என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றில் இருந்து மீள்வதற்காக சிகிச்சைகள் எடுத்து கொண்டார். ஆனாலும் தொற்றின் அறிகுறி தொடர்ந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி நடமாடும் மருத்துவக்குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு வீட்டிற்கு சென்று அவரின் சளிமாதிரியை பரிசோதனைக்காக சேகரித்து சென்றனர்.

    தொடர்ந்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் சிறப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுவுடன் செல்லும் பாதுகாப்பு போலீசாருக்குக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு லேசான தொற்று அறிகுறியே காணப்பட்டது. அதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாளில் தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்து விடுவார் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கொரோனா தொற்றுவினால் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிறப்பு முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 41 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான வசந்த லீலா உத்தரவின் பேரில் வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்ட உதவி பழைய கட்டிடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நீதித்துறை நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், எழுத்தர், சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    முகாமிற்கு வந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் பதிவு செய்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்ட 41 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ., அடுக்கம்பாறை, குடியாத்தம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. ஆகிய மருத்துவமனைகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு குறையாதவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 550 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. தற்போது தொற்று அதிகரிப்பதால் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அதன்காரணமாக படுக்கைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

    மூச்சுத்திணறல் மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சில் காக்க வைக்கும் நிலை காணப்பட்டது. அதனை தவிர்க்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க தகரத்தால் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனா சிறப்பு வார்டில் 550 படுக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. அதில், 350 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. தொற்று அதிகரிப்பு காரணமாக பிரசவம் மற்றும் குழந்தைகள்பிரிவு ஆகியவற்றை தவிர மற்ற சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையதாக மாற்றப்பட உள்ளது. இந்த படுக்கைகளில் மூச்சுத் திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 400 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக படுக்கைகள் அமைந்தால் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட உள்ளது என்றனர்.
    தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் வீடு, வீடாக சென்று சளிமாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 335 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 734 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் வேலூரில் சிகிச்சைக்காக வந்த பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள் 50 பேரும் பாதிக்கப்பட்டனர்.

    கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 734 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31 ஆயிரத்து 809 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 244 சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். 442 பேர் உயிரிழந்துள்ளனர். 3,123 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை உணராமல் பலர் வழக்கம்போல் சாலைகளில் சுற்றித்திரிகிறார்கள். தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் பாதிப்பு படிப்படியாக குறையும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் மினி லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் விநாயகம், மணிவண்ணன் உள்ளிட்ட போலீசார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று அதிகாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து வேலூரை நோக்கி சென்ற மினி லாரி ஒன்று சுங்கச்சாவடியில் வந்து நின்றது.

    சந்தேகம் அடைந்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் லாரியைபோலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் தார்பாய் போட்டு மூடியபடி 200 பண்டல்களில் சுமார் ஒரு 3 டன் குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் லாரியுடன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் கே.எச்.எம்.பிளாக் பகுதியைச் சேர்ந்த சைமன் மகன் வெங்கடேஷ் (வயது 28) என்பதும், உடன் இருந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் சூரியமூர்த்தி (23) என்பதும் தெரியவந்தது.

    மேலும் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வெங்கடேஷ் மற்றும் சூரியமூர்த்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 734 பேர் பாதிக்கப்பட்டனர. இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 32 ஆயிரத்து 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,428 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 607 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.446 பேர் பலியாகி உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 734 பேர் பாதிக்கப்பட்டனர. இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மட்டும் தற்போது 3000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

    கிராம பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ஒரே நாளில் பாதிப்பு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது ‌.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கை அமல்படுத்தவும், கொரோனா தடுப்பு விதியை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஊழியர்கள் நேற்று ஊரீசு பள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மளிகை, காய்கறி, இறைச்சி, மீன், டீக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் முழுஊரடங்கின்போது முககவசம் அணியாத 96 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.19 ஆயிரத்து 200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 46 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.23 ஆயிரத்து 500-ம் என்று மொத்தம் ரூ.42,200 அபராதம் விதிக்கப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ரேஷன்கார்டு வழங்கக்கோரி பொதுமக்கள் வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, பாகாயம், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் புதிய ரேஷன்கார்டுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்த நிலையில், கடந்த 5-ந் தேதி ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்த நபர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், உங்களின் புதிய ரேஷன் கார்டு தயாராக உள்ளது. அவற்றை வட்ட வழங்கல் அலுவலகத்தில் சென்று பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதையடுத்து அவர்கள் கடந்த வாரம் வேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் சென்று குறுந்தகவலை காண்பித்து புதிய ரேஷன்கார்டு தரும்படி கூறினர். அதற்கு வழங்கல் அலுவலக ஊழியர்கள், புதிய ரேஷன் கார்டுகளை சர்வரில் இணைத்து செயல்பாட்டிற்கு கொண்டுவரும் பணி நடந்து வருகிறது. எனவே 10-ந் தேதி காலை வந்து ரேஷன் கார்டை பெற்று கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

    அதன்படி நேற்று வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன்கார்டு பெறுவதற்காக வந்தனர். அவர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் ரேஷன் கார்டு கேட்டதற்கு, ரேஷன்கார்டு தயாரானவுடன் செல்போனில் அழைப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் உடனடியாக ரேஷன்கார்டு வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு வேலூர்-ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தாலுகா அலுவலக வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கார்டு தரக்கோரி வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனையின்பேரில் அங்கிருந்த 250 பேருக்கும் உடனடியாக ரேஷன்கார்டு வழங்கப்பட்டது. ஓரிருநாளில் அவை செயல்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 590 பேருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்துள்ளன. அவை 2-வது முறையாக தடுப்பூசி போடுபவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு 5,500 டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவை ஓரிரு நாட்களில் தீர்ந்து விட்டன. அதனால் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன. எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் வந்துள்ளன. எனவே முதன் முறையாக கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்த மருந்துகள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே முதல் தடுப்பூசி போட்டவர்கள் குறிப்பிட்ட நாளில் 2-வது தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் உள்ளது.

    எனவே தற்போது வந்துள்ள 7 ஆயிரம் தடுப்பூசிகள் 2-வது முறை தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் 2-வது கட்ட தடுப்பூசி போடப்படும். அதேபோன்று ஏற்கனவே கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்த பகுதிகளில் 2-வது தடுப்பூசி செலுத்துவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும். தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கொரோனா வார்டில் பணிபுரிந்து பின்னர் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அரசு மருத்துவ மனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்கள் பணிக்கு பின்னர் தனிமைப்படுத்தி கொள்ள 7 நாட்கள் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நாட்களில் டாக்டர்கள் தங்களது வீடுகளில் தான் இருக்க வேண்டும்.

    தங்களது சொந்த கிளினிக்கில் எந்த காரணம் கொண்டும் மருத்துவம் பார்க்க கூடாது. ஆனால் சில அரசு டாக்டர்கள் தங்களது சொந்த கிளினிக்குகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

    எனவே, தனிமைப்படுத்தி கொள்ளும் நாட்களில் தங்களது சொந்த கிளினிக்கில் தனியார் அல்லது அரசு டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் அந்த கிளினிக்குகளுக்கு சீல் வைக்கும்படி உதவி கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே கொரோனா வார்டில் பணிபுரிந்து பின்னர் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம்.

    கொரோனா தடுப்பு விதியை மீறி டாக்டர்கள் யாராவது சிகிச்சை அளித்தால் அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து 94980 35000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கலாம்.

    இந்த தகவலை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 600ஐ கடந்தது. நேற்று கொஞ்சம் குறைந்து 583 ஆக இருந்தது. இன்று வேலூர் மாவட்டத்தில் 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பரிசோதனை குறைவாக செய்யப்பட்டது. இதனால்தான் பாதிப்பும் குறைவாக உள்ளது. நாளை பாதிப்பு மேலும் அதிகரிக்கும் .

    வேலூர் சத்துவாச்சாரி மவுண்ட் வியூ அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரகுமார் (வயது 52).வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.‌ இதனையடுத்து காட்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

    நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து பாலச்சந்திர குமாரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசந்திரகுமார் பரிதாபமாக இறந்தார்.

    மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.
    வேலூர்:

    கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதை அறிந்த மதுபிரியர்கள் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருந்தன.

    காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்து தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனர். பலர் பெட்டி, பெட்டியாக வாங்கிச் செல்வதை காணமுடிந்தது.

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடியே 30 லட்சம் மது பீர் வகைகள் விற்பனையானது. நேற்று வேலூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.8 கோடியே 95 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.7 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்தன.

    கடந்த 2 நாளில் 3 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

    ×