search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசிய போது எடுத்த படம்.

    திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்- துரைமுருகன் பேட்டி

    தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    காட்பாடி:

    வேலூரை அடுத்த காட்பாடியில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருபானந்த வாரியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது தேர்தலுக்காக தான். வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அறிவித்துள்ளனர். கிருபானந்த வாரியார் மறைவின் போது அ.தி.மு.க. அரசு தான் இருந்தது. அப்போது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது வேதனையானது.

    ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு தான். பறிமுதல் செய்யட்டும். சசிகலாவுக்கு வரவேற்பு என்பது தியாகத்துக்கும், கொள்ளை கூட்டத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. இதுவரையில் ஒரு ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்து ரூ.10 கோடி அபராதம் செலுத்திவிட்டு வந்தவருக்கு வரலாறு காணாத வரவேற்பளிப்பது வெட்கக்கேடானது.

    டி.டி.வி., தினகரனும், தி.மு.க.வும் இணைந்து அ.தி.மு.க.வுக்கு சதிவலை பின்னுவதாக முதல்வர் கூறுவது சரியில்லை. அதற்கு சசிகலாவே போதும்.

    வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்து மவுனமாக தவ வாழ்க்கை மேற்கொண்டுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். அவர் ஏதாவது சதி செய்கிறாரா? என தெரியவில்லை.

    சபாநாயகர் உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம் நியாயம் கிடைத்துள்ளது.

    முதல்வருக்கு கொலை மிரட்டல் என்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற கலாசாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள். பல் உள்ளவன் பக்கோடா சாப்பிடுகிறான். இவர்கள் ஏன் வேதனையடைகிறார்கள். மு.க.ஸ்டாலின் படிப்படியாக கட்சியில் வளர்ந்து தான் இந்த அந்தஸ்த்திற்கு வந்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின் போது வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பகுதி பொறுப்பாளர்கள் வன்னியராஜா, சுனில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×