என் மலர்
வேலூர்
வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ் (வயது 26), ஆட்டோ டிரைவர். இவரும் வேலூர் ரங்கசாமி நகரை சேர்ந்த துர்காதேவியும் (20) காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரேஷ் மற்றும் அவருடைய அம்மா லலிதா ஆகியோர் துர்காதேவியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி அடிக்கடி துன்புறுத்தி வந்தனராம். நரேசின் மாமா மகேஷ் தகாத வார்த்தைகளால் துர்காதேவியை திட்டி, அவரின் செல்போனை பறித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது., மேலும் 3 பேரும் சேர்ந்து துர்காதேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் துர்காதேவி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிந்து நரேசை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய லலிதா, மகேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சோளிங்கர்:
ஆந்திராவில் இருந்து சோளிங்கர் வழியாக செம்மரக்கட்டைகளை கடத்திக் கொண்டு சொகுசு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
சோளிங்கர் அருகே அதிகாலை வந்தபோது கார் தறிகெட்டு ஓடியது. அப்போது முன்னால் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காரை மடக்கி பிடிக்க விரட்டி சென்றனர். அப்போது டிரைவர் காரை மீண்டும் பின் பக்கமாக இயக்கினார்.
அப்போது பின்னால் வந்த வினோத் (வயது 24) என்பவர் ஓட்டி வந்த பைக் மீது கார் மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.
தொடர்ந்து தறிகெட்டு பின் பக்கமாக வந்த கார் தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் சோதனை நடத்தினர்.
காரில் ஒரு டன் அளவிலான 16 செம்மரக் கட்டைகள் இருந்தது. ஒவ்வொரு கட்டைகளும் 2 மீட்டர் நீளத்தில் இருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து தினந்தோறும் சோளிங்கர் வழியாக அதிவேகமாக சொகுசு கார்கள் சென்று சென்று வருகிறது. அந்த கார்களில் செம்மரம் கடத்தி வரலாம். இதனால் போலீசார் தினமும் வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலில் செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.
கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர். ஜெயிலுக்கு வெளியே இருந்து செல்போன் கஞ்சா போன்றவை வீசப்படும் சம்பவங்களும் நடக்கிறது.
இந்த நிலையில் வேலூர் டி.எஸ்.பி. (பொறுப்பு) மகேஷ் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 6 மணி முதல் ஒட்டுமொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
ஜெயில் பூங்கா பகுதிகள், சமையலறை என அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது. 2 மணி நேரம் நடந்த இந்த சோதனை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது.
வேலூர் ஜெயிலில் இன்று வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசூர், ஏகாம்பரநல்லூரில் 2 ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் தி.மு.க. மக்கள் சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி முடிவு செய்த போது மின்சார துறை அமைச்சராக நான் இருந்த போது கையெழுத்திட்ட கரம் தான் இது.
விவசாயக்குடும்பத்தில் பிறந்த நான் 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டும் போது என் தாயின் காதில், மூக்கில், கழுத்தில் இருந்த நகையும் இல்லாமல் போகும். இதேபோல் மக்கள் எல்லோரும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீர இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
மேலும் எனது கடைசி ஆசை எனது தொகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்க வேண்டும். தமிழகத்திலேயே இல்லாத அளவுக்கு தனியார் மருத்துவமனையை விட சிறந்த மருத்துவமனையாக உருவாக்க வேண்டும். அதில் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பது எனது கடைசி ஆசை. நான் நலமாக இருக்க உங்களுக்கு சேவை செய்ய எனக்காக 2 நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். (இதனை தொடர்ந்து கூட்டத்தில் 2 நிமிடங்கள் அவரது நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.)
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கிய டி.வி. இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க.வினர் வழங்கிய மின்விசிறி, கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் ஒன்று கூட வேலை செய்யவில்லை. பேரீச்சம்பழத்திற்கு கூட உதவாமல் போனது.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தான் ஜெயிக்கும். தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் தான் முதல்வர். சத்தியம் செய்து சொல்கிறேன். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நான் நம்புகிறேன். நீங்கள் என்னை தூக்கி விட்டால் தி.மு.க. தலைவர் பக்கத்தில் 2-வது அமைச்சராக உட்கார்ந்துகொள்வேன். அவரிடம் கேட்டு 3 மாதத்தில் காவிரி தண்ணீரை கொண்டு வருவேன்.
இது நான் சவாலாக விட்டு செல்கிறேன். நான் சவால் விட்டேன் என்றால் அதை நான் செய்து முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 24-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். சிறந்த முறையில் தரம் பிரித்து கொடுக்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி காசுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 45 நாட்கள் சிறந்த முறையில் குப்பைகளை தரம்பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் வழங்கும் நிகழ்ச்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 2 பேருக்கு 4 கிராம் தங்க காசு, 4 பேருக்கு 5 கிராம் வெள்ளி காசுகளை மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் வழங்கினர்.
இதில், மாநகர் நலஅலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






