search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை

    வேலூர் மாநகராட்சியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 1,500 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் 2-வது மண்டலத்தில் உள்ளது. இக்கடைகளுக்கு ரூ.700 முதல் ரூ.54 ஆயிரம் வரை வாடகை விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் இருந்து பெறப்படும் வாடகை மாநகராட்சிக்கு ஒரு முக்கிய வருவாய். இதன் மூலம் சுகாதார பணிகள் உள்பட பல்வேறு பணிகள் பொதுமக்களுக்கு செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வியாபாரிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் 2 மாதங்கள் வாடகை செலுத்துவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடைகளிடம் இருந்து வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் பல கடைக்காரர்கள் முறையாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாடகையை வசூல் செய்யும் பொருட்டு கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக நோட்டீஸ் வழங்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாநகராட்சியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கணக்கு முடிக்கப்படும். பொதுவாக ரூ.120 கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் கொரோனா காரணமாக இந்தாண்டு தற்போது வரை ரூ.70 கோடி கூட கிடைக்கவில்லை.

    எனவே வியாபாரிகளிடம் வாடகையை வசூல் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதை மீறியும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு வருகிற ஜனவரி மாதம் ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×