search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கார்டு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ரேஷன் கார்டு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு ரேஷன் கார்டு வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

    ரேஷன்கார்டு வழங்கக்கோரி பொதுமக்கள் வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, பாகாயம், சின்னஅல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் புதிய ரேஷன்கார்டுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்த நிலையில், கடந்த 5-ந் தேதி ரேஷன்கார்டுக்கு விண்ணப்பித்த நபர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில், உங்களின் புதிய ரேஷன் கார்டு தயாராக உள்ளது. அவற்றை வட்ட வழங்கல் அலுவலகத்தில் சென்று பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதையடுத்து அவர்கள் கடந்த வாரம் வேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் சென்று குறுந்தகவலை காண்பித்து புதிய ரேஷன்கார்டு தரும்படி கூறினர். அதற்கு வழங்கல் அலுவலக ஊழியர்கள், புதிய ரேஷன் கார்டுகளை சர்வரில் இணைத்து செயல்பாட்டிற்கு கொண்டுவரும் பணி நடந்து வருகிறது. எனவே 10-ந் தேதி காலை வந்து ரேஷன் கார்டை பெற்று கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.

    அதன்படி நேற்று வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன்கார்டு பெறுவதற்காக வந்தனர். அவர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் ரேஷன் கார்டு கேட்டதற்கு, ரேஷன்கார்டு தயாரானவுடன் செல்போனில் அழைப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் உடனடியாக ரேஷன்கார்டு வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு வேலூர்-ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தாலுகா அலுவலக வளாகத்துக்கு அழைத்து சென்றனர். அதையடுத்து பொதுமக்கள் ரேஷன் கார்டு தரக்கோரி வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரின் ஆலோசனையின்பேரில் அங்கிருந்த 250 பேருக்கும் உடனடியாக ரேஷன்கார்டு வழங்கப்பட்டது. ஓரிருநாளில் அவை செயல்படுத்தப்படும் என்றும், மீதமுள்ள 590 பேருக்கும் புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×