search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏந்தல் ஏரி உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X
    ஏந்தல் ஏரி உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    திருவண்ணாமலையில் தொடர் மழை: ஏந்தல் ஏரி உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தது. இந்த நிலையில் திடீரென கரையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

    அதன்பின்னர் நள்ளிரவு நீண்ட நேரம் பலத்த இடி சத்தத்துடன் மழை பெய்தது. இதனால் மின் இணைப்புகள் 2மணி நேரத்திற்கு மேல் துண்டிக்கப்பட்டது. மழை குறைந்த பின்னர்தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த மழை காரணமாக திருவண்ணாமலை பகுதியில் மட்டும் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது.அதனை வடிவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள குளம் குட்டைகள் ஏரிகள் நிரம்பி வருகின்றன. அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தது. இந்த நிலையில் திடீரென கரையில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள பொதுமக்களை அதிகாரிகள் மீட்டு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    பள்ளிகொண்டாபட்டு தரைப்பாலம் ஏரி தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் மாவட்டம் முழுவதும் 98 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    அணைகள் விரைவில் முழு கொள்ளளவை அடையும் சூழ்நிலையில் உள்ளன. தற்போது சாத்தனூர் அணையில் 97.45 அடி தண்ணீரும், குப்பநத்தம் அணையில் 57.07தண்ணீரும் மிருகண்டா அணையில் 87.23 அடி தண்ணீரும், செண்பகதோப்பு அணையில் 54.19 அடி தண்ணீரும் உள்ளன. சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு1,680 கனஅடி தண்ணீர் வருகிறது . அதனை அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.

    இதேபோல் குப்பநத்தம் அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வருகிறது. அதனையும் வெளியேற்றி வருகின்றனர். செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி தண்ணீர் வருகிறது. அதனையும் வெளியேற்றி வருகின்றனர். மிருகண்டா அணைக்கு வினாடிக்குஅணைக்கு 18 கன அடி தண்ணீர் வருகிறது. அதனை சேமித்து வருகின்றனர்.
    Next Story
    ×