என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவுக்கு ஒரே நாளில் 36 பேர் பலி? - தமிழக அரசின் தகவலால் பொதுமக்கள் குழப்பம்

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 36 பேர் பலியானதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-அலை பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய பரிசோதனையின் முடிவில் ஒரேநாளில் புதிய உச்சமாக 1,090 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்று பாதித்த நபர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனாவினால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 18 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என்று மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் தமிழக அரசால் தினமும் மாவட்ட வாரியாக வெளியிடப்படும் கொரோனா பாதிப்பு, இறப்பு, சிகிச்சை பெறும் நபர்களின் தகவலில் வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவுக்கு இறந்து போனதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களிடம் அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையையும் ஒரேநாளில் பதிவேற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்காரணமாக 36 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 36 பேர் கொரோனாவுக்கு பலியாகவில்லை என்று தெரிவித்தனர்.

    தினசரி கொரோனா இறப்பு குறித்த தகவலை முழுமையாக வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×