என் மலர்tooltip icon

    வேலூர்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்திலுள்ள 211 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ேகார்ட்டு தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.

    இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அரசாணையை வெளியிட வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்

    வேலூர்:

    ராணுவ ஓய்வூதிய கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ராணுவ ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை சம்பந்தமாக ராணுவ ஓய்வூதிய அதிகாரிகள் மூலமாக விளக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூர் கோட்டை பின்புறம் உள்ள காவலர் நல வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இதில் முப்படை ராணுவ ஓய்வூதியம் பெறும் வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் சார்தோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை நெல்சன் அந்தோணி தெரிவித்துள்ளார்.

    • கணவருடன் தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் கேசவபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவருடைய மனைவி சந்தியா (27) தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    மணிவண்ணன் வேலூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் கீர்த்திகா (2) சில மாதங்களுக்கு முன்பு மணிவண்ணன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

    இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் தகராறு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து மணிவண்ணன் வெளியே சென்று விட்டார். அவரது பெற்றோரும் நிலத்திற்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் சந்தியா அவரது மகள் கீர்த்திகாவை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரும் தூக்கில் தொங்கினார்.

    வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிவண்ணன் குழந்தை பிணமாக வும், மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். சந்தியாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலூர் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    மணிவண்ணனின் தங்கை அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சந்தியாவிற்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக சந்தியா மணிவண்ணன் தம்பதிய இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த சந்தியா 2 வயது மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் வரவில்லை என குற்றச்சாட்டு
    • குறைகளை கேட்காமல் எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நடைபெற்றது.

    மேலும் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் தேவை எனவும் கடந்த 6 மாதமாக நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் நிரந்தரமான செயலாளர் இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இதனால் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் தோய்வில் உள்ளதாகவும், இதனை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்று பார்த்து வருவதாகவும், மேலும் இதனால் பணிகள் முழுதுமாக பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    எனவே இந்த மாதத்திற்க்குள் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை எணில் வருகின்ற மே மாதம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் அதே ஊராட்சியில் பணியாற்றி வரும் வருவாய்துறை அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் என யாரும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் நாங்கள் என்ன தீர்மானம் வைக்க போறோம் என்பதை தெரியாமல் எங்கள் குறைகளை எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசமாக ஊர் பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
    • அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார். இவருக்கும் அணைக்கட்டு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன் கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம் அணைக்கட்டு மத்திய ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கடந்த 13-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான வெங்கடேசன், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர் நீர்நிலை ஏரியில் மணல் எடுத்தனர்.

    இதை எதிர்த்ததால் கொன்று ஏரியில் புதைப்பதாக மிரட்டல் விடுத்தனர். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அணைக்கட்டு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களமிறங்கியுள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கெங்கநல்லூர் கிராம பஞ்சாயத்து தலைவர் என்.செந்தில் குமாரை, சாதி பெயரை சொல்லி திட்டிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    எஸ்.சி, எஸ்.டி, சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிய அந்த போஸ்டரில், தி.மு.க.வினர் செந்தில் குமாருக்கு எதிராக பயன்படுத்திய அதே தகாத வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த ஒரு நாள் கழித்து, கலெக்டர் கெங்கநல்லூருக்கு வந்து, கிராமம் மற்றும் ஏரியை ஆய்வு செய்தார். இதையடுத்து 3 பேரும் என்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர் என்றார்.

    அணைக்கட்டு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இந்த திடீர் மோதல் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, துணை தலைவர் அருண்முரளி, ஒன்றிய பொறியாளர்கள் புவியரசன், குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலகம் மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் பேசிய உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ்- குடும்பத் தலைவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க பட்ஜெட்டில் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ், ஆனால் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

    தலைவர் சத்யானந்தம் பேசுகையில்:-

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவு நெசவாளர்கள் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் ஆகவும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 700 யூனிட்டிலிருந்து ஆயிரம் யூனிட்டாக இலவச மின்சாரத்தை உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து உறுப்பினர் சுரேஷ்குமார்-பேசுகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் பலத்த சூறாவளி உடன் கனமழை பெய்தது இதில் ஏராளமான மரங்களும், வாழை, தென்னை, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைந்தது வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொடங்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண்மை துறையினர் சரிவர வரவில்லை, வருவாய்த்து றையினர் வரவில்லை என குற்றச்சாட்டு உள்ளது விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

    உறுப்பினர் குட்டி வெங்கடேசன் ராமாலைப் பகுதியில் சுடுகாட்டு வசதி செய்து தர வேண்டும், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெருமளவு கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    பள்ளியில் மேலாண்மை குழு உள்ளது என்ன செய்கிறார்கள் காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதும் போது எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என கண்காணித்திருக்க வேண்டும், ராமாலைப் பகுதிக்கு காலை, மதியம், மாலை டவுன் பஸ் வந்தது தற்போது சரிவர பஸ் வருவதில்லை இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    உறுப்பினர் மனோகரன் பேசுகையில்:-

    60 வயது மேற்பட்ட வர்களுக்கு முதியோர் உதவித்தொகை சரியா னபடி கிடைக்கவில்லை வயது குறைவான வர்கள் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர், அக்ரஹாரம் பகுதியில் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    உறுப்பினர் ரஞ்சித்குமார் பேசுகையில்:-

    அணக்காநல்லூர் பகுதியில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. பிடித்து காட்டில் விட வேண்டும் மேலும் செம்பேடு கூட்ரோடு முதல் உள்ளி பாலம் வரை உள்ள பாதை மிகவும் பழுதடைந்துள்ளது, உள்ளி தார்சாலையும் மிகவும் பழுதடைந்துள்ளது, கூடநகரம் ஏரி கரைப்பகுதியில் விடுபட்ட சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். இதே போல் கவுன்சிலர்கள் கவுரப்பன், தீபிகாபரத், இமகிரிபாபு, இந்திராகாந்தி உள்பட பலர் பேசினார்.

    தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை வழங்கி கொசுக்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • ரூ.30 கோடி மதிப்புள்ளது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமாக குடியாத்தம் அடுத்த செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள பயணியர் விடுதிக்கு பின்புறம் சுமார் 6 ஏக்கர் இடம் உள்ளது.

    குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 1983-ம் ஆண்டு நகராட்சி சார்பில் செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள பயணியர் விடுதி அருகே 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

    அதில் ஒரு பகுதி நகராட்சி பணியாளர்களுக்காக 63 மனைகளாக பிரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு அந்த வீட்டு மனைகளை நகராட்சி பணியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.மீதியிடம் நகராட்சி பயன்பாட்டிற்காக அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு தனிநபர் ஒருவர் நகராட்சிக்கு சொந்தமான அந்த 6 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என குடியாத்தம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தம் என தீர்ப்பு

    இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்களையும் கோர்ட்டு கேட்டு வந்தது. இந்த வழக்கில் நகராட்சி சார்பாக நகராட்சி மற்றும் அரசு வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார், அரசு வழக்கறிஞர் கே. லோகநாதன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக குடியாத்தம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜநந்திவர்மசிவா அளித்த தீர்ப்பில் இந்த 6 ஏக்கர் இடம் நகராட்சிக்கு சொந்தமானது என தீர்ப்பு வழங்கினார். 15 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து நகராட்சி வழக்கறிஞரும் அரசு வழக்கறிஞருமான எஸ். விஜயகுமாரை குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.

    நகராட்சிக்கு சொந்தமான இடம் என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த இடம் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ளது என கூறப்படுகிறது.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அணைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 47). கட்டிடம் மேஸ்திரி.

    நேற்று சென்னை சென்ற அவர் இரவு ஊருக்கு வருவதற்காக வேலூர் வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு பஸ் வேலூர் கிரீன் சர்க்கிளை கடந்தது.

    அப்போது அசோக் குமார் பஸ்சில் இருந்து சீக்கிரம் இறங்க வேண்டும் என்பதற்காக அவரது பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக படிக்கட்டு அருகே வந்தார்.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வளைவில் பஸ் திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அசோக்குமார் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • ஜாக்டோ ஜியோ காட்பாடி வட்ட உயர்மட்ட குழு தீர்மானம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது.

    மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன்ன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் ஆர்.கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்-24-ந் தேதி வேலூர் காந்திசிலை, அணைகட்டு, பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்பாடி, குடியாத்தம், தாசில்தார் அலுவலகம் அருகில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    • சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என புகார்
    • உரங்களை பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு தாலுகா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

    வேளாண்மை துறை, வனத்துறை, மின்வாரியத்துறை, கால்நடைதுறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார்.

    கூட்டம் தொடங்கியவுடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எழுந்து பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சாரங்கல் பகுதியில் யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து பல கூட்டங்களில் கூறியும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வனச்சரக அதிகாரி வருவதில்லை. யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதில்லை என விவசாயிகள் கூறினர்.

    அதனை தொடர்ந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஓரிரு நாளில் பேரணாம்பட்டு பகுதி விவசாயிகள் பிரச்சனை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று வனத்துறையினரை அழைத்து யானைகள் விலை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க எடு க்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என கூறினார்.

    இதில் சமரசம் அடைந்த விவசாயிகள் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மேல்பட்டி பகுதியில் வாரச்சந்தைக்கு உள்ள இடத்தில் கடைகள் அமைக்காமல் சாலையில் கடைகள் அமைப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கிறது வார சந்தையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் அமைக்க வேண்டும் என்றனர்.

    2 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளியுடன் பெய்த கனமழைக்கு வாழை தென்னை நெல் உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது .

    வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக உரிய கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாமரங்களில் மாங்காய் காய்க்கும் சீசன் என்பதால் தற்போது பூச்சிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக வேளாண்மை துறை அதிகாரிகள் பிரச்சினை குறித்து தனி கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    விவசாயிகள் தங்களின் நிலத்திற்கு தேவையான உரங்களை பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்தனர். அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் வெங்கட்ராமன் உறுதி அளித்தார்.

    • 26-ந்தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.

    விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 2-ந் தேதி நடக்கிறது.

    இதனையொட்டி நேற்று கோவில் அலுவலக வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார். அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் சுதா, குமார், ராமலிங்கம். ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஸ்ரீதரன் வரவேற்றார். கூட்டத்தில் வியாபாரிகள் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தேர் செல்லும் கிழக்குத் தேரோடும் வீதி, வடக்கு தேரோடும் வீதி, ஆகிய சிமெண்டு சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை சீரமைக்க வேண்டும். இரு புறமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி தேர் செல்வதற்கு இடையூறு இல்லாமல் பணிகளை முடிக்க வேண்டும். தேர் காலை 9 மணி புறப்பட்டு தேர் நிலை நிறுத்தும் செய்யும் வரை தீயணைப்பு வீரர்கள் உடனிருந்து பாதுகாப்பு செய்து கொடுக்க வேண்டும், மருத்துவ வசதிகள், 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா செல்லும்போது இடையூறாக உள்ள மின் கம்பிகளை அப்புறப்படுத்தி கொடுத்தல் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் தினசரி சுவாமி வீதி உலாவின் போது உடனிருந்து மின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது,.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சி.நித்யா ஆய்வாளர் சுரேஷ்குமார், கோயில் செயல் அலுவலர் கோ ஸ்ரீதரன், மற்றும் வணிகர்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் வினோலியா முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் துர்காதேவி வரவேற்று பேசினார்.

    பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி பேசியதாவது:-

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமானது, உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர ஈ.வே.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் மொத்தம் 195 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், பட்டப்படிப்பு படிக்காத பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மொத்தம் ரூ.85 ஆயிரத்து 25 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் முதன் முதலில் 8-ம் வகுப்பு படித்த பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் படிப்படியாக திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. தற்போது பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தீட்டப்பட்டு மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அரசு பெண்களுக்காக பல உரிமைகளை வழங்கி யுள்ளது சொத்துரிமை குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் அவர்க ளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பணியில் கூட 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

    இந்தத் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×