என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000 வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்தார். இதில் உயர வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோர் வசிக்க ஏற்ற வகையில் அரசு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். 

    சிறப்பு கவனம் செலுத்தி இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரவேண்டும். மாதாந்திர உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.3000 வழங்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் உணவு வசதியுடன் கூடிய சிறப்பு தங்கும் விடுதிகள் கட்டித்தர வேண்டும். அரசு பஸ்களில் மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயண வசதி வழங்கிட வேண்டும்.

    கேலி, கிண்டல் செய்வதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரங்களை செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஹரிஹர பாக்கம் கிராமம் பள்ளி கூட தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.

    இவருடைய மனைவி தேவகி (45) இவர்களுக்கு ரம்யா, சந்தியா என்ற 2 மகள் உள்ளனர். பூங்காவனத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடிக்கப் பணம் கேட்டபோது இவருடைய மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷ மருந்து சாப்பிட்டு மயக்கமான நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு அர்ப்பணித்தார்.
    திருவண்ணாமலை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சாமி தரிசனம் செய்த அவர் கோவில் வளாகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார். பின்னர் சாமியை தோளில் சுமந்து சென்று தங்க ரதத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தல மரக்கன்று நட்டார்.

    ஓதுவார் பயிற்சி பள்ளியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்து தலமர கன்று நட்ட காட்சி. அருகில் துணை சபாநாயகர் பிச்சாண்டி உள்ளார்.


    பின்னர் கோவில் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவ முதலுதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கடியில் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருக்கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பது கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி, கோவில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


    ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    ஆரணி:

    தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி உயர் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தேவிகாபுரம் சாலையில் உள்ள ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் தணிக்கை குழுவினர் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது வங்கியில் கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கவரிங் நகைகளை 70 பேரின் பெயரில் ரூ.2 கோடியே 39 லட்சத்திற்கு நகை கடன் பெற்றதாக மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

    சஸ்பெண்டு

    இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக ஆரணி கூட்டுறவு நகர வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆரணி கூட்டுறவு நகர வங்கியின் மேலாண்மை இயக்குனர் கல்யாண்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் ஊழியர்கள் சரவணன், ஜெகதீஸ் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    கீழ்பென்னாத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள இலுப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 35), பெயிண்டர்.

    திருவண்ணாமலையில் உள்ள உறவினரை பார்க்க நேற்று செந்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்மந்தனூர் கூட்ரோடு அருகே சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சைக்கிளில் சென்றவர் மீது மோதாமல் இருக்க ‘பிரேக்’ போட்டுள்ளார். இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் திருமால் (வயது28). இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு ஏரி குப்பத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கம்பெனிக்கு பைக்கில் திருமால் சென்றார்.

    ஏரிக்குப்பம் கூட்ரோடு அருகில் முன்னே சென்ற நடுகுப்பம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசர் சரவணன் புல்லட் மீது திருமால் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த படுகாயமடைந்த திருமால் மற்றும் லேசான காயமடைந்த சரவணன் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருமால் வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாமில் ஒரே நாளில் 18,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1075 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. கண்காணிப்புக்குழு அலுவலர்கள் முகாம் வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் குறித்து கண்டறிந்து அவர்களை தடுப்பு முகாமுக்கு அழைத்து வந்தனர்.

    ஊராட்சி ஒன்றியம் பெரியக்கோளப்பாடி அரசு தொடக்கப் பள்ளியிலும், கண்ணகுருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் ஒரே நாளில் 18,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தது. இந்த நிலையில் திடீரென கரையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

    அதன்பின்னர் நள்ளிரவு நீண்ட நேரம் பலத்த இடி சத்தத்துடன் மழை பெய்தது. இதனால் மின் இணைப்புகள் 2மணி நேரத்திற்கு மேல் துண்டிக்கப்பட்டது. மழை குறைந்த பின்னர்தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த மழை காரணமாக திருவண்ணாமலை பகுதியில் மட்டும் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது.அதனை வடிவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள குளம் குட்டைகள் ஏரிகள் நிரம்பி வருகின்றன. அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தது. இந்த நிலையில் திடீரென கரையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள பொதுமக்களை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    பள்ளிகொண்டாபட்டு தரைப்பாலம் ஏரி தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் 98 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    அணைகள் விரைவில் முழு கொள்ளளவை அடையும் சூழ்நிலையில் உள்ளன. தற்போது சாத்தனூர் அணையில் 97.45 அடி தண்ணீரும், குப்பநத்தம் அணையில் 57.07தண்ணீரும் மிருகண்டா அணையில் 87.23 அடி தண்ணீரும், செண்பகதோப்பு அணையில் 54.19 அடி தண்ணீரும் உள்ளன. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு1,680 கனஅடி தண்ணீர் வருகிறது . அதனை அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.

    இதேபோல் குப்பநத்தம் அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வருகிறது. அதனையும் வெளியேற்றி வருகின்றனர். செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வருகிறது. அதனையும் வெளியேற்றி வருகின்றனர். மிருகண்டா அணைக்கு வினாடிக்குஅணைக்கு 18 கன அடி தண்ணீர் வருகிறது. அதனை சேமித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே கணவனுடன் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ. நம்மியந்தல் கிராமத்தில் திருக்கோவிலூரை அடுத்த அதண்டமருதூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, அவரது மனைவி செல்வராணி (வயது27) ஆகியோர் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கணவன் -மனைவி இருவரும் மருந்து வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்துவிட்டு திரும்பிச் சென்றனர். அவர்கள் எஸ்.கே.பி.கல்லூரி அருகில் சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏழுமலை அருகில் சென்று உள்ளார்.

    அப்போது தனியே நின்ற செல்வராணியிடம் மர்மநபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.

    இதுபற்றி செல்வராணி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இந்த முகாம்களில் 1 லட்சம் மக்கள் வரை தடுப்பூசி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் சிக்கன், மட்டன் சாப்பிடும் அசைவபிரியர்கள் தடுப்பூசி செலுத்தாமல் தவிர்த்து வருவதாக தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இதுவரை பல தடுப்பூசி முகாம்கள் நடந்து விட்டதால் இன்று நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு குறைந்த அளவிலான மக்கள் வருகை தந்தனர். சில முகாம்களில் நீண்ட நேரத்துக்கு பின்னர் ஓரிருவர் மட்டும் வருகை தந்தனர்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் வேங்கிக்கால், ஆடையூர், அத்தியந்தல், பண்டிதபட்டு, ஆணாய் பிறந்தான் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் இன்று காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது. திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் இன்று 23-முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    அத்தியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை செவிலியர் மேரி ஆஷா கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினார். இந்த ஊராட்சியில் இதுவரை தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மேலும் வாக்காளர் பட்டியலை வைத்தும் ஊசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக கிரிவலப்பாதையில் வசிக்கும் சாமியார்களுக்கும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று நேற்றே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் சாமியார்களும் இந்தமுகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    திருவண்ணாமலை அருகே கத்தியை காட்டி மிரட்டி கணவனுடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோ. நம்மியந்தல் கிராமத்தில் திருக்கோவிலூரை அடுத்த அதண்டமருதூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, அவரது மனைவி செல்வராணி (வயது27) ஆகியோர் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று இரவு கணவன் -மனைவி இருவரும் மருந்து வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கு பைக்கில் வந்துவிட்டு திரும்பிச் சென்றனர். அவர்கள் எஸ்.கே.பி.கல்லூரி அருகில் சென்றபோது ஏழுமலை மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பகுதிக்கு சென்றார்.

    அப்போது தனியே நின்ற செல்வராணியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டான்.

    இதுபற்றி செல்வராணி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை பகுதியில் வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 37).

    இவர் கடந்த 18-ந் தேதி தனது குடும்பத்துடன் ராந்தம் கிராமத்தில் உள்ளது. அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அன்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அரிகிருஷ்ணன், லட்சுமிபதி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கொள்ளைச் சம்பவத்தில் நடந்த வீட்டில் கிடைத்த கைரேகையை ஒப்பிட்டு பார்த்ததில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் தனிப்படையினர் திருவண்ணாமலையில் உள்ள எடப்பாளையம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலு (37) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் தெங்கால் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (39) என்பது தெரியவந்தது. அவர்கள் கிருஷ்ணகுமார் வீட்டிலும், மங்களம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தெள்ளாந்தல் கிராமத்திலும் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 32 பவுன் நகைகள் மற்றும் ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×