என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் ஜெயிலில் விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கடந்த 2015-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது60) என்பவர் போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று கைதியாக அடைக்கப்பட்டார்.
ரங்கன் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவருக்கு சர்க்கரை வியாதி, ரத்தகொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் காணப்பட்டுள்ளது. இதற்காக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் ரங்கன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 13-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து உடனடியாக ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 2 முறை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது.
மருத்துவமனையில் ரங்கனுக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரங்கன் உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினியும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளித்துள்ளார்.
அவர் தனது சிறைவாசிகளுக்கான வைப்புநிதியில் இருந்து ரூ.5 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ருக்மணிபிரியதர்ஷினிக்கு விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல் 2-வது அலையின் வேகம் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதனால் தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊரடங்கை பிறப்பித்துள்ளது. பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வியாபாரிகளும் வியாபாரத்திற்கு செல்ல முடியாமல் மனவேதனை அடைந்துள்ளனர்.
அரக்கோணம் அடுத்த காவனூர் நரசிங்கபுரமத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகை, முல்லை, கனகாம்பரம், பன்னீர் ரோஜா, கலர் காக்டா, மூக்குத்தி ரோஸ், நந்திவட்டான், சம்பங்கி ஆகிய பூக்கள் பறிக்காமல் செடியிலேயே உதிர்ந்தும், அழுகியும் வீணாகிறது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
காவனூர் நரசிங்கப்புரத்தில் உற்பத்தியாகும் பூக்கள் இங்கிருந்து ரெயிலில் சென்னைக்கும், காஞ்சிபுரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்வோம். ஊரடங்கு உத்தரவால் பூக்களை எடுத்து செல்ல முடியவில்லை.
பூச் செடி நட்ட கூலிக்கும், பூ பறிக்கும் கூலிக்காவது வரட்டும் என்று பறித்து உள்ளூரில் பைக்குகளில் விற்பனை செய்து வந்தோம். இப்போது அதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். தெருக்களிலும் பூ வியாபாரம் செய்யக்கூடாது என்று தடுத்து அபராதம் விதிக்கின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய முடியாமல் போனதால் மல்லிகை பூ கிலோ 30 ரூபாய்க்கும், முல்லை ஒரு சேர் 5 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.
இப்போது உள்ளூரில் விற்பதற்கு அனுமதி மறுப்பதால் எதற்கு பறிக்க வேண்டும் என்று செடியிலேயே விட்டுவிடுவதால் பூக்கள் உதிர்ந்தும், அழுகியும் வீணாகிறது. காய்கறி கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி தந்து இருப்பது போல் பூ விற்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு பூ விவசாயிகள் மன வேதனையுடன் கூறினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபோல் ஏக்கர் கணக்கில் பூச்செடிகள் பயிரிட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வந்தவாசியில் கோழிக்கொண்டை பூ பயிரிடப்பட்டுள்ளனர். இந்த கோழி கொண்டை பூவும் பறிக்கப்படாமல் செடியிலேயே அழுகியும் வீணாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமாங்கலம், ஆரணி, போளூர், செய்யாறு, செங்கம் பகுதிகளிலும், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, ஒடுக்கத்தூர் பகுதியிலும் பூக்கள் செடியில் பறிக்கப்படாமல் வீணாகி வருகிறது.
இதனால் பூ விவசாயிகள் கடுமையான வேதனையில் உள்ளனர்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு தக்காளி ஆந்திரா மாநிலம் பலமநேர், வீகோட்டா பகுதிகளில் இருந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றாலும் வேலூரில் காய்கறி சந்தைக்கு காலை வரையே அனுமதி என்பதால் சரக்கின் தேவை குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் சாலையோரம் தக்காளிகள் கிலோ கணக்கில் கொட்டப்பட்டு கிடந்தது.
வேலூர் காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.8க்கு விற்பனையானது. இருந்தாலும் தக்காளி தேவை குறைந்ததால் வாகனங்களில் வேலூருக்கு கொண்டு செல்லும் தக்காளியின் விலை சரிவை சந்திக்கலாம் என்ற அச்சத்தால் ஆந்திர விவசாயிகள் தக்காளியை தமிழக-ஆந்திர எல்லையில் வீசி சென்று இருக்கலாம் அல்லது விற்பனை செய்ய முடியாததால் கொட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அங்கு கொட்டி கிடந்த தக்காளியை காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, மெட்டு குளம் கிராமங்களை சேர்ந்த மக்கள் அள்ளிச் சென்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினசரி 600-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வீட்டில் பணியாற்றும் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனிடையே அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து வீட்டு தனிமையில் இருந்த அவருக்கு லோசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 8-ந்தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம், நந்தகுமார் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். தற்போது 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் எஸ்.பி. செல்வகுமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 12-ந் தேதி வேலூர் மாவட்டத்துக்கு 4 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. அவை 2-வது முறை தடுப்பூசி போடும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் தடுப்பூசிகள் வரவில்லை. அதனால் 2-வது முறை கோவேக்சின் தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று 2,500 டோஸ் கோவேக்சின், 2,000 டோஸ் கோவிஷீல்டு என்று மொத்தம் 4,500 தடுப்பூசிகள் வந்துள்ளன. கோவேக்சின் தடுப்பூசிகள் 2-வது முறை போடும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முன்பதிவு செய்துள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறந்து இருப்பதாக புகார்கள் வந்தது. அதன் பேரில் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாசில்தார் வத்சலா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமரன், கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் கோபி, ரஞ்சித் குமார், ராஜேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 நகைக்கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 2 நகை கடைகள், சிமெண்டு கடை உள்பட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் நேற்று குடியாத்தம் நகராட்சி பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாத, முக கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கொரோனா சந்தேக வார்டில் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை விட மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். இவர்கள் கொரோனா சந்தேக வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆஸ்பத்திரியில் இடமில்லாததால் மூச்சுத்திணறலால் வருபவர்கள் ஆம்புலன்சில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது ஆஸ்பத்திரியில் கூடுதலாக ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தினசரி 20க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 5 பேர் வரை மட்டுமே இறக்கின்றனர். சுமார் 20 பேர் மூச்சு திணறலால் இறந்து வருகின்றனர்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இறப்பு விட மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் வருபவர்களின் இறப்பு விகிதம் 3 மடங்கு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று விரைவில் குணம் அடைந்து விடலாம்.
மூச்சு திணறல் ஏற்பட்ட பிறகு ஆஸ்பத்திரிக்கு வருவதால்தான் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக 500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 698 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 723 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிக்கிறது. 400-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 33 ஆயிரத்து 41 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 28 ஆயிரத்து 657 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தனர். 454 பேர் உயிரிழந்தனர். 3,933 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடி தாலுகாவில் நேற்று 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 101 பேரும், கிராமப் பகுதியில் 18 பேரும், பேரூராட்சி பகுதியில் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.






