ஓடுவதை காட்டி உள்ளார்.

    அப்போது குழந்தைகளின் காலில் தண்ணீர் தொட்டு சென்றுள்ளது. இதில் அவர்களின் காலில் சகதி ஒட்டியுள்ளது. உடனே தண்ணீருக்குள் சற்று தூரம் அழைத்துச்சென்று தண்ணீரில் கால்களை கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 குழந்தைகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நதியா கூச்சலிட்டவாறு, தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் மகள்களை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். அங்கிருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.

    ஆனால் அவர்கள் 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கிவிட்டனர். அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துவிட்டு, இளைஞர்கள் தண்ணீரில் குதித்து 3 பேரையும் தேடினர். அவர்கள் நிவிதாவை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தண்ணீரில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்தில் நதியா, ஹர்ஷிணி ஆகியோரை பிணமாக மீட்டனர். தண்ணீரில் மூழ்கி இறந்த தாய் உள்பட 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார்.

    தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்று தாய், 2 மகள்கள் என 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கவுண்டன்யமகாநதி ஆற்றில் போடிப்பேட்டை பகுதியில் மணல் அள்ளுவதால் ராட்சத பள்ளங்கள் உருவாகி, அந்த பள்ளத்தில் மூழ்கி 3 பேரும் இறந்துவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
    மகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜெயிலில் பிற கைதிகள் தங்களது குடும்பத்துடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.

    இதேபோல முருகன் தனது மனைவியுடன் பேசினார். இந்த நிலையில் மகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் ஜெயில் உணவுகளை தவிர்த்து பழம் மற்றும் தண்ணீர் மட்டும் சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வேலூர், காட்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது காட்பாடி தாலுகா பெரிய மோட்டூர் கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த திருமலை (வயது 60) மற்றும் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மதுவிற்ற கே.வி.குப்பம் தாலுகா பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேலூர் சத்துவாச்சாரியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருடைய மனைவி வரதாள் (வயது 66). இவர்களின் மகன், மகள் சேலத்தில் வசித்து வருகிறார்கள். ஜனார்த்தனன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். வரதாள் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி வரதாள் வீட்டை பூட்டி விட்டு மாமியாருடன் சேலத்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றார். இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு வீடு திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றிருப்பது வரதாளுக்கு தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வரதாள் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள், அண்ணாசாலை, நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, ஆர்.டி.ஓ. சாலை போன்ற இடங்களில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவைகள், சாலையில் செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. இரவு நேரங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை விரட்டுவதால் விபத்துக்குள்ளாகின்றனர்.

    காலை வேளையில் நடைபயிற்சி செல்லும் போது ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முக்கிய சாலைகளில் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    36 மணி நேரமாக கவுண்டன்ய மகாநதி வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணை 36 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கூட நகரம் பார்வதியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மனைவி எல்லம்மாள் (வயது 55). செதுக்கரை பொன்னம்பட்டி -இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர்கள் கொட்டில் அமைத்து அதில் 30-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள், பன்றிகளுக்கு உணவு வைத்து அங்கேயே இருந்துள்ளார்.

    அப்போது மோர்தானா அணையிலிருந்து கவுண்டன்யமகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட எல்லம்மாள் வெள்ளம் வடிந்து விடும் என கருதி அந்த குடிசைப்பகுதியில் தங்கியுள்ளார். இரவு ஆற்றில் வெள்ளம் குறையாததால் போன் மூலம் வருவாய்த்துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் அளித்தனர். ஆற்றில் 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் சென்றதால் எல்லம்மாள் இருந்த பகுதிக்கு மீட்பு படையினரால் செல்ல முடியவில்லை.

    இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழு குழுவினர் இன்ஸ்பெக்டர் ஓலா தலைமையில் 17 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். எல்லம்மாள் சிக்கிய பகுதியை துல்லியமாக கண்டுபிடிக்க ‘ட்ரோன்’ கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இதனிடையே 24 மணி நேரத்தை கடந்தும் எல்லம்மாள் மீட்கப்படாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். நள்ளிரவு 12 மணிவரை விளக்கு வெளிச்சத்தில் பேரிடர் மீட்பு படையினர் கடுமையாக போராடியும் வெள்ளம் அதிகமாக சென்றதால் மீட்க முடியவில்லை. இதனை அடுத்து மீட்பு படையினர் திரும்பிச் சென்றுவிட்டனர்.

    நேற்று அதிகாலையில் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று ஒரு மணி நேரம் போராடி எல்லம்மாளை பத்திரமாக மீட்டனர். சுமார் 36 மணி நேரம் வெள்ளத்தின் நடுவே சிக்கித் தவித்த எல்லம்மாள் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எல்லம்மாளை மீட்ட சம்பவத்தை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது எல்லம்மாளின் கணவர் முனியப்பன் இதேபோல் சிக்கிக்கொண்டு, தீயணைப்பு துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×