search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருபானந்த வாரியார்"

    • கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிருபானந்தவாரியாரின் படத்திற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் மறைந்த ஆன்மீக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்குந்தர் அபிவிருத்தி சங்க தலைவர் சி.எஸ்.எம்.எஸ்.சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அனுசுயா மாரிமுத்து, பொருளாளர் குருநாதன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கிருபானந்தவாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் செங்குந்தர் அபிவிருத்தி சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், முத்தையா, சிவராமன், சுப்பிரமணியன், ஆறுமுகம், சுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், மகா ஸ்டுடியோ சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெற்றி நிறைய திருநீறுபூசி, கழுத்தில் உத்திர கண்டிகை, நவரத்தின மாலையும் மலர் மாலையும் அணிந்து சிவ பழமாக காட்சி அளிப்பார்.
    • நகைச்சுவையோடு உரையாடுவது, சிரிக்கச், சிரிக்கப் பேசுவது வாரியாருக்கு கைவந்த கலை.

    இன்று (25-ந் தேதி) ஆன்மிக பேச்சாளர் கிருபானந்த வாரியார் பிறந்தநாள்.

    திருப்புகழ் ஜோதி என்று பாராட்டப்பெறும் திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மிகச் சொற்பொழிவில் சிகரத்தைத் தொட்டவர்.

    தமிழகம் மட்டுமில்லாமல், தமிழர் வாழும் உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலம் ஆன்மிக நெறியைப் பரப்பி மகத்தான சாதனைப்படைத்தவர்.

    அவரது சொற்பொழிவில் நகைச்சுவை நர்த்தனமிடும். பெரியவர்களும், பெண்களும், சிறுவர்களும்கூட அவரது பேச்சைக் கேட்க வருவார்கள்.

    நெற்றி நிறைய திருநீறுபூசி, கழுத்தில் உத்திர கண்டிகை, நவரத்தின மாலையும் மலர் மாலையும் அணிந்து சிவ பழமாக காட்சி அளிப்பார்

    அபாரநினைவாற்றல், இசைஞானம், குரல்வளம், நடிப்புத் திறன், ஆழமான படிப்பு, உயர்ந்த சிந்தனை, உயர்வான ஞானம் இவற்றின் உருவம்தான் வாரியார்.

    வேலூர் காங்கேய நல்லூரில் 1906-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி பிறந்தார். தந்தை பெயர் மல்லையதாச பாகவதர். தாயார் கனகவல்லி அம்மையார்.

    இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கிருபானந்த வாரி.

    கிருபை என்றால் கருணை. ஆனந்தம் என்றால் இன்பம். வாரி என்றால் பெருங்கடல் என்று பொருள்.

    பெயருக்கேற்ற விதத்தில் வாரியார் கருணையே வடிவமாகவும், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகவும் திகழ்ந்தார்.

    வாரியார் சுவாமிகள் பள்ளிக்கூடம் சென்று படிக்கவில்லை. மாறாக இயற்கையால் அமைந்த அறிவும், பெரியோர்களின் தொடர்பும், உபதேசங்களும், இவரை மேதையாக உருவாக்க உதவின.

    வாரியாரின் தந்தையே இவருக்கு ஞானக்குரு. அவருக்கு தேவையான கல்வி, இலக்கியம், இலக்கணம், இசை ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தார்.

    8 வயதில் கவி பாடும் திறன் பெற்றார். 12-வது வயதில் திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், திருவாசகம், தேவாரம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி நூல்களில் இருந்து 12 ஆயிரம் பாடல்களை மனப்பாடம் செய்தார்.

    16 வயதில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் அமிர்தலட்சுமி.

    18 வயதில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடன் விளங்கினார்.

    'எல்லாம் வல்ல வயலூர் எம்பெருமான் அருளாலே' எனத் தொடங்கி, கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி' என்ற திருப்புகழ் பாடலை இனிமையான இசையுடன் பாடி, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி விடுவார்.

    சிறுவர்களிடம் சிறுசிறு கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்பவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்குவார்.

    ஒருமுறை சொற்பொழிவின்போது, ஒரு சிறுவனிடம் முருகனின் அப்பா பெயர் என்ன? என்று கேட்டார்.

    அப்போது திருவிளையாடல் படம் வந்த நேரம். அதில் நடிகர் சிவாஜிகணேசன் முருகனுக்கு அப்பாவாக சிவன் வேடத்தில் நடித்திருப்பார்.

    அதைப்பார்த்த சிறுவன் சிவாஜி என்று சொல்லி விட்டான்.

    கூட்டத்தினர் கைக்கொட்டி சிரித்தனர். வாரியார் அவர்களை கையசைத்து அடக்கிவிட்டு அவன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறான்.

    பெரியவர்களின் பெயர்களை சொல்லும்போது 'ஜி 'சேர்த்து மரியாதையாக சொல்வது வழக்கம்.

    காந்திஜி, நேருஜி என்பார்கள். முருகனின் அப்பா பெயர் சிவா. மரியாதையாக 'ஜி' சேர்த்து சிவாஜி என்று சொல்லி இருக்கிறான் என்று சொல்ல கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

    நகைச்சுவையோடு உரையாடுவது, சிரிக்கச், சிரிக்கப் பேசுவது வாரியாருக்கு கைவந்த கலை.

    ஒரு கூட்டத்தில் இல்லாள் என்ற சொல்லுக்கு வாரியார் சொன்ன விளக்கம் சுவையானது.

    இல்லாள் இல்லத்தை ஆள்பவர். பெண்பாலாகத்தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாக கொண்டால் "இல்லார் பாப்பர்" என்று ஆகிவிடும்.

    ஆகவேதான் பிச்சைக்காரன்கூட "அய்யா பிச்சை" என்று சொல்ல மாட்டான். "அம்மா பிச்சை" என்றுதான் சொல்லுவான். அந்த பிச்சைக்காரனுக்கு கூடத்தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று கூறவும் கூட்டத்தில் கரகோஷம் அடங்க வெகு நேரம் பிடித்தது.

    அடுத்த அஸ்திரத்தை கையிலெடுப்பார்.

    புத்திசாலி கணவருக்கும், முட்டாள் கணவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று கேட்டு விட்டு கூட்டத்தினரை உற்று நோக்குவார்.

    வாயை மூடு என்று முட்டாள் தன் மனைவியை திட்டுகிறான்.

    நீ அமைதியாக இருக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா என்பான் புத்திசாலி.

    இதுதான் முட்டாளுக்கும், புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசம் என்று சொல்லி கூட்டத்தை சிரிப்பலையில் மிதக்க விடுவார்.

    கள்ளைக் குடித்தால்தான் போதை தரும் என்பது இல்லை. கள் என்று சொன்னாலே போதும் பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை நீ என்று சொல்வதற்கு பதில் நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்த கள் செய்யும் வேலைதான் என்று கூறி விட்டு அட்டகாசமாய் சிரிக்க அவரோடு அரங்கமும் சேர்ந்து கொள்ளும்.

    பெண்கள் குறித்து உயர்வான கருத்து கொண்டிருந்த வாரியார் குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாகப் (இன்சியலாக) போட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

    150 புத்தகங்களை எழுதி உள்ளார். அதில் கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    சமய சொற்பொழிவில் கிடைத்த தொகையை ஆலயங்களின் திருப்பணிக்காக பயன்படுத்தி மகிழ்ச்சி அடைவார்.

    ஏழை, எளிய மாணவர்களின் படிப்பு செலவுக்கு மணியார்டர் அனுப்பிவிடுவார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை அளித்தவர், வாரியாரே! சின்னப்ப தேவரின் வேண்டுகோளுக்கிணங்க துணைவன், திருவருள், தெய்வம் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்தார்.

    லண்டன் மாநகருக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றச் சென்றபோது வாரியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின்பு விமானத்தில் தமிழகம் திரும்பிக்கொண்டு இருந்தார்.

    திடீரென்று அருகில் இருந்த பக்தரிடம் திருப்பதியை தாண்டி விட்டோமா என்று கேட்டார். ஆமாம் சாமி என்றதும் அடுத்தது திருத்தணிதானே என்று கூறிய சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.

    1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதிதான் அவரது, இந்த மரணம் நிகழ்ந்தது.

    விமானத்தையே மயிலாக அனுப்பி வைத்து முருகன் அவரை அழைத்து சென்றதாக வாரியாரின் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

    பின்னர் வாரியார் உடல் சென்னையில் இருந்து காங்கேயநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    ×