என் மலர்
வேலூர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி எழிலரசி (வயது40). கோபாலகிருஷ்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
எழிலரசி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி எழிலரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வேலை செய்து வந்த அதே வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் 21-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஒரு மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முகம் சுழிக்காமல் கனிவாக பேசி சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் எழிலரசி கொரோனாவுக்கு பலியான சம்பவம் அவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 5 டாக்டர்கள் 5 நர்சுகளுக்கு தொற்று பாதித்துள்ள சம்பவம் ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் மருத்துவத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த கர்ப்பிணி டாக்டர் கார்த்திகா கொரோனாவுக்கு நேற்று பலியானார். இந்த நிலையில் இன்று குடியாத்தம் நர்சு கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
முன்கள பணியாளர்கள் கொரோனாவுக்கு பலியாகும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் ஒரேநாளில் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 595 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 544 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 300 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனா பாதித்த 544 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 680 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்தனர். 3,880 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா 2-வது அலை பாதிப்பினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 15 பேர் இறந்து போனார்கள்.
இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 3 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என்று மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தமிழக அரசால் தினமும் மாவட்ட வாரியாக வெளியிடப்படும் கொரோனா பாதிப்பு, இறப்பு, சிகிச்சை பெறும் நபர்களின் தகவலில் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 31 பேர் கொரோனாவுக்கு இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் கொரோனா தொற்று உயிரிழப்பும், தமிழக அரசின் தொற்று உயிரிழப்பு தகவலும் தினமும் மாறுபட்டதாக காணப்படுகிறது. இந்த குழப்பத்தை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13), லோகேஷ் (15). அங்குள்ள தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம் வகுப்பு, லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்தனர்.
கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடப்பதால் ஹேமச்சந்திரன் மற்றும் அவரது அண்ணன் லோகேஷ் இருவரும் செல்போனில் பாடம் படித்து வந்தனர்.
சிவக்குமாருக்கு ஊரில் ஒரு வீடும். நிலத்தில் ஒரு வீடும் உள்ளது. அண்ணன்-தம்பி இருவரும் நிலத்தில் உள்ள வீட்டில் ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். மீதி நேரத்தில் இருவரும் ஒரே செல்போனில் ஆன்லைனில் கேம் விளையாடி வந்தனர்.
நேற்று மாலை 4 மணிக்கு 2 பேரும் ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டில் இருந்த கயிரை எடுத்து ஹேமச்சந்திரன் வெளியிலுள்ள அறையிலும், லோகேஷ் உள்ளே இருந்த அறையிலும் தூக்கு மாட்டிக்கொள்வதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது ஹேமச்சந்திரன் உடனடியாக தூக்கில் தொங்கி இருக்கிறார்.இதனால் கழுத்து வலி தாங்கமுடியாமல் சத்தம் போட்டான். உடனே பக்கத்து அறையில் இருந்த லோகேஷ் ஓடிவந்து தம்பியை காப்பாற்ற முயற்சி செய்தான். மேலும் இது குறித்து தாய் ஜமுனாவுக்கு லோகேஷ் போனில் தகவல் தெரிவித்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து தூக்கில் தொங்கிய ஹேமச்சந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை டாக்டர் பரிசோதனை செய்ததில் ஹேமச்சந்திரன் இறந்துவிடடது தெரியவந்தது. தம்பியை காப்பாற்ற வந்ததால் லோகேஷ் உயிர் தப்பியுள்ளார்.
அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான கொரோனா பரிசோதனை முடிவில் மாவட்டம் முழுவதும் 595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள் இரும்பு தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் உள்ள பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும் என்றும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 158 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 71 பேரும், கிராம பகுதியில் 78 பேரும், பேரூராட்சி பகுதியில் 9 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டபோதிலும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று அறிகுறி இல்லாதவர்களும், பாதிப்பு குறைவாக உள்ளவர்களும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
நேற்று வெளியான முடிவில் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. சில நாட்களாக 700-ஐ தாண்டிய பாதிப்பு நேற்று சற்று குறைந்துள்ளது.
பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாவும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டு தனிமையில் உள்ளார்.
போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 82 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 60 பேரும், கிராமப்பகுதியில் 20 பேரும், பேரூராட்சி பகுதியில் 2 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கே.வி.குப்பம் தாலுகாவில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் ஒட்டலில் இருந்து கொட்டப்படும், உணவுகளையும், கடைவீதியில் வீசப்படும் பண்டங்களையும் சாப்பிடுகின்றன. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லாததால் உணவு கழிவுகள் கொட்டுவதில்லை, டீக்கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் தெரு நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.
விலங்குகள் நல அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் தெரு நாய்களுக்கு உணவு வழங்க கால்நடைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தொண்டு நிறுவனத்தினர் தினமும் சமையல் செய்து அவற்றை பார்சலாக கட்டி பகுதி வாரியாக தெருத்தெருவாக சென்று தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் தெரு நாய்களுக்கு உணவு வழங்க உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி வேலூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ப்ளூ கிராஸ் தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் உணவு சமைத்து நாய்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா முழு ஊரடங்கு காரணமாக வேலூர் கோட்டை மூடப்பட்டதால் குதிரைகளை வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்களது குதிரைகளுக்கு தீவனம் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
வேலூர் மிருகவதை தடுப்பு சங்க துணை தலைவர் அனுஷாசெல்வம் குதிரைகளுக்கு 175 கிலோ கால்நடைதீவனமும், குதிரை தொழிலாளர்களுக்கு 25 கிலோ அரிசியும் வழங்கினார்.
இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்:-
வேலூரில் வாழ்வாதாரம் இழந்த குதிரை தொழிலாளர்களுக்கு அரிசியும், அவர்கள் வளர்க்கும் குதிரைகளுக்கு கால்நடை தீவனமும் வழங்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக தெருநாய்கள் உணவின்றி தவிப்பதால் அவைகளுக்கு உதவ விருப்பம் உள்ளவர்கள் கால்நடைத்துறை அலுவலகத்தை 94450 01131 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
வேலூர்:
வேலூரை சேர்ந்த கால்நடைத்துறை டாக்டர் ரவிசங்கர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
அதன்படி கொரோனா பாதித்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு 3 வேளையும் உணவுகள் வழங்கி வருகிறார். சில தன்னார்வலர்களும் அவருடன் இணைந்து வீடு தேடி சென்று உணவு வழங்கும் பணியை செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு டாக்டர் ரவிசங்கரை ஒரு பெண் தொடர்பு கொண்டு காட்பாடி தாராபடவேடு பகுதியில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த மூதாட்டிக்கு உணவு வழங்கி உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தார். அதன்படி டாக்டர் அந்த மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கி வந்தார். இந்த நிலையில் அந்த மூதாட்டி டாக்டரை சந்தித்து நன்றி கூறவேண்டும் என அந்த தன்னார்வலரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அறிந்த டாக்டர் அந்த மூதாட்டியை சந்திக்க சென்றார். அப்போது குடிசை வீட்டில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடக்கமுடியாமல் இருந்தார்.
அந்த மூதாட்டிக்கு உணவு அளித்த டாக்டர், பாட்டி ஏன் முககவசம் அணியாமல் இருக்கிறீர்கள்... கவனமாக இருங்கள்... என்று கூறினார்.
அப்போது அந்த மூதாட்டி கண்ணீருடன் எனக்கு கொரோனா இல்லபா.. எனது மகள் தான், உனக்கு தினமும் சாப்பாடு வழங்க ஆட்கள் வருவார்கள்.... அவர்களிடம் கொரோனா உள்ளது என்று கூறு... அவ்வாறு கூறினால் தான் உனக்கு சாப்பாடு கிடைக்கும் என்று கூறிவிட்டு சென்றார்.
எனக்கு தினமும் உணவளித்த உங்களுக்கு மிகவும் நன்றி. எனது நன்றியை தெரிவிக்கவே தங்களை பார்க்க ஆசைப்பட்டேன் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
அதில், அவரை தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறிய பெண் அந்த மூதாட்டியின் மகள் என்றும், அவரால் தனது தாயாரை கவனிக்க முடியவில்லை என்பதால் உணவளிக்க இவ்வாறு பொய் கூறி உள்ளார் என்றும் தெரியவந்தது.
மக்களின் உயிரை குடிக்கும் கொரோனா, மறைமுகமாக ஒரு மூதாட்டியை உயிர் வாழ வைத்துள்ள சம்பவம் காட்பாடியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
கொரோனா தொற்று பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை வீடு, வீடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,090 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஜூன்) 2-வது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி இருக்கும் என்று மருத்துவக்குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய பாதிப்பு நிலவரத்தை பார்க்கும் போது வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதை கட்டுப்படுத்தவும், பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கு மேல் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களே. மாவட்டத்தின் கிராம பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள தெருக்கள் இரும்பு தகடுகள் வைத்து மூடப்படுகின்றன. இந்த தெருக்களில் உள்ள பொதுமக்கள் வெளியே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் ஆயிரத்தை கடந்துள்ளதால் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
காட்பாடி தாலுகாவில் நேற்று மட்டும் 239 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் 145 பேரும், கிராம பகுதியில் 79 பேரும், பேரூராட்சி பகுதியில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கே.வி.குப்பம் தாலுகாவில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
குடியாத்தம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வெளியான முடிவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-அலை பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய பரிசோதனையின் முடிவில் ஒரேநாளில் புதிய உச்சமாக 1,090 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்று பாதித்த நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவினால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 18 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என்று மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் தமிழக அரசால் தினமும் மாவட்ட வாரியாக வெளியிடப்படும் கொரோனா பாதிப்பு, இறப்பு, சிகிச்சை பெறும் நபர்களின் தகவலில் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவுக்கு இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களிடம் அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் ஒரேநாளில் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்காரணமாக 36 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவுக்கு பலியாகவில்லை என்று தெரிவித்தனர்.
தினசரி கொரோனா இறப்பு குறித்த தகவலை முழுமையாக வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயபடுத்தபட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து இபாஸ் அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் ஆந்திராவில் தமிழக எல்லை வரை வாகனங்களில் வரும் பொதுமக்கள் வேலூருக்கு நடந்து வர தொடங்கியுள்ளனர்.
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து தமிழகத்திற்குள் வருகின்றனர். இதே போல தமிழகத்தில் இருந்தும் கிறிஸ்டியான்பேட்டை வழியாக ஆந்திரப் பகுதிக்கு நடந்து செல்கின்றனர்.
ஆந்திராவில் இருந்து நடந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கின்றனர். எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் அவர்களின் முகவரி பதிவு செய்யப்படுகிறது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.
அவர்களுடைய முழு விபரமும் சேகரிக்கப்படுகின்றன.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயின் அரவணைப்பில் இருந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். முதியவர் அவரது குடும்பத்தினருக்கு பணம் மற்றும் பொருள் உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் அவரது தாய் இல்லாத போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
நேற்று முன்தினம் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று அங்கு நடத்திய விசாரணையில் 75 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (பொறுப்பு) போக்சோவில் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.






